செவ்வாய், 12 டிசம்பர், 2017

(கௌசல்யா) சங்கர் ஆணவக்கொலை .. 6 பேருக்கு தூக்குத்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மூன்றுபேரை விடுதலை

tamilthehindu :திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 6 பேருக்கு தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூன்றுபேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது.
தீர்ப்புக்கு பின்னர் அதை வரவேற்ற கவுசல்யா பேட்டி அளித்தார். அதில் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற மூவர் விடுதலையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் கௌசல்யாவின் பேட்டி:
“என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதன்மையாக கொலை வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்திருப்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் என் வழக்கை தனித்துவத்தோடும், சாதியப் பின்புலத்தோடும் நீதித்துறை அணுகியதாகவே கருதுகிறேன்.
இதுவும் இனி வரும் சாதிய கவுரவக் கொலைகள் வழக்குகளுக்கு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறேன். அதிலும் அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனை பெரும்பாலான குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூக்குதண்டனை குறித்த எனது பார்வை வேறாக இருந்தாலும். சாதி வெறியர்களுக்கு இனிமேல் கவுரவக்கொலை செய்ய மனத்தடையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த தீர்ப்பு மிக முக்கியமானது.
இப்படிப்பட்ட வழக்குகளில் என் வழக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவிலேயே முதன் முறை என்பதால் என்னுடைய காத்திருப்பு வீண் போகவில்லை. இரட்டைத்தூக்கு, இரட்டை ஆயுள் போன்ற தண்டனைகள் குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிக்கக் கூடாது என்பதையே காட்டுகிறது. எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
இந்த வழக்கில் முக்கியமானவர்களான அன்னலட்சுமி , பாண்டியன், பிரசன்னா ஆகியோருக்கு விடுதலை வழங்கியுள்ளதைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரையில் என் சட்டப் போராட்டம் தொடரும். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தாலும் அதையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவேன். இந்த போராட்டத்தில் ஒருபோதும் சளைக்கமாட்டேன்.
பொதுவாக நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே நம்பிக்கையுடன் இந்த மூவரின் விடுதலையை எதிர்த்து இறுதி வரை சட்டப்படியான போராட்டம் நடத்துவேன். சட்டப் போராட்டத்திலும், களப் போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். ஏனென்றால் சங்கருக்குரிய நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கி இருக்கவில்லை, சாதிய கவுரவ கொலைக்களுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்குரிய நீதியாக நான் கருதுகிறேன்.
அதற்கு இந்த தீர்ப்பு துணைசெய்யும் என்று நம்புகிறேன். தீர்ப்பு வழங்கப்பட்ட இன்று நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூவர் விடுதலையையொட்டி எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் உயிராபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். இரண்டு குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சங்கர் வழக்கு தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், போராட்ட குழுவினருக்கும், நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றி.”
இவ்வாறு கவுசல்யா தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக