செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஆர் கே நகரில் தெலுங்கு ஓட்டுக்களை குறிவைக்கும் விஷால்...?


டிஜிட்டல் திண்ணை!மின்னம்பலம் :“ஆர்.கே.நகரில் சுயேச்சையாக இன்று களமிறங்கிவிட்டார் நடிகர் விஷால். நடிகர் ஆரி பைக்கை ஓட்ட... பின்னால் அமர்ந்தபடியே ஆர்.கே.நகரை நோக்கிப் பயணித்தார் விஷால். ஆர்.கே.நகர் வரை விஷால் ரசிகர்கள் பைக்கில் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, விஷால் ரசிகர்கள் தவிர, கமல் ரசிகர்களையும் அங்கே பார்க்க முடிந்தது. விஷாலுக்கு ஆதரவாகக் கமல் ரசிகர்கள் சத்தமில்லாமல் ஆர்.கே.நகரில் களமிறங்கிவிட்டார்கள். இது என்ன புதுக் கூட்டணியாக இருக்கே என விசாரித்தோம்.
‘விஷாலை ஆர்.கே.நகரில் போட்டியிடச் சொன்னதே கமல்தான். புதுக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கும் கமல், நேரடியாக இப்போது களத்தில் இறங்க வேண்டாம் என யோசிக்கிறார். நடிகர்களுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என பல்ஸ் பார்க்க நினைத்தார் கமல். கடந்த வாரத்தில் ஒருநாள் இது சம்பந்தமாக விஷாலை அழைத்துப் பேசினார் கமல். ‘ஒரு கட்சி தொடங்குறது என்பது சாதாரண வேலை இல்லை. அதைத் தாண்டி நடிகர்கள் கட்சி தொடங்கினால் அதை மக்கள் ஏத்துக்குவாங்களா... நமக்கு மக்கள்கிட்ட என்ன செல்வாக்கு இருக்கு.. இதையெல்லாம் நாம பார்த்தாகணும்.
அதுக்குதான் உங்களைக் கூப்பிட்டேன். ஆர்.கே.நகரில் நீங்க நில்லுங்க. நம்ம ஆட்கள் உங்களுக்காக வேலை பார்ப்பாங்க. ஜெயிக்கிறோம்... தோற்கிறோம் என்பதையெல்லாம் தாண்டி நமக்கு என்ன செல்வாக்கு இருக்கு என்பதை தெரிஞ்சுக்கலாம். என்னோட ஆளாக ஒருத்தரை அடையாளப்படுத்தி அங்கே நிற்க வெச்சாலும் அதுக்கு ஃபேஸ் வேல்யூ இருக்காது. நானே நிற்கலாம்... ஆனால், தோத்துட்டா இதுவரைக்கும் பேசினது எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நீங்க நில்லுங்க. உங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன். அதுக்குப் பிறகு, நாம கட்சி தொடங்கும் போது என்ன செய்யலாம்னு பார்த்துக்கலாம். இதை எனக்கு நீங்க பண்ற உதவியாகக்கூட எடுத்துக்கோங்க...’ எனச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
முதலில் விஷால் ரொம்பவே தயங்கியிருக்கிறார். அதற்கும் கமல், ‘இப்போ நீங்க எந்த அரசியல் சாயத்துடனும் களமிறங்கவில்லை. சுயேச்சை வேட்பாளராகத்தான் போட்டியிடப் போறீங்க. அதனால கேரியர்ல எந்த சிக்கலும் வராது...’ என்றெல்லாம் பேசி சமாதானம் செய்திருக்கிறார். அதன் பிறகுதான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் விஷால். “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது. “கமலைப் பொறுத்தவரை ஆர்.கே.நகரைத் தனது அரசியல் பிரவேசத்துக்கு ஆழம் பார்க்கும் விஷயமாகத்தான் நினைக்கிறார். அதற்குப் பரிசோதனை எலியாகத்தான் இப்போது விஷாலை களமிறக்கி விட்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல் சமயத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வந்த கமல் ரசிகர்கள் இனி அடுத்தடுத்த கட்டங்களில் நேரடியாகவே இறங்கித் தேர்தல் வேலைகளைப் பார்க்கப் போகிறார்கள். விஷாலுக்கு ஆதரவு அளிக்கப்போகிறேன் என இப்போது கமல் அறிவிக்கவும் மாட்டாராம். ஆனால், ரசிகர்கள் மட்டும் சத்தமில்லாமல் தேர்தல் வேலையைச் செய்வார்கள்.
ஒரு தேர்தலை எப்படி எதிர்கொள்வது, வேட்பாளர் ஓட்டு கேட்டுப் போகும்போது என்ன சிக்கல்களை சந்திக்கிறாரு, நடிகர்கள் தேர்தல் களத்தில் இருப்பதற்கு மக்களின் ரியாக்‌ஷன் என்ன... என்பதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் கவனித்து தனக்கு ரிப்போர்ட் கொடுக்கும்படியும் ஒரு டீமை களமிறக்கியிருக்கிறார் கமல். அந்த டீமும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் கள நிலவரங்களை தினமும் தனக்கு ரிப்போர்ட் ஆகக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறாராம் கமல். அதற்கென ஒதுக்கப்பட்ட டீம் அந்த வேலைகளை கவனித்துக்கொண்டிருக்கிறது” என்பது அடுத்த மெசேஜ்.
இரண்டு மெசேஜ்களையும் காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
“விஷாலைப் பொறுத்தவரை அதிமுக வாக்குகளைத்தான் பிரிப்பார். அவரால் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனச் சொல்லிவருகிறாராம் டிடிவி தினகரன். மதுசூதனன் தெலுங்கு பேசுறவரு. விஷாலும் தெலுங்கு பேசுற ஆளுதானே... அதனால் எப்படிப் பார்த்தாலும் அதிமுக வாக்குகள் சிதறும். அவரை நினைச்சு நாம கவலைப்படத் தேவை இல்லை. சினிமாக்காரங்களைப் பார்த்து ஓட்டு போட்ட காலமெல்லாம் விஜயகாந்த்துடன் முடிஞ்சு போச்சு... என்றும் சொல்லி இருக்கிறார் தினகரன்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக