வெள்ளி, 22 டிசம்பர், 2017

சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா !

ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற…உள்ளே சென்று என்ன செய்கிறாய்… ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள்
சான்மினா நிறுவனத்தின் கொடுங்கோன்மைக்கெதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
வினவு :சென்னை ஒரகடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனம் சான்மினா. இது மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா மின்னணு பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் அமெரிக்காவின் “பார்ச்சூன் 500” நிறுவனங்களில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பத்தொன்பது நாடுகளில் 80 தொழிற்சாலைகள், 50,000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. 2006-ம் ஆண்டின் வருமானமாக 11 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது இந்நிறுவனம். இந்திய மதிப்பின்படி 44,000 கோடி ரூபாய்.
தமிழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் பல்வேறு சலுகைகளுடன் கடந்த 2007ம் ஆண்டு சென்னை ஒரகடத்தில் நிறுவப்பட்டது சான்மினா. இதற்காக நூறு ஏக்கர் நிலம் 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தண்ணீர், மின்சாரம், பத்திரப்பதிவு உள்ளிட்டவை அனைத்தும் இலவசம். முதல் மூன்று ஆண்டிற்கு 225 கோடியிலிருந்து 315 கோடி ரூபாய் வரை முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு இதுவரை ஐநூறு கோடிக்கும் அதிகமான வரிச்சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக 1325 பேரையும் பிறகு 4000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது சான்மினா. ஆனால் இந்த பத்து வருடத்தில் இதுவரை வெறும் 400 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதில் முப்பது பேர் பெண் தொழிலாளர்கள்.
இவர்கள் அனைவரும் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது, ஐடிஐ, டிப்ளமோ முடித்துவிட்டு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்களாவார்கள். இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் 15,000 இருந்து 21,000 வரைதான். அதுவும் சொற்ப எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான சலுகைகளையும் இந்நிறுவனம் மறுத்து வருகிறது. இவ்வாறு தொழிலாளர்களை கசக்கி பிழிந்ததன் விளைவாக அதே இடத்தில் இரண்டு லைன்களாக இருந்ததை எட்டு லைன்களாக மாற்றி இரண்டு ஆலைகளை நிறுவியுள்ளது.
தொழிலாளர்களின் மீதான அடக்குமுறை, உழைப்பு சுரண்டலை எதிர்த்து சான்மினா நிறுவனத்தின் ஊழியர்கள் 2017 நவம்பர் மாதம் 21-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி முப்பது நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.
சான்மினா நிறுவனத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசும்போது,
“நாங்கள் அனைவரும் நிறுவனத்தின் நிரந்தர ஊழியகள் தான். சுமார் பத்து ஆண்டாக இதில் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம்.
இந்நிறுவனம் அரசின் எந்த சட்டதிட்டங்களையும் மதிப்பதே இல்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான ஊதியத்தைக் கூட கொடுப்பது இல்லை. கேண்டீன் உணவு மிகவும் மோசம்.

தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டம்
அதேபோல, போக்குவரத்து வசதி இல்லாததால் வீட்டிற்கு செல்வது மிகவும் சிரமம். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் தொழிலாளிகள் சொந்த காசில் தான் வருகிறார்கள். கம்பனி பேருந்து பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் வரை தான் செல்கிறது. ஆனால் தொழிலாளர்கள் பலர் திருவெற்றியூர், வியாசர்பாடி, காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், செங்கல்பட்டு, திருத்தணி, அரக்கோணம் என்று தொலைவில் இருந்து வருவோர் தான் அதிகம். இரவு நேர ஷிப்டு முடிந்து வீட்டிற்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் நாங்கள் தினம்தோறும் பேப்பர் ஏற்றும் லாரிகளில் லிப்ட் கேட்டு தான் வீட்டுக்கு செல்கிறோம்”. இவை தொழிலாளர்களின் வாக்குமூலம்.
மேலும், பெண் தொழிலாளிகள் நிலையும் கொடுமையானது. அடிக்கடி கழிவறைக்கு செல்ல அனுமதி இல்லை. சிறிது தாமதமானாலும் தகாத வார்த்தைகளால் மேலாளர்கள் ஏசுகிறார்கள். உள்ளே சென்று வர எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்தற்கு ஒரு கார்டு கொடுக்கிறார்கள். அதனை ஸ்வைப்பிங் செய்தால் தான் கதவு திறக்கும்.
இதன் மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு கழிவறை செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கணக்கிட்டு மிரட்டுகிறார்கள். “ஏன் அடிக்கடி கழிவறைக்கு போற…உள்ளே சென்று என்ன செய்கிறாய்… ஒரு ஆள் போட்டா பார்க்க முடியும்” என்று பெண் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். இதற்கு பயந்தே பெண்கள் கழிவறைக்கு செல்ல தயங்குவதாக கூறுகிறார்கள். இவற்றைப் பார்த்தால் இந்நிறுவனம் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாளித்துவ ஆலைகளை நினைவுபடுத்துகிறது எனலாம்.
மேலும் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை. SMT (Surface-mount technology) மின்னணு பரப்பிணைப்பு தொழில்நுட்ப  பிரிவில் வேலை செய்யும் பெண்களுக்கு கருக்கலைப்பும், ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் ஏற்படுவதாக தொழிலாளிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் தீங்கு விளைவிக்க கூடியது என்று தடை செய்யப்பட்ட காரீயத்தைக்  (lead ) கொண்டுவேலை செய்வதால் கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
அதேபோல் பற்றவைக்கும் நிலையத்தில் இருந்து சால்டிரிங் வேலை செய்தால் அதனை குளிர்விக்கப்பட்ட பின்தான் வெளியே எடுக்க வேண்டும். அதற்கென்று தனி செய்முறை உள்ளது. அவ்வாறு செய்தால் தாமதமாகும் என்று அதன் மூடியை திறந்து விடுகிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் அமிலத்தன்மை கொண்ட நச்சு வாயுக்களை சுவாசிப்பதனால் பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும் கூறுகிறார்கள்.

தலைமை செயலகம் முற்றுகை
15,000-லிருந்து 21000-மாக சம்பளம் உயர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கினார்கள். அதனால் பல தொழிலாளர்கள் இன்சூரன்சில் பெற்றுக் கொள்ளலாலம் என்று அதற்குரிய சிகிச்சை பெற்றார்கள். ஆனால் இன்சூரன்சில் நிறுவனம் பணம் போடவில்லை. நிர்வாகத்திடம் கேட்டதற்கு எங்களை கேட்காதீர்கள் என்று கைகழுவினார்கள்.
இவ்வளவு அடக்குமுறைகளை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாட்கள் அமைதியாக இருக்க முடியும்? அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஏஐசிசிடியூ AICCTU சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு தொடக்கம் முதலே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மார்ச் மாதம் தொடங்கிய பிரச்சனையில் தொழிலாளர் உதவி சமரச ஆணையத்திடம் 35 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதன் பிறகு DCL ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொடர்ச்சி தான் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் அடிப்படை.
கடந்த மார்ச் மாதம் தரமான உணவு கேட்டு நடத்திய போராட்டத்தில் எட்டு நாட்கள் சம்பளம் பிடித்தார்கள். அதன் பிறகு சக தொழிலாளி ஒருவரை தரக்குறைவாக பேசியதால் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஐந்து நாட்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்திற்கு எட்டு நாட்கள் சம்பளம் பிடித்தார்கள். அதில் நான்கு பேரை எந்த காரணமுமின்றி பணியிடை நீக்கம் செய்தார்கள். அதனை கண்டித்து நடத்திய போராட்டத்தில் எட்டு நாட்கள் என்று மார்ச் மாதம் மட்டும் 21 நாட்கள் சம்பளத்தை பிடித்தார்கள்.
தற்போது நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எட்டு நாட்கள் என்று மொத்தம் 30 நாட்கள் சம்பளம் பிடித்துள்ளார்கள். இத்தனைக்கும் இது முறையாக நோட்டிஸ் கொடுத்து நடத்த்தப்படும் வேலை நிறுத்தம் தான். மேலும் சங்கத்தின் முன்னணியாளர்கள் பதினைந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியில் வைத்து சம்பளம் கொடுக்கிறார்கள். இவை அனைத்தையும் சட்ட விரோதமாக செய்து வருகிறது சான்மினா நிர்வாகம்.
மேலும் தொழிலாளிகள் கூறுவதைக் கேளுங்கள்.
“2007-லிருந்து 2011 வரை எங்கள் யாருக்கும் இன்கிரீமென்ட் இல்லை. அதன் பிறகு 75,150 என்று போட்டார்கள். யூனியன் ஆரம்பித்த பிறகு தான் முதலில் 1250, 2250 உயர்த்தினார்கள். அதுவும் ESI,PF,மாத்தூர் பஞ்சாயத்து பணம் பிடித்துக்கொள்வது என்று கையில் வாங்கும் சம்பளம் 12,500 தான். இந்நிலையில் சம்பளத்தை ஒவ்வொரு முறையும் பிடித்துக் கொண்டால் நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும் சொல்லுங்கள்?
இந்த வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படக் கூடாதென்று காண்ட்ராக்ட் முறையில் ஊழியர்களை நியமித்து வேலையை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது நிர்வாகம்.

உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்பின் படி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் பொழுது புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க கூடாது என்று உள்ளது. ஆனால் அதனை மீறி தற்போது 600 பேரை ஒப்பந்த பணியாளராக எடுத்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது மட்டுமல்லாமல் மக்கள் விரோதமானதும் கூட.
உள்ளே தயாரிக்கும் பொருட்கள் என்பது மருத்துவ துறைக்கு பயன்படுத்தப்படுபவை. அதாவது, அல்ட்ரா சவுண்டு, ஈ.சி.சி., கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பரிசோதனை செய்யும் கருவி, எம்ஆர்ஐ ,இன்குபேட்டர் ஆகியவை தயாரிக்கின்றோம். இந்த வேலையை செய்ய அனுபவம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்தினால் தயாரிப்பில் நிச்சயம் தவறு நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இருந்தும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் உற்பத்தி நின்று விடக்கூடாது என்று அடாவடியாக மிரட்டி வருகிறது நிர்வாகம்.
கிண்டியில் உள்ள தொழிலாளர் துறையில் உள்ள பேக்டரி இன்ஸ்பெக்டரிடம் சான்மினா நிர்வாகம் சட்ட விரோதமாக ஆட்களை எடுத்திருக்கிறார்கள் என்று புகார் மனு அளித்தோம். அதனடிப்படையில் ஆய்வு செய்து விட்டு, “சட்ட விதிகளை மீறித்தான் ஆட்களை எடுத்திருக்கிறார்கள்.ஆனால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தான் இவர்களை வெளியேற்ற முடியும்” என்று கூறிவிட்டார்.
உண்மையில் இப்பணி என்பது மிகவும் சிரமமானது. எந்த அனுபவுமும் இல்லாத ஒப்பந்த தொழிலாளிகளால் இதனை செய்ய முடியாது. அல்ட்ரா சவுண்டு பொருளை ஒரு ஷிப்டுக்கு 200 முறை அடிக்க வேண்டும். இதனை சீனியர் ஆப்புரேட்டராலேயே அடிக்க முடியாது. அதன் டார்கெட் நாற்பது நம்பர் ஆக உள்ளது. அந்த அளவிற்கு லோடிங் வரும். ஓய்வே இருக்காது. இரண்டாவது அடிப்படை வேலைகள், பல்வேறு தொழில் நுட்ப வேலைகளில் பிழை வரும். அதனை எல்லாம் சரி செய்ய வேண்டும். சோதனை செய்வது முதல் திரும்ப செய்வது வரை வேலை அதிகம். இதனை சீனியர் ஆப்புரேட்டர் செய்ய வேண்டும் என்றாலே கழிவறைக்கு செல்ல முடியாது, சாப்பிட முடியாது என்று வேலை இழுக்கும்.
மூன்று விநாடி தவற விட்டாலே ஒரு போர்டு குறைந்து விடும். அப்படி குறைந்து விட்டால் ஏன் குறைந்தது என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட வேலையை அனுபவம் இல்லாத ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பார்க்கிறார்கள். தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் மனித உயிர் சம்பந்தப்பட்ட வேலையில் விதிகளை மதிக்காமல் உற்பத்தியை மட்டும் குறிக்கோளாக கொண்டு இந்த நிர்வாகம் இயங்குகிறது.

மழையில் தொடர்ந்த போராட்டம்
இந்நிலையில் தான் கடந்த பதினெட்டாம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டோம். அதனையடுத்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு வந்த தொழிலாளர் சமரச ஆணையத்தின் சார்பில் இந்த பிரச்சனை குறித்து பரிசீலிக்கிறோம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் எழுத்துப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
நிர்வாகமும்,போலிசும் இந்த போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நிர்வாகம் 80 பேருக்கு இடைநீக்க உத்திரவு தயாராகி வருகிறது என்று மிரட்டுகிறது. போலிசோ FIR போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறது.
எங்கள் போராட்டம் நியாயமானது. எங்கள் கோரிக்கை சட்ட விரோதமாக செயல்படும் இந்த சான்மினாவை அரசு ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர் உரிமை பாதுக்காக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை நிறைவேறும் வரை போராடுவோம்.
எங்கள் போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கத்திடமும், அருகில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டுள்ளோம். எங்கள் போராட்ட செலவினங்களை தொழிலாளர்களாகிய நாங்களே பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்கிறார்கள் சன்மினா தொழிலாளர்கள்.
முதலாளித்துத்தின் லாபவெறிக்கு தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டல், இரக்கமற்ற கொத்தடிமை முறை என்பது மட்டுமல்லாமல் மக்களையும் கொல்லும் என்பதற்கு சிறந்த சான்று சான்மினா. ஒரு அமெரிக்க நிறுவனம் கொழிப்பதற்கு தொழிலாளர்களை வதைத்து, செய்யும் மருத்துவ பொருட்களையும் பயிற்சி இல்லாத பகுதி நேர தொழிலாளிகளை வைத்து தயாரிக்கிறார்கள். இது முதலாளித்துவம் மற்றும் அமெரிக்காவின் அநீதி! இதை தகர்ப்பதுதான் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கான நீதி
– வினவு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக