வெள்ளி, 22 டிசம்பர், 2017

ராசா மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ,,, மரபு சார் உறுதிப்பத்திரம் தாக்கல் .. பாஸ்போர்ட் ....

மீண்டும் பாட்டியாலாவுக்கு வந்த ராசாமின்னம்பலம் :டிசம்பர் 21ஆம் தேதி காலையில் 2ஜி வழக்குத் தீர்ப்பை ஒட்டி ஏராளமான திமுகவினரும், போலீஸாரும், வட மாநில வழக்கறிஞர்களும், குறிப்பாக மீடியாக்காரர்களும் திரண்டு... பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தையே பரபரக்கச் செய்தனர்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் அவற்றை சமாளிக்க போலீஸ் நடத்திய மல்லுக்கட்டு என்று தீர்ப்புக்கு முன் பதற்றமாக இருந்த பாட்டியாலா கோர்ட் ஆ.ராசா, கனிமொழி விடுதலை என்று தீர்ப்பளித்த பின் உற்சாகக் காடாக மாறியது.
ஆனால் இன்று டிசம்பர் 22 காலை அந்த பாட்டியாலா நீதிமன்ற வளாகம், ‘2ஜி வழக்கில் தீர்ப்பு சொன்ன இடமா இது?’ என்பது போல ஒரு காக்காய் குருவி கூட இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீண்டும் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வருகை தந்தார்.

கடந்த ஆறு வருடங்களில் விசாரணைக் கைதியாகவும், குற்றம் சாட்டப்பட்டவராகவும், வழக்கறிஞராகவும், நெரிசலுக்கு இடையே இந்த பாட்டியாலா வளாகத்துக்குள் வந்த ஆ.ராசா., இன்று தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒரு நிரபராதி மனிதனாய் தனக்கே உரிய வெள்ளைச் சிரிப்போடு பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வந்தார்.
வழக்கிலிருந்து விடுதலையாகிய ஆ.ராசா மீண்டும் ஏன் வந்தார்?
குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு முடிந்து அதில் இருந்து விடுதலை ஆன பட்சத்திலும் கூட, அரசுத் தரப்பு இதில் அப்பீலுக்குப் போகும் என்ற நிலையில், அந்த அப்பீலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஓர் உறுதிமொழிப் பத்திரத்தை விடுதலையானவர் தாக்கல் செய்வது வட மாநில நீதிமன்றங்களில் மரபு.
அந்த வகையில் இந்த 2ஜி வழக்கின் ஆரம்பக் கட்டத்திலிருந்து சட்டத்துக்கும் நீதிக்கும் உரிய மரியாதை அளித்து தனது அனைத்து சட்டக் கடமைகளையும் நிறைவேற்றிய ராசா, இன்று அந்த உறுதிமொழிப் பத்திரத்தை அளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு வந்தார்.
நேற்று எள் போட்டால் விழ இடமில்லாமல் இருந்த நீதிமன்றத்தில் இன்று ஆ.ராசா, அவருடன் வந்த வழக்கறிஞர் ஒருவர், நீதிபதி ஓ.பி. சைனி என மூவர் மட்டுமே இருந்தனர்.
தன் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு அதன் பின்னர் நீதிமன்ற அலுவலகத்துக்குச் சென்று தனது பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்ட ஆ.ராசா அந்தப் பழைய கட்டடத்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அந்த வளாகத்திலிருந்து வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக