செவ்வாய், 5 டிசம்பர், 2017

உன் சொத்தெல்லாம் என் சொத்தே! ..உன் சொத்தெல்லாம் என் சொத்தே!

மதுரையில் நடந்த உன் சொத்தெல்லாம் என் சொத்தே! தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் என 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 532 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வீடு, மனை, கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்குபவர்கள், அந்த சொத்தின் உரிமையாளர் குறித்த விபரங்களையும், அந்தச் சொத்து அடமானத்தில் இருக்கிறதா என்பது போன்ற விபரங்களையும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறக்கூடிய வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.  ஆனாலும், தமிழகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துக்கள், ஆள் மாறாட்டம் மூலம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்குகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இதற்கென்றே, நில மோசடி பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆனாலும், மோசடிகள் நின்றபாடில்லை. சாம்பிளுக்கு ஒரு மோசடி இங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது.


அடுத்தவர்களின் சொத்தை அபகரிப்பதே சிலரின் முழுநேர வேலையாக இருக்கிறது. இத்தகையவர்கள் எங்கெங்கும் உள்ளனர். தற்போது மதுரையில் ஒரு கும்பல் அடையாளம் காணப்பட்டு, சிலர் கைதாகியிருக்கின்றனர். வழக்கோ, சிறைவாசமோ, எதற்கும் அஞ்சாத இந்த வில்லங்கப் பேர்வழிகள்  மதுரையில் அரங்கேற்றிய மோசடி காட்சிகள் இதோ –
காட்சி 1
மலேசியாவில் அப்பள கம்பெனி நடத்தும் குமாரசாமிக்கு மதுரை, சென்டரல் தியேட்டர் அருகிலுள்ள மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் (கதவு எண் 4)  ரூ. 3 கோடி பெறுமான வீடு ஒன்று இருக்கிறது. மலேசியாவிலிருந்து மதுரையில் உள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருந்தது. அங்கே அவருக்கு அறிமுகமில்லாத மாயாண்டியும், ரவியும் இருந்தனர்.
“யாரு நீங்க? பூட்டியிருந்த என் வீட்டுக்குள் எப்படி வந்தீங்க? மொதல்ல வெளியேறுங்க?” அலறுகிறார் குமாரசாமி.
“நீ யாருடா? இது எங்க வீடுடா.. எங்க சொத்துடா.. ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிரு. போலீஸு.. கேஸுன்னு போனா.. இங்கேயே சாகடிச்சிருவோம்.” மிரட்டுகிறார்கள் மாயாண்டியும் ரவியும்.
காட்சி 2 
மதுரை அரண்மனை சாலையில் உள்ள தெற்கு இணை 1 சார் பதிவாளர் அலுவலகம் சென்று, வில்லங்க சான்று விபரங்களைக் கேட்கிறார் குமாரசாமி. மாயாண்டியும் ரவியும், குமாரசாமி என்ற தனது பெயரில் போலியாக இன்னொரு நபரையும், தன் மகன் பாலமுருகன் பெயரில் போலியாக இன்னொருவரையும் ஆள்மாறாட்டம் செய்ய வைத்து, தன் மனைவி சுபத்ராவின் இறப்பு சான்று, வாரிசு சான்று, வாக்காளர் அட்டை, ஆதார் என அனைத்தையும் போலியாகத் தயாரித்து, மதுரையில் ஓகே ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்திவரும் தேமுதிக பிரமுகர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு போலியான கிரைய ஒப்பந்தம் ஒன்றினை மோசடியாக ஏற்பத்தியிருப்பதையும், அரசு முத்திரை கொண்ட ஆவணங்கள் சிலவற்றை இதற்காக போலியாக தயார் செய்திருந்ததையும் அறிந்துகொள்கிறார்.
காட்சி 3
திலகர் திடல் காவல்நிலையத்துக்கு பதறியடித்துக்கொண்டு செல்கிறார் குமாரசாமி. “என் மனைவி சுபத்ராவுக்கு அவளோட அண்ணன் கிரையம் செய்து கொடுத்த வீடு இது. இப்ப நாங்க மலேசியாவில் இருக்கோம். என் மனைவி அங்கேயே இறந்துட்டா. அங்கே நாங்க பார்த்துக்கிட்டிருக்கிற அப்பள பிசினஸ்ல நஷ்டம். என் மனைவி பேர்ல இருக்கிற இந்த சொத்தை விற்று வியாபாரத்தை தொடரலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள, என் வீட்டுக்குள்ள யார் யாரோ புகுந்து, எங்க சொத்துன்னு சொல்லிக்கிட்டு, என்னையே விரட்டுறாங்க. போலியான அந்த நபர்கள் ஒப்பந்தமெல்லாம் போட்டுட்டாங்க. பத்திரப் பதிவுக்கும் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க. என் சொத்தை மீட்டுக் கொடுங்க.” என்று புகார் அளிக்கிறார்.
காட்சி 4
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரராஜனின் மைத்துனரும், ஓகே ஜுவல்லர்ஸ் உரிமையாளருமான பாலசுப்பிரமணியன் “மணிகண்டன்ங்கிறவர் அரசு பள்ளி ஆசிரியர். அவர் மூலமா நிலம், வீடெல்லாம் நம்பிக்கையா பலரும் வாங்குவாங்க. கவர்மெண்ட் சம்பளம் வாங்குற வாத்தியார் மோசடிக்கு துணை போவாரா? அந்த நம்பிக்கையில்தான் வீட்டு உரிமையாளர்கள்ன்னு அவங்க காட்டிய போலி ஆசாமிகள்கிட்ட, அட்வான்ஸ் தொகையாக ரூ.10 லட்சத்து 80 ஆயித்தைக் கொடுத்து ஒப்பந்தமும் பதிவு பண்ணுனேன். போட்டோ ஒட்டணும் அது இதுன்னு பத்திர பதிவு ஆபீசு இப்ப டிஜிட்டல் மயமாயிருச்சு. மோசடியா யாரும் பத்திரம் பதிய முடியாதுன்னு ரொம்பவே நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, அவங்க கொடுத்த டூப்ளிகேட் பத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்திலேயே யாரும் கண்டுபிடிக்கல. ஆளுங்கள்ல இருந்து பத்திரம், சான்றிதழ்கள்ன்னு எல்லாமே போலின்னு அப்புறம்தான் தெரிஞ்சது.” என்கிறார் ஏமாற்றத்துடன்.
காட்சி 5
‘வா.. வா.. வாத்தியாரே வா..’ என, இடையபட்டி அரசு பள்ளிக்கு வெளியே காத்திருந்த காக்கிகள், ஆசிரியர் மணிகண்டனை அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். தற்போது சென்னையில் இருக்கும் மாயாண்டியின் பெயரைச் சொன்னார் ஆசிரியர். அவரிடம்‘உன்னால ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு. உடனே சென்னை கிளம்பி வா. பெரிய அளவு பணம் பண்ணலாம்.’ என்று மாயாண்டியிடம் பேசச் சொன்னது போலீஸ். ‘வழிச் செலவுக்குப் பணம் இல்லை’ என்று அவன் கூறியிருக்கிறான். துணை கமிஷனர் வெற்றிசெல்வன், தன்னுடைய பணம் ரூ.10000-ஐ மாயாண்டியின் வங்கிக் கணக்கில் போட, விமானம் மூலம் மதுரை வந்தான். டாக்ஸி பிடித்து அவனை பெரியார் பேருந்து நிலையம் வரச் செய்து, மடக்கிப் பிடித்தனர்.
காட்சி 6
திலகர் திடல் காவல் நிலையத்தில், விசாரணை அதிகாரி ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலையில், வாக்குமூலம் அளித்தான் மாயாண்டி. அதில் “என் அப்பா பெயர் காந்தி. மதுரை கோர்ட்டில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்த அவரது அனுபவத்தில், நாங்கள் இருவரும் அரசு ஆவணங்களைப் போலியாக தயாரித்து, பணம் சம்பாதித்து வந்தோம். எங்களுக்கு ஒத்தக்கடையைச் சேர்ந்த மோகன், கோர்ட்டுக்குத் தேவையான ஆவணங்கள், இறப்பு சான்று, போலி வாக்காளர் அட்டை, போலி ஆதார் அட்டை மற்றும் அரசாங்க சீல், உயர் அதிகாரிகளின் கையொப்பம் என அனைத்தையும் ஒரிஜினல் போலவே செய்து தருவான். டெய்லர் ரவி மற்றும் சரவணகுமார் மூலம் குமாரசாமி வீட்டு பத்திரத்தின் நகல் கிடைத்தது.  அதை வைத்து, போலி ஆவணங்களை, அசல் போலவே தயாரித்து தந்தான் மோகன். சமையல் வேலை பார்க்கும் பால்ராஜ் என்பவரை நாங்கள் கோடீஸ்வரர் குமாரசாமி ஆக்கினோம். செந்தில்நாதன் என்பவனை குமாரசாமியின் மகன் பாலமுருகன் ஆக்கினோம். போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து, அந்த வீட்டை விற்று பணம் சம்பாதிக்க திட்டமிட்டோம்.” என்றிருக்கிறான்.
மாயாண்டி, மணிகண்டன், டெய்லர் ரவி, சரவணகுமார் ஆகிய நால்வர் கைதாகியிருக்கின்றனர். காந்தி, மோகன், பால்ராஜ், செந்தில்நாதன் ஆகிய நால்வரைத் தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை.
சதுரங்க வேட்டையை, எங்கெங்கோ, யார் யாரோ, நிகழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். மோசடி பேர்வழிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், சம்பந்தப்பட்ட துறைகள் திணறி வருகின்றன. பாதிப்புக்கு ஆளானவர்கள் பரிதவிப்பதெல்லாம் தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிட்டன.
-சி.என்.இராமகிருஷ்ணன், ஷாகுல்
nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக