வெள்ளி, 8 டிசம்பர், 2017

சென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு!

நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்?
கி புயலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் இன்று (08.12.2017) காலை 10:30 மணியளவில் கோட்டை நோக்கிப் பேரணி நடத்தப் போவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
இன்று காலையில்  சென்னை நொச்சிக் குப்பம், ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம்,  திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகளும் மீனவர்களும் நொச்சிக் குப்பம் பகுதியில் காலையில் குவிந்தனர்.


காலையில் 10:00 மணியளவில் பேரணி தொடங்கவிருந்த கலங்கரை விளக்கம் பகுதி அருகே சுமார் 100 -க்கும் அதிகமான போலீசைக் குவித்து வைத்திருந்தது அரசு. மேலும், மீனவர்களின் பேரணியைத் தடுத்து அவர்களைக் கைது செய்யத் தயாராக 3 மாநகராட்சிப் பேருந்துகளையும், 2 போலீசு வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது போலீசு.
சுமார் 10:30 மணியளவில் அங்கு மீனவர்கள் குழும ஆரம்பித்தனர்.
அங்கு வந்த போலீசு அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டியது. மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராட அனுமதிக்குமாறு கேட்டனர். பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி பேரணிக்கு அனுமதிக்க முடியாது என்று கூறியது போலீசு.
மீனவர்கள் நொச்சிக் குப்பம் பகுதியில் இருந்து வெளியே சாலைக்கு அருகில் கூட பேரணியாகச் செல்ல முடியாதவாறு அவர்களது குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே அவர்களை மடக்கி கைது வாகனங்களில் ஏற்றியது போலீசு. இப்படி ஒரு போராட்டம் நடக்கிறது, இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது மக்களில் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு போராட்டத்தை முடக்க முயற்சித்தது போலீசு.

போராடும் மீணவர்களை கைது செய்து மாநகரப் பேருந்தில் ஏற்றும் போலீசார்.
வாகனங்களில் ஏற்றப்பட்ட மீனவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் ஆர்ப்பாட்டங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் இறக்கி விட்டது போலீசு. பின்னர் அங்கு தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர் மீனவர்கள்.
முதலில் பேசிய மீனவர் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்? ஹெலிகாப்டர், விமானம் வைத்து தேடலாமே. இதில் அரசு சுணக்கம் காட்டுவது ஏன்?
கேரள அரசு தனது மீனவர்களுக்கு காட்டும் அக்கறையை தமிழக அரசு ஏன் காட்டவில்லை. கேரள அரசு, தேடுதல் பணிக்கு மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வரும் சூழலில், தமிழக அரசு மத்திய அரசுக்கு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துவது கூட இல்லை.
மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ, எத்தனை மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றார்கள்,  அன்றாட மீன் பிடிப்புக்கு எத்தனை பேர் சென்றார்கள் என்பது கூடத் தெரியவில்லை. மத்திய மாநில அரசுகள் மீனவர்களை தேடுவதில் அக்கறை செலுத்தவில்லை” என்று கூறினார்.

விருந்தினர் மாளிகை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்கள்
அவரைத் தொடர்ந்து பேசிய ஊரூர்குப்பம் மீனவர் சங்கச் செயலாளர் சுந்தரமூர்த்தி, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மீனவர் பேரவைகளின் பிரதிநிதிகள் மட்டுமே தற்போது கலந்து கொண்டுள்ளோம். தற்போது இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து, எங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை எனில், அனைத்து மீனவ கிராம மக்களையும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம்.
மீனவர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதால் தான் மத்திய அரசுக்கு அந்நிய செலாவணி அதிகமாக வருகிறது. மீனவர்களின் உழைப்பில் இருந்து வருமானம் தேடத் தெரிந்த இந்த மத்திய அரசுக்கு, மீனவர் நலனில் அக்கறை காட்டத்தெரியவில்லை. இந்த அரசு, மீனவர்களை இளக்காரமாகவே நடத்துகிறது. சுருக்கமாகக் கூறினால், மீனவர்களை வஞ்சிக்கிறது இந்த அரசு. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் பலனை அவர் அனுபவித்தார். இந்த அரசு மீனவர்கள் நலனில் பாராமுகமாக இருக்கிறது” என்று பேசினார்.
தொடர்ந்து பல்வேறு மீனவர் சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். மீனவர்கள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி வருகிறார்கள். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மெரினாவில் மாணவர்களையும், இளைஞர்களையும் போலீசின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியவர்கள் மீனவர்களே. இன்று அவர்களது பிரச்சினையில் நாம் பாராமுகமாக இருக்கப் போகிறோமா? 
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
-வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக