திங்கள், 11 டிசம்பர், 2017

கடலில் மிதக்கும் மீனவர்கள் உடல்.... பச்சை பொய் கூறும் கடல்படை, அமைச்சர்கள் நிம்மி .. பொன்னார் ...

கடல்படை செய்ய தவறியதை மீனவர்கள் செய்கின்றனர் .. மீனவர்களை தேடி சென்ற மீனவர்களின் படகுகள் இறந்த மீனவர்கள் உடல்கள் மிதப்பதாக தெரிவிக்கிறார்கள். அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் மீனவர்கள் வசம் உள்ளது. கடல் படையும் அமைச்சர் நிர்மலாவும் பச்சை பொய் கூறி மக்களை ஏமாற்றுவது அம்பலமாகி உள்ளது .
மின்னம்பலம் : குமரி மாவட்டம் நித்திரவிளைவில் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி நாளை (டிசம்பர் 12) கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்காகக் கடையடைப்புப் போராட்டம்!ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று கோரி, கடந்த சில நாட்களாக மீனவக் குடும்பத்தினருடன் பல்வேறு கிராம மக்களும் சேர்ந்து, சாலை மறியல், ரயில் மறியல், கண்டனப் பேரணி, கண்ணில் கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் எனப் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
மேலும், தமிழக அரசு மீனவர்களின் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிவருகின்றனர். இதையடுத்து, கப்பற்படை உதவியுடன் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

இன்னும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியாத நிலை நீடிக்கிறது. மீனவர்களைத் தேடும் பணியை விரைவாகச் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இரு மடங்கு உயர்த்தி வழங்கக் கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்திய இரவிபுத்தன்துறை கிராமத்திற்கு, எம்.எல்.ஏ.கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிமுன் அன்சாரி பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து மீனவர்கள் பிரச்சினையைக் கேட்க வேண்டும். குமரி மாவட்டத்த்தின் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் 500 கிலோமீட்டர் தாண்டி மீனவர்களைத் தேட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தனியரசு பேசுகையில், போராட்டம் நடத்திய மீனவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தை ஈடுபடுத்தி மீட்புப் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
இவர்கள் பேசும்போது போராட்டத்தில் பங்கேற்ற மீனவப் பெண்கள் இருவரையும் சூழந்துகொண்டு கேள்வி எழுப்பினார்கள். “தினசரி வந்து இதுபோன்று பேசிவிட்டுதான் போகிறீர்கள். ஆனால், நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை” என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினார்கள்.
இந்நிலையில், மாயமான மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்கக் கோரி நாளை (டிசம்பர் 12) கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கம் சார்பாக அறிவித்து வெளியிட்டுள்ளது. ஓகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக