செவ்வாய், 26 டிசம்பர், 2017

காஞ்சி சங்கர மடத்தில் அதிகார போட்டி அதிமுகவை மிஞ்சிய கழுத்தறுப்பு ... சின்ன பெரியவாள் குருப் புல் கியரில்

நக்கீரன் : காஞ்சி மடத்துக்குள் பெரியவா-சின்னவா மோதல்கள் மீண்டும் வலுத்து வருகின்றன. சங்கரமடத்தின் முழுமையான அதிகாரம், நிர்வாகம், சொத்துகள் அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர... ஜெயேந்திரருக்கு எதிராக கச்சைக்கட்டி வருகிறார் விஜயேந்திரர். இதற்காக, ஜெயேந்திரருக்கு பைத்தியக்காரர் பட்டம் கட்டியும், உடல்நிலை மற்றும் வயோதிகத்தைக் காரணம் காட்டியும் அவரை ஓய்வு கொள்ளவைக்க பல்வேறு முயற்சிகள் சில வருடங்களாக மடத்துக்குள் நடந்து வருகின்றன. தவறான மருந்துகளை அவருக்கு கொடுப்பதும் நடக்கின்றன எனக் குற்றச்சாட்டு கிளம்புகிறது. இவைகளை அவ்வப்போது  அம்பலப்படுத்தியிருக்கிறது நக்கீரன். >இதனால் சில மாதங்களாக ஜெயேந்திரருக்கு எதிரான சதிகள் அமுங்கிக்கிடந்த நிலையில், கடந்த வாரம் திருப்பதி சென்ற அவருக்கு ஏற்பட்ட அவமானம் காஞ்சி மடத்துக்குள் பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து மடத்தின் முக்கியஸ்தர்களிடம் நாம் விசாரித்தபோது, ""காஞ்சி சங்கரமடத்துக்குச் சொந்தமாக திருப்பதியிலுள்ள மடம் உள்ளிட்ட பல சொத்துகளை, சென்னப்புரி அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் நிர்வகித்து வருகிறார் ஜெயேந்திரரின் சகோதரர் ராமகிருஷ்ணன்.


திருப்பதிக்கு வரும் காஞ்சி மடாதிபதிகள் இந்த மடத்தில் தங்குவது வழக்கம். ஜெயேந்திரர் திருப்பதிக்கு வருவதாக இருப்பின், மடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள அவரது அறையை முழுமையாக சுத்தப்படுத்தவும், அவருக்குத் தேவையான உணவுகளை தயார்ப்படுத்தவும் அவரது வருகையும் முன்கூட்டியே மடத்தின் மேலாளருக்கு காஞ்சியிலிருந்து தெரிவிக்கப்படும். அதன்படி, திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக கடந்த வாரம் திருமலைக்குச் சென்றார் ஜெயேந்திரர். அவரது வருகையை மடத்தின் மேலாளர் வாஞ்சரி ஆதித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏழுமலையானை தரிசித்துவிட்டு மடத்துக்குச் சென்றார் ஜெயேந்திரர். இரண்டாம் மாடியிலுள்ள அறைக்கு செல்ல அவர் முயற்சித்தபோது "லிப்ட்' வேலை செய்யவில்லை. அதனை சரி செய்ய உத்தரவிட்டபோதும் மேலாளர் ஆதித்யா அக்கறைக்காட்டவில்லை. தனது  அறையில் ஓய்வு எடுக்க அவர் நினைத்தபோதும் அதற்கும் அனுமதிக்கவில்லை. இதனால் ஒன்னரை மணி நேரம் காரிலேயே உட்கார்ந்திருந்தார் ஜெயேந்திரர். அவரது உதவியாளர்கள் இரண்டாம் மாடிக்குச் சென்று ஜெயேந்திரர் அறையைப் பார்த்தபோது, சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது. அவருக்கான பிரத்யேக கிச்சனுக்கு சென்று உதவியாளர்கள் பார்த்தனர். ஜெயேந்திரருக்குத் தேவையான உணவுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. அமானுஙஷயமாகக் கிடந்தது கிச்சன்.

இதனை ஜெயேந்திரரிடம் உதவியாளர்கள் தெரிவிக்க, கோபமடைந்தார். அவமானத்தில் கூனிக் குறுகினார். கீழ்த்தளத்திலிருந்த கிச்சனை பயன்படுத்தி அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர்கள் முயற்சித்தபோதும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், "எனக்கு பிச்சை போடுறீங்களா?' என கோபமாக குரல் எழுப்பிய ஜெயேந்திரர், மடத்தின் சாவியையும் நிர்வாகத்தையும் தனது பக்தர் குல்பர்ஹா சங்கரிடம் ஒப்படைத்து, "நிர்வாகத்தை மாற்றியிருப்பதற்கு காஞ்சி மடத்திலிருந்து முறைப்படி உனக்கு கடிதம் வரும்' என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.

ஜெயேந்திரரின் சகோதரர் ராமகிருஷ்ணனுக்கு சில ஆசைகளைக் காட்டி தன்வசம் வளைத்துக்கொண்ட விஜயேந்திரர், அவர் மூலமாகவே ஜெயேந்திரரை அவமானப்படுத்தி வருகிறார். அதனால்தான், "திருப்பதிக்கு வரும் ஜெயேந்திரரை மடத்துக்குள் அனுமதிக்க வேண்டாம், லிப்ட்டும் இயங்கக்கூடாது, எந்த வசதிகளையும் செய்து தரக்கூடாது' என விஜயேந்திரர் தரப்பிலிருந்து ராமகிருஷ்ணனுக்கும் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார் ஜெயேந்திரர். மீண்டும் மீண்டும் பெரியவாவை கேவலப்படுத்துவதன் மூலம் மடத்தின் அதிகாரத்தை அவர், சின்னவாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வார்ங்கிறதுதான் எதிரிகளின் நோக்கம். மறைந்த செட்டிநாடு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமி ராஜ்ஜியத்தில் நடந்தது போல மடத்துக்குள் நடந்து வருகிறது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் இதுகுறித்து விசாரித்தபோது, ‘காஞ்சிமடம் திரும்பிய ஜெயேந்திரர், மடத்தின் மேலாளர் சுந்தரேசனை அழைத்து, குல்பர்ஹா சங்கரிடம் நிர்வாக பொறுப்பை ஒப்படைத்திருப்பதற்கும்,  மேலாளர் ஆதித்யாவை பணிநீக்கம் செய்யவும் மடத்திலிருந்து கடிதம் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். ஆனால், ஒரு துரும்பும் அசையவில்லை. ஒருமுறை அவரது அறைக்கே சென்ற ஜெயேந்திரர், கடிதம் அனுப்புவது பற்றி அவரிடம் விசாரித்தார். அதற்கு, ""சின்னவா (விஜயேந்திரர்) உத்தரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் உத்தரவை ஏற்கக்கூடாது என எனக்கு உத்தரவு'' என்று சொல்லியிருக்கிறார் சுந்தரேசன்.
இத்தனைக்கும் ஜெயேந்திரரின் ஆதரவாளர்தான் இவர். அதிர்ந்துபோன ஜெயேந்திரர், "கடிதம் அனுப்ப முடியலைன்னா உன் வேலையை ரிசைன் பண்ணு' என சத்தம் போட, அதற்கு இணையாக குரல் உயர்த்திய சுந்தரேசன், "முடிந்துபோன ஒரு வழக்கில் ஜெயேந்திரருக்கு எதிராக இருந்த ஆதாரங்களைச் சொல்லி கேள்வி எழுப்பிவிட்டு, அதனால் என்னை ரிசைன் பண்ண சொல்வதற்கு முன்பு நல்லா யோசிச்சிக்குங்க' என கோபப்பட்டார்.

"சங்கரமடத்தின் கல்வி அறக்கட்டளையும் சென்னப்புரி பக்த சமாஜ் அறக்கட்டளையும் ஜெயேந்திரரின் சொந்த சகோதரர் ராமகிருஷ்ணனின் நிர்வாக பொறுப்பில் இருக்கிறது.  ராமகிருஷ்ணனும், விஜயேந்திரரின் சொந்த தம்பி ரகுவும்தான் விஜயேந்திரரின் மூளையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மடத்திற்கு வெளியே நடக்கவேண்டிய அத்தனை விவகாரங்களையும் இவர்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் விஜயேந்திரர்.

மடத்தில் ஜெயேந்திரருக்கு எதிரான அனைத்து  வேலைகளையும் சுந்தரேசன் மூலம் தினமும் செயல்படுத்தி வருகிறது ராமகிருஷ்ணன் -ரகு டீம். ஜெயேந்திரரிடமிருந்து மடத்தின் முழு அதிகாரத்தையும் பறிக்க, மீண்டும் வேலைகள் துவங்கிவிட்டன. இதற்காக இந்தியா முழுவதிலுமுள்ள மடாதிபதிகளிடமும் ஹிந்துத்துவா தலைமைகளிடமும், ’ பல தகவல்களைப் பரப்பிவருகிறார்கள் விஜயேந்திரரின் பக்தகோடிகள்' என்கிறது காஞ்சிமட வட்டாரம்.
-இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக