ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ராஜேஷ் லக்கானி காட்டில் மழை ....லக்கானி போன் சுவிச் ஆப் !

minnambalam.com :லக்கானி போன் "சுவிட்ச் ஆஃப்"!"இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியினரும், தினகரன் அணியினரும் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி வீசி வருகின்றனர். அவர்கள் பணம் கொடுக்கும் நேரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
"வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் பிரச்சாரம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக, கடந்த 15ஆம் தேதி இரவு, துணை இராணுவத்தினரும், உள்ளூர் போலீஸாரும் இணைந்து தொகுதி மக்களை அலசி எடுத்துள்ளனர். ஆனால் மறுநாள் காலை 7.30 மணியிலிருந்து ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.6ஆயிரம் என்று பணம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பணம் கொடுப்பதை தடுக்கவும், அவர்களைப் பிடித்துக் கொடுக்கவும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செல்போனுக்கு தொடர்புகொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடா முடிந்த பிறகு அழைத்தால் லக்கானியின் செல்போன் ஆன் ஆகியுள்ளது. இரவில் ரெய்டு நடந்த நிலையில், பகலில் பணப் பட்டுவாடா செய்தார்கள் ஆளுங்கட்சியினர் என்கிறார், திமுக வடசென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான சேகர்பாபு.
பணத்தை எப்படிக் கொடுத்தார்கள் என்பதை நேரடியாக தொகுதியில் சந்தித்ததைப் பற்றி, கொருக்குப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குசேகரிக்கும் எம்.எல்.ஏ. சபா.இராஜேந்திரன் நம்மிடம் விவரித்தார்.

"சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், இராயபுரம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராஜிவ்காந்தி மருத்துவமனை என குறிப்பிட்ட சில இடங்களில் நின்றுகொண்டு, தொகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள குடும்பத்தினரை அங்கு வரவழைத்து, ரூ 30, 36, 42, 48, 60 ஆயிரம் என்று பணத்தை கத்தை கத்தையாய் வழங்கினர். தொகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோ எடுத்துக்கொண்டு நான்கு பேர், ஐந்து பேர் என்று சென்று அந்த பணத்தை வாங்கி வந்தனர்.
ஐந்து ஓட்டுக்கும் குறைவான வாக்காளர்களின் குடும்பங்களை, அருகிலிருக்கும் தொகுதிக்கு வரவழைத்து பணத்தை கொடுத்து அனுப்புகிறார்கள். மற்றவர்களுக்கு தொகுதியிலேயே வழங்கப்படுகிறது. ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என்ற விதத்தில் ஆறுமணி நேரத்தில் பட்டுவாடா செய்தார்கள்" என்றார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சேட்டுக்கடையில் அடகு வைத்திருக்கும் பொருட்களின் சீட்டைக் கொடுத்தால் அதனை மீட்டுக் கொடுத்துவிடுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். பலருக்கு டோக்கன் வழங்கி குறிப்பிட்ட கடைகளில் பொருள்களை வாங்கிக் கொள்ள சொல்லியுள்ளனர் எவ்வித சத்தமுமில்லாமல். இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் நிலையில், திமுக மட்டும்தான் வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ எதுவும் கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கிறது" என்றும் தெரிவித்தார்.
திமுக சீனியர் மாவட்ட செயலாளர் ஒருவர் சொல்கிறார், “கடந்த 15ஆம் தேதி இரவு வரையில், தொகுதியில் உள்ள திமுக குடும்பத்தினர் பலர் மரியாதையாக டீ கொடுத்து உபசரித்தனர், பாசமாகவும் பேசினர். 16ஆம் தேதி முதல் தொகுதியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்றபோது, எங்கள் கட்சிக்காரர்களின் குடும்பத்துப் பெண்கள் முகத்தைச் சுளித்துக்கொண்டு கோபமாக இருந்தார்கள்.
நாங்கள் கட்சிக்காரர்களிடம் வீட்டில் ஏதாவது பிரச்சனையா, எதிர்க்கட்சிகாரர்கள் ஏதாவது மிரட்டினார்களா என்று கேட்டோம், "ஆளும் கட்சியினர், திமுகவினர் குடும்பத்தைத் தவிர்த்து, மற்ற வீடுகளில் உள்ள பெண்களை அழைத்து ரூ30 ஆயிரம், 60 ஆயிரம் என்று கொடுத்து அனுப்புகின்றனர். அதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் கோபமாக உள்ளனர். திமுகவுக்கு ஓட்டு போடுகிறோம், ஆனால் வீட்டுக்கு வரவேண்டாம் என்று சத்தம்போடுகிறார்கள் என்று எங்களிடம் சொல்கிறார்கள்.
ஆளுங்கட்சியினரும், தினகரன் அணியினரும் போட்டிப்போட்டுக் கொண்டு பணமும், பொருளும் கொடுத்து, திமுகவினரின் வீடுகளில் குழப்பத்தை உருவாக்கிவிட்டனர் என்று வருத்தப்பட்டவர், "தளபதியிடம் சொல்லி, நமது கட்சிக்காரர்களுக்கு மட்டும் ஓட்டுக்கு ஐந்தாயிரமாவது கொடுக்கச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கட்சியினர்" என்று விவரித்த அவர். ஆனால் தளபதி ஒரு பைசாகூட கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார் என்கின்றனர்" என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக