வெள்ளி, 8 டிசம்பர், 2017

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை? தந்தையின் இரண்டாவது தாரம் சரளாவையும் தஸ்வந்த் டார்ச்சர்

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை?சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், குன்றத்துரில் தன் தாய் சரளாவைக் கொலைசெய்துவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்றான். இவனை அந்தேரி பகுதியில், இன்று (டிசம்பர் 8) மீண்டும் கைது செய்திருக்கின்றனர் போலீசார். இந்த கொலை வழக்கில், அவனது தந்தை சேகரும் உடந்தையாக இருந்தாரா என்பது பற்றி தமிழகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியன்று, ஏழு வயது சிறுமி ஹாசினி கொலையானார். அவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் தஷ்வந்த். ஹாசினியிடம் தஷ்வந்த் பாலியல் ரீதியாக அத்துமீறியதும், அவரது பிணத்தை எரித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த தஷ்வந்தை, கடந்த செப்டம்பர் மாதம் அவரது தந்தை சேகர் ஜாமீனில் அழைத்துவந்தார்.
கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று, தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு தஷ்வந்த் தப்பிச்சென்றான். இவனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீஸ் படை கைதுசெய்தது. சென்னை செல்வதற்காக விமானநிலையத்திற்கு அழைத்துவரும்போது, தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் தப்பினான்.

தப்பியோடிய தஷ்வந்தை, இன்று (டிசம்பர் 8) மும்பை அந்தேரி பகுதியில் வளைத்துப் பிடித்திருக்கின்றனர் சென்னை போலீசார். மும்பை போலீசின் உதவியுடன் இதனைச் சாதித்திருக்கிறது தமிழக காவல்துறை.

ஹாசினி கொலை வழக்கை நடத்திவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணதாசன், தஷ்வந்தின் குற்றப் பின்னணியை நம்மோடு பகிர்ந்துகொண்டார். “தஷ்வந்த் தந்தை சேகரின் சொந்த ஊர் சைதாப்பேட்டை. அசோக் லேலேண்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், கைநிறைய சம்பளம் வாங்குகிறார். இவரது குடும்பம் மதனந்தபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்தது.
தஷ்வந்த் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறான். இவனது
தம்பி ரஞ்சித்குமார் ஆர்எம்கே கல்லூரியில் பொறியியல் படிக்கிறார்.
தாய் சரளா வீட்டில் இருக்க, தந்தை சேகர் கம்பெனிக்கு போய்விட, தம்பி கல்லூரியில் இருக்க, தஷ்வந்த் காம மிருகமாகச் சுற்றிவந்திருக்கிறான்.
தஷ்வந்த் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதி குடியிருந்தனர். இவர்களது பெண் ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் 5ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை, ஹாசினியை சீரழித்திருக்கிறான் தஷ்வந்த். அந்தக் குழந்தையைக் கொன்று, சாமார்த்தியமாக மூட்டை கட்டி எடுத்துப்போய், சாட்சியம் இல்லாமல் செய்வதற்காக, பிணத்தை எரித்திருக்கிறான்.

குழந்தையைக் காணவில்லை என்று ஹாசினியின் பெற்றோர்கள் தேடியபோது, அவர்களுடன் சேர்ந்து தஷ்வந்தும் தேடியிருக்கிறான். திடீரென்று அவன் காணாமல் போகவே, போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதன்பின் அவனை ரகசிய விசாரணை செய்து, பிப்ரவரி 8ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் போலீசார். சிறையில் போதைப்பொருளுக்கு அடிமையாகி செக்ஸ் பைத்தியமாக இருந்தவனை, அவனது தந்தை சேகர் பலவழிகளில் போராடி பெயிலில் அழைத்துவந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம், தாய் சரளாவின் சொந்த ஊரான குன்றத்தூருக்கு குடிவந்தது தஷ்வந்த் குடும்பம். இங்குதான், சரளாவைக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பொருள்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
தஷ்வந்த் ஒரு செக்ஸ் மனநோயாளி; அவனைச் சிறையில் அடைப்பதைவிட, ஒரு நல்ல மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும். ஹாசினி கொலை வழக்கை, நான்தான் நடத்திவருகிறேன், குழந்தையைப் பறிகொடுத்த பாபு - ஸ்ரீதேவி தம்பதியர் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டார்கள். வழக்கு விஷயமாக செங்கல்பட்டு நீதிமன்றம் வந்தார் பாபு. கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ”சாட்சி சொல்லி தண்டனை பெற்றுக்கொடுக்கலாம் என்று நினைத்தால், ஆந்திராவில் வளர்க்கும் ஒரே மகனையும் தூக்கிவிடுவேன்” என்று நீதிமன்றத்தில் பாபுவை நேரடியாக மிரட்டினான் தஷ்வந்த்.
செங்கல்பட்டு காவல்நிலையத்தில் இதுபற்றி புகார்கொடுத்தபோதே அலட்சியம் காட்டாமல் கைதுசெய்திருந்தால், சரளாவைக் காப்பாற்றியிருக்கலாம். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல், நேற்று முன்தினம் (டிசம்பர் 7ஆம் தேதி) எப்.ஐ.ஆர்,
பதிவுசெய்துள்ளனர் செங்கல்பட்டு போலீஸார்” என்று தெரிவித்தார் கண்ணதாசன்.
சரளா கொலை பற்றிக் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். ”சேகரின் இரண்டாவது மனைவிதான் சரளா; தஷ்வந்த் ஒரு செக்ஸ் சைகோ. வளர்ப்புத்தாய் சரளாவை பலநாட்கள் டார்ச்சர் செய்துள்ளான் தஷ்வந்த். இதனால் அவன் வீட்டிலிருக்கும்போது,
சரளா வீட்டுக்குப் போகமாட்டாராம். ஹாசினி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்தை பெயிலில் எடுக்க வேண்டாம் என்று சேகரிடம் சண்டையிட்டிருக்கிறார் சரளா.

மூன்று மாதங்கள் முன்பு, பல லட்சம் செலவு செய்து மகனை பெயிலில் எடுத்தார் சேகர். கடந்த 2ஆம் தேதி, வீட்டில் தனிமையிலிருந்த சரளாவைக் கொலை செய்துவிட்டு தப்பிய தஷ்வந்த், செங்குன்றத்தில் இருந்த நண்பன் மணிகண்டனைச் சந்தித்திருக்கிறான். அவனது செல்போனிலிருந்து தந்தை சேகரை தொடர்புகொண்டு, சரளாவைக் கொலை செய்த தகவலைச் சொல்லியிருக்கிறான். செல்போனிலிருந்த அழைப்புகளை விசாரணை செய்த போலீசார், மணிகண்டனைப் பிடித்து விசாரித்தபோது இது தெரியவந்திருக்கிறது.
இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான டீம் மும்பையில் தஷ்வந்தை தேடச்சென்றது. விலைமாதுகள் உள்ள ரெட் லைட் பகுதியைப்போல, ஆண்கள் இருக்கும் ஒரு ஏரியாவுக்கு வசதியான பெண்கள் போய்வருவார்கள். அங்கு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருந்த தஷ்வந்தை, மும்பை போலீஸ் உதவியுடன் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 3½ மணியளவில் பிடித்தனர். டிசம்பர் 7ஆம் தேதி மாலை மும்பை விமானநிலையம் சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் இருந்து தப்பியோடியிருக்கிறான் தஷ்வந்த்” என்றனர் போலீசார். தற்போது, சரளாவின் கொலையில் தஷ்வந்தின் தந்தை சேகரும் உடந்தையா என்று விசாரணை நடந்து வருகிறது.
தஷ்வந்த் செயல்களைப் பற்றி, சென்னை அடையாரில் உள்ள மைண்ட் ஸோன் (mind zone) மனநல மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார் மற்றும்
உளவியல் நிபுணர் டாக்டர் சுதா காமராஜிடம் கேட்டோம்.
”ஆல்கஹால் போதையைவிட, ட்ரக்ஸ் மோசமானது. இப்போது மலிவான விலையில் சிந்தட்டிக் ட்ரக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இது கெமிக்கல் கலவையால் செய்யபட்டவை. இந்தப் போதை, மூளைக்குப் போகும்போது கெடுதலை உருவாக்கும். பின்விளைவுகள் தெரியாமல் சுயகட்டுப்பாடு இழந்து, மூளை செயலிழந்து, மிருகங்களைவிட மோசமானதாக இந்த ஆசாமிகளின் செயல்பாடுகள் இருக்கும்.
இவர்களைச் சமூக விரோதிகள் என்று கூட சொல்வோம். இவர்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்க்கவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்; மாறாக, வன்முறைதான் தீர்வு என்று முடிவுசெய்வார்கள். இவர்களுக்குக் குற்ற உணர்வும் இருக்காது; தவறுகளைத்
திருத்திக்கொள்ளமாட்டார்கள்; தண்டனைகள் கொடுப்பதால் இப்படிப்பட்ட குற்றவாளிகளைத் திருத்தமுடியாது. மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகள் பெறவேண்டும்” என்றவர்களிடம், அதுபோன்ற குற்றவாளிகளை போலீஸ் அதிகாரிகள் உங்களிடம் பரிந்துரை செய்துள்ளார்களா என்றோம்.
”சென்னையிலுள்ள சில அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகளை
அனுப்பிவைக்கிறார்கள். அவர்களுக்குச் சிகிச்சைகள் கொடுத்துத் திருத்தியுள்ளோம்” என்றனர்.
குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை தீர்வு அல்ல; மனநல ஆலோசனையே அவர்களை மனிதர்களாக்கும். இல்லாவிட்டால், தஷ்வந்தின் கதைகள் பொதுமக்களான நம்மை கொதிப்புக்குள்ளாக்குவது தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக