வெள்ளி, 22 டிசம்பர், 2017

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை எரித்து கொன்ற காமகொடூரன் ... ஹைதராபாத்

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண் எரிப்பு!
மின்னம்பலம் : ஹைதராபாத்தில் காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். தீ வைக்கப்பட்ட பெண் இன்று (டிசம்பர் 22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் சந்தியா ராணி என்ற பெண் லாலாகுடா நகரில் உள்ள கடை ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவந்தார். சந்தியா நேற்று (டிசம்பர் 21) மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கார்த்திக் என்பவர் பைக்கில் சந்தியாவைப் பின்தொடர்ந்து வந்தார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றவே கார்த்திக் ஒளித்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சந்தியா மீது ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டார்.
கார்த்தியும் சந்தியாவும் ஒரே கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு கார்த்திக் அந்தக் கடையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கார்த்திக் சந்தியாவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணியை விடும்படி கூறியிருக்கிறார். இதற்கடுத்து, அவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

கார்த்திக்கின் கொலைத் திட்டத்தின்படி தீயில் வெந்துகொண்டிருந்த சந்தியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 75 சதவிகிதம் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தியா இன்று உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு முன்பு சந்தியா போலீசாரிடம், கார்த்திக்கைத் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தில் கார்த்திக் என் மேல் தீ வைத்துவிட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தியாவின் சகோதரர் அளித்த புகாரின்பேரில்,கார்த்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-ன் (கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கார்த்திக்கும், சந்தியாவும் காதலித்துவந்ததாகவும், பின்பு அவர்கள் பிரிந்து விட்டதாகவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால், கார்த்திக் அவரைப் பின்தொடர்ந்து, கொலை செய்திருப்பார் என சந்தேகப்படுகின்றனர்.
2012ஆம் ஆண்டில் டெல்லியில் பேருந்தில் மாணவி ஒருவர் ஒரு கும்பலால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. அரசு அளித்த தகவலின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மீது அமிலம் வீசுதல் முதலான பெண்களுக்கு எதிரான நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக