திங்கள், 4 டிசம்பர், 2017

கன்யாகுமரி கடலில் சிக்கி உள்ள மீனவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை ..வெறும் வாயால் வடை சுடும் மத்திய மாநில அரசுகள் ...

மின்னம்பலம் :ஒகி புயலின் கோரத் தடங்கள் குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல... கடலிலும் கடுமையாகப் பதிந்துள்ளது. இதனால் ஒகி புயலுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் சிக்கியுள்ளனர். குமரி மாவட்டமே உள்கட்டமைப்புக் குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது.
காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றித் தருமாறு அவர்களின் உறவினர்கள் குமரியில் போராடிக்கொண்டிருக்க, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்து இரவு வரை ஆலோசனை மேற்கொண்டார்.
ஏற்கெனவே கன்னியாகுமரியின் எம்.பியான மத்திய அமைச்சர் பொன்னார் புயல் சேதத்தை ஆய்வு செய்துவிட்டு உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரன் ரிஜுஜு உள்ளிட்டோரைச் சந்தித்து உதவி செய்ய வற்புறுத்திய நிலையில் நேற்று மாலை குமரிக்கு வந்தார் நிர்மலா சீதாராமன். ஆனால், அவரோடு தொகுதி எம்.பியான பொன்னார் வரவில்லை. மாறாக தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் நிர்மலா சீதாராமனோடு வந்தார்.


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார் ஆகியோர் குமரியில் ஏற்கெனவே முகாமிட்டு மாவட்டத்தில் நிவாரணப் பணிகளையும், கடலில் மீனவர் மீட்புப் பணிகளையும் முடுக்கிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குமரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஒகி:  அரசியலாகும் தேசியப் பேரிடர்!இதையடுத்து போராடும் மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மீனவர்கள் நிர்மலா சீதாராமனிடம் எந்தெந்த கிராமங்களில் இருந்து எத்தனை மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை படகுகளின் பதிவு எண்களோடு நிர்மலாவிடம் மனுவாகக் கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட நிர்மலா உடனடியாக கடலோர காவல் படை அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தார்.
மார்த்தாண்டத்தில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், “ஜி.பி.எஸ் கருவி மூலம் காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளில் நிகழாத சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது வருத்தத்துக்கு உரியது. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
மருத்துவ வசதிகள் அடங்கிய கப்பல்களைக் கொண்டு தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்த கப்பல்கள் 36 மீனவர்களைக் காப்பற்றி உள்ளன. மீனவர்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறோம். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வற்புறுத்துவேன்” என்று குறிப்பிட்டார்.

இதேநேரம் நேற்று கேரளாவைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணானந்தம் திருவனந்தபுரத்தில் ஒகி புயல் சேதம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒகி புயலால் ஏற்பட்ட சேதத்தை விளக்கிய கேரள முதல்வர், “கேரளா, தமிழகம் என இரு மாநிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கேற்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளவாறு ‘ஒகி’புயலை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரளாவில் பாஜக அரசியல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நூறு ஆண்டுகளில் ஏற்படாத சேதம்’ என்கிறார். ஆனால், திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ், ‘இது தேசிய பேரிடர் இல்லை’ என்கிறார்.
மீனவர்கள் குமரியில் இருந்து கேரளா வரை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்று காலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை சாலையில் பயணித்து மீனவர்கள் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக