சனி, 2 டிசம்பர், 2017

ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு  சிறை!minnambalam.com :முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை மத்திய அரசு தயாரித்துள்ளது. அந்த வரைவில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி, திருமண பந்தத்திலிருந்து ஆண்கள் எளிதாக விவாகரத்து பெறுகின்றனர். பொது இடங்களில், சமூக வலைதளங்களில் விவாகரத்து செய்வது, ஆண் குழந்தை இல்லை எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்வது என ஆண்கள், பெண்களைக் கைவிடுகின்றனர். இதனால், முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, முத்தலாக் விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ரா பானு என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோன்று முத்தலாக் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது எனத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இதுதொடர்பாக மத்திய அரசு ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2017 என்ற சட்ட முன்வரைவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்தச் சட்ட மசோதாவின் பிரதிகளை அனைத்து மாநில அரசுகளின் பார்வைக்கும் நேற்று (டிசம்பர் 1) அனுப்பிவைத்துள்ள மத்திய அரசு இதுகுறித்து உடனடியாகக் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது..
மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின் எதிர்வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது இந்தப் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக