செவ்வாய், 5 டிசம்பர், 2017

சவுக்கு :" ஜெ".. பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு நபர் இருப்பார் என்பதை 27 செப்டம்பர் 2014 வரை நம்பவில்லை.

Savukku : "விரும்பாத வேள்வி " ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், இதர அமைச்சர்களும், இன்று கருப்பு சட்டை அணிந்து,  வசனம் கிடைக்காத ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போல, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமைதி ஊர்வலம் சென்றார்கள்.
ஜெயலலிதாவின் இந்த நினைவு நாளிலும், தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்தி, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் படங்கள் அடங்கிய பேனர்கள், சென்னை நகரெங்கும் வைக்கப்பட்டிருந்தன.
ஜெயலலிதா இறந்த இந்த ஒரு ஆண்டில், அவர் தமிழகத்துக்கு விட்டுச் சென்றது என்ன என்று கேட்டால், வெறுமை மட்டுமே எஞ்சியிருக்கிறது.   அரசியலில் இறங்கி வெற்றி பெறும் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணத்துக்காக இறங்குவார்கள்.  இடது சாரி இயக்கத்தில் தொடக்க காலத்தில் நுழையும் பலர், நாளையே யுகப்புரட்சி நடந்து, செங்கோட்டையில் செங்கொடி பறக்கும் என்ற கனவோடு வருவார்கள்.   பிற கட்சிகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் மற்றும் கனவு இருக்கும்.
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வெற்றி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிப்பார்கள்.   எப்போதும் தங்களைப் பற்றிய செய்தி தொடர்ந்து உலவிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை விரும்புவார்கள்.  ஒரு வகையில் அரசியலில் இருப்பதானால், ஒரு வகையான நார்சிசிஸ்டாக இருக்க வேண்டும்
.
திமுக தலைவர் கருணாநிதிக்கு, உணவு, குடிநீர், மூச்சு என அனைத்துமே அரசியல்தான்.     அரசியலை ஒவ்வொரு வினாடியும் நேசித்தவர் அவர்.   திமுக ஆட்சியில் இல்லாமல், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதெல்லாம், தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையும், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதையும், முக்கிய விவகாரங்களில் அறிக்கை வெளியிடுவதையும் வழக்கமாகவே வைத்திருந்தார்.
ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறானவர் ஜெயலலிதா.    சூழ்நிலைகளே அவரை அரசியலுக்கு தள்ளின.  ஒவ்வொரு முறையும், நெருக்கடிகளின் காரணமாகவே தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டார்.
எம்ஜிஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த ஆர்எம்.வீரப்பன்தான் நிழல் முதல்வர்.  காவல்துறை முழுமையாக அவர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.   எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்து இந்தியா திரும்பும் நாளன்று, அவரை வரவேற்பதற்காக ஜெயலலிதாவும் விமான நிலையம் செல்கிறார்.   அப்போது, ஜெயலலிதாவை எம்ஜிஆரை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்பதே காவல்துறையினருக்கு வீரப்பன் இட்ட உத்தரவு.   சென்னை மாநகர காவல் துறையின் உளவுப் பிரிவினர், விமான நிலையம் சென்று, விமான நிலையத்தின் மற்றொரு வாயிலுக்கு ஜெயலலிதாவை அழைத்துச சென்றனர்.    ஆனால், வேறொரு வாயில் வழியாக எம்ஜிஆர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  ஜெயலலிதா பின்னாலேயே எம்ஜிஆர் வீட்டுக்கு வந்து, பெரும் சிக்கலை இழுத்து விடப் போகிறாரே என்று, காவல்துறையினர் ஜெயலலிதாவை வீடு வரை சென்று விட்டு வந்தனர்.  காவல்துறையினர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா, “யு ஹேவ் ஆல் சீட்டட் மி” என்று கத்தினார்.  ஆனால் அதன் பின் வேறு எதுவும் பேசவில்லை என்று அப்போது உளவுப் பிரிவில் இருந்த ஒரு அதிகாரி கூறினார்.

அதன் பின் எம்ஜிஆர் இறந்தபோது, அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் ஏறிய ஜெயலலிதா வலுக்கட்டாயமாக தள்ளி விடப்பட்டார்.  கட்சி இரண்டாக பிளவுபட்டது.   ஜெ அணி, ஜானகி அணி என்று தனித்தனியாக உடைந்தது அதிமுக.   அப்போது, ஜானகி அணியைச் சேர்ந்தவர்கள், ஜெயலலிதாவை பேசியது போல, திமுகவினர் கூட ஒரு நாளும் பேசியது கிடையாது.  அத்தனை அவதூறுகளும், ஆபாச வசவுகளும் ஜெயலலிதா மீது அள்ளி வீசப்பட்டன என்கிறார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.   ஜெயலலிதாவை அப்போது வசைச் சொல் வீசியவர்களில், முக்கியமானவர்கள் பா.வளர்மதி மற்றும் சைதை துரைசாமி.
1989 தேர்தல், அதிமுக ஜெயலலிதா பின்னால்தான் என்பதை உணர்த்தியது.    ஜானகி அரசியலில் இருந்து விலக, அதன் பின், ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சி முழுமையாக வந்தது.   போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா எம்எல்ஏவாக ஆனாலும், தொடர்ந்து சட்டப்பேரவைக்கு செல்வதோ, விவாதங்களில் பங்கேற்கும் வழக்கமோ அவரிடம் கிடையாது.  தன்னுடைய வேதா இல்லத்தில் எப்போதும் தனிமையில் இருப்பதையே அவர் விரும்பினார்.   எப்போதாவது இரு மாதங்களோ, நான்கு மாதங்களுக்கோ ஒரு முறை தன் வீட்டின் பால்கனியில் இருந்து காட்சி தந்து கீழே இருக்கு ஏதோ நெருக்கடியின் காரணமாக, தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போ திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
தேர்தலில் போட்டியிட டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் மீது பலர் புகார் அளித்தனர்.  அதன் அடிப்படையில் நடராஜன் கைது செய்யப்பட்டார்.   அதையொட்டி அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.   அந்த சோதனையில், ஜெயலலிதா தன் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெயலலிதா எழுதியிருந்தார்.
அதை திமுக கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், ஜெயலலிதா ஒரு வேளை அரசியலை விட்டு விலகிக் கூட இருக்கலாம்.  ஆனால் அப்போது டிஜிபியாக இருந்த துரை, முதல்வர் கருணாநிதியோடு விவாதித்து விட்டு, கடிதத்தை அப்போதைய சபாநாயகர் தமிழ்க் குடிமகனிடம் கொடுத்தார்.  தமிழ்க் குடிமகன் அந்த கடிதத்தை சபாநாயகரின் செயலருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார்.
எப்போதும் ஜெயலலிதாவின் அறிக்கைகள், யார் மூலமாவது கொடுத்தனுப்பப்படும், அல்லது ஃபேக்ஸ் மூலம் அனுப்பப்படும்.   ஆனால் அன்று பத்திரிக்கையாளர்களை தனது வீட்டுக்கே வரவழைத்து சந்தித்தார்.
“எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிவிடுவதாக எவ்விதமான கடிதத்தையும் சபாநாயகருக்கு நான் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, உதவியாளர் மூலமாகவோ அனுப்பவில்லை. ‘அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன்’ என எந்த அறிக்கையையும் செய்தித்தாள்களுக்கு அனுப்பவில்லை. என்னுடைய உடல்நிலை 1987-ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ளும் எண்ணத்தில், இம்மாதம்  ஓர் அறிக்கையும் சபாநாயகருக்கு ஒரு கடிதமும் தயாரித்தேன். இவை இரண்டையும் என்னுடைய குடும்ப நண்பர் நடராசனிடம் கொடுத்திருந்தேன். ஆனால், கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘இந்தக் கடிதத்தையும் அறிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பவோ, செய்தித்தாளில் வெளியிடவோ வேண்டாம்’ என்று நடராசனிடம் தெரிவித்து விட்டேன். இவை யாவும் 15-ம் தேதியே முடிந்துவிட்டன. ஆனால் 18-ம் தேதியன்று நடராசன் மீது போலீஸார் பல பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர் வீட்டில் திடீர் சோதனையிட்டு, அந்த வழக்குக்குத் தொடர்பில்லாத பல ஆவணங்களைச் சட்ட விரோதமாக எடுத்துச் சென்றனர். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களில் 15-ம் தேதியிட்ட கடிதமும் அறிக்கையும் அடங்கும்.
அ.தி.மு.க-வின் வளர்ச்சியை மறைத்திடவும், என்னைத் தனிமைப்படுத்தி அழித்திடும் தீய நோக்கத்தோடும் போலீஸாரைக் கருணாநிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தக் கடிதங்களைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்கி, சபாநாயகருக்குக் கடிதம் அனுப்புவேன்’”  என்று அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி, ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.

அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்யும் மனநிலையில்தான் இருந்தார்.
1991 தேர்தல், ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.  ராஜீவ் மரணத்தை ஒட்டி நடந்த அந்த தேர்தலில், ராஜீவ் மரணத்துக்கு ஒரு வகையில் திமுக காரணம் என்று மக்கள் நம்பி, திமுகவை படு தோல்வி அடைய வைத்தார்கள்.
அதன் பிறகு ஒரு ஆட்சியை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஆட்சி நடத்தினார் ஜெயலலிதா.  தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவி, மனம் போன போக்கில் விளையாட கிடைத்த ஒரு பொம்மை என்று ஜெயலலிதா கருதினாரோ என்று தோன்றுகிறது.   கண்ணில் பட்ட சொத்துக்களையெல்லாம் வாங்கிக் குவித்ததும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவித்து, மகாமகக் குளத்தில் தோழியோடு ஊரே வேடிக்கை பார்க்க குளித்து, பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தையெல்லாம் ஜெயலலிதா ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
அத்தனை நாள் பதவியும் அதிகாரமும் இல்லாத ஒரு குழந்தையிடம் உச்சபட்ச அதிகாரம் குவிக்கப்பட்டால் எப்படி அந்த குழந்தை நடந்து கொள்ளுமோ அப்படியெல்லாம் ஜெயலலிதா நடந்து கொண்டார்.   தனக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டித்தது, ரவுடிகளையும், காவல்துறையையும் பயன்படுத்தி, எதிரிகள் அனைவரையும் சூறையாடியது, எதிர்த்துப் பேசிய ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசியது என்று ஜெயலலிதா செய்த காரியங்கள் இவர் ஒரு மனிதரா, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் செய்வாரா என்று பெரும்பாலான மக்களிடையே வியப்பையே ஏற்படுத்தியது.

எந்த ஜெயலலிதாவுக்கு மக்கள், வாக்குகளை அள்ளி அளித்து அவரை முதல்வராக்கினார்களோ, அதே ஜெயலலிதாவை 1996 சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைய வைத்தார்கள்.  ஜெயலலிதாவே பர்கூரில் சுகவனம் என்ற திமுக வேட்பாளரிடம் தோற்றார்.
தேர்தலில் கிடைத்த படுதோல்வியால், அதிமுகவின் உள்ளேயே ஜெயலலிதா சசிகலாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.    வேறு வழியே இல்லாமல் சசிகலாவை வெளியேற்றினார்.
ஆனால் ஒரு சில மாதங்களிலேயே ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.    “தமிழக முதல்வர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், சசிகலாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்து கொண்டனர்.  சசிகலா என்னோடு நெருக்கமாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் பழி வாங்கப்பட்டார்.    தேர்தல் தோல்விக்கு சசிகலா காரணம் அல்ல.   கட்சிக்கு உள்ளேயே எனக்கு எதிரானவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் காரணமாகவே என் வாழ்வில் ஏற்ற தாழ்வுகளின்போது என்னோடு கூடவே இருந்த சசிகலாவின் உறவை முறிக்க நேர்ந்தது.  அவர் சிறையில் இருந்தபோது கூட நான் அவரை சென்று பார்க்கவில்லை”  என்று போயஸ் தோட்டம் வந்த சசிகலாவை, வாசலுக்கு சென்று தன் கையால் செய்த கேசரியை வழங்கி வரவேற்றார்.
அதிமுகவில் அடிமட்டத் தொண்டன் வரை, சசிகலா இல்லாமல் அம்மா இல்லை என்பதை புரிந்து கொண்டான்.
1996 தேர்தல் தோல்வி ஜெயலலிதாவை நிலைகுலைய செய்தது.  அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கே வந்தார்.    பாஸ்கரன் என்பவர், அப்போதெல்லாம் தேர்தல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்.    அதிமுகவுக்காக இது போன்ற பல ஆய்வுகளை அவர் செய்து கொடுத்துள்ளார்.   1996 தோல்விக்கு பிறகு, அரசியலை விட்டு விலகலாம் என்று மீண்டும் முடிவெடுத்தார் ஜெயலலிதா.
அந்த பாஸ்கரனை அழைத்து, அப்போது ஆங்கிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த அவுட்லுக் இதழை காண்பித்து, இது போல ஒரு வார இதழை தொடங்க வேண்டும் என்றும், அது தொடர்பான ஆய்வுகளை செய்து, தேவையான ஆதாரங்களோடு வருமாறு அவரிடம் கூறினார்.  அதன்படி, பாஸ்கரன் வந்து அவர் வீட்டில் காத்திருந்த நாள் 7 டிசம்பர் 1996.
அன்று காலையிலேயே, தமிழகத்தின் சிபி.சிஐடி அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.    காவல்துறை கைது செய்து, ஜெயலலிதாவை அழைத்துச் சென்றதும்,  சொத்துக் குவிப்பு வழக்கில் சோதனை செய்வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைந்தது.   அன்று முதல் ஒரு வாரத்துக்கு அந்த வீடு லஞ்ச ஒழிப்புத் துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது.   அன்று நடந்த அந்த சோதனைகள் தொடர்பான ஆவணங்களில் எல்லாம் கையொப்பம் இட்டவர், அந்த பாஸ்கரன்தான்.
அந்த வீட்டில் சோதனை நடத்தியபோதுதான், ஜெயலலிதா எத்தனை ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார் என்ற விபரமே உலகத்துக்கு தெரிய வந்தது.   600 ஜோடி செருப்புகள்.  1600 க்ரிஸ்டல் கண்ணாடி குவளைகள், நகைகள், என்று ஜெயலலிதாவின் ஆடம்பரம் வெளியுலகுக்கு தெரிந்தது.    தமிழகத்தின் முதல்வர் என்ற மிக அதிக பொறுப்புடைய பதவி அவருக்கு கிடைத்திருந்தாலும், ஒரு சாதாரண பெண் போன்று, அலங்கார உடைகள் உடுத்துவது, அந்த உடைகளை உடுத்தி, சசிகலாவோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று ஒரு தனிமையான வாழ்வை ஜெயலலிதா விரும்பியிருக்கிறார்.

சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா இனி நான் நகைகளே அணிய மாட்டேன் என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தார்.  ஆனால் அவரால் அந்த ஆடம்பர வாழ்வை விடவே முடியவில்லை.    இறக்கும் வரை அவர் அணிந்திருக்கும் கைக் கடிகாரங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 35 லட்சம் இருக்கும்.   ஒரு முறை, ஜெயலலிதா, 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரத்தை விரும்பி வாங்கி அணிந்ததாக கூறிய கார்டனோடு நெருக்கமான தொழிலதிபர். இதுதான் அவர் வாழ்ந்த தவவாழ்வு என்றார்.
அரசியலை விட்டு விலகி, பத்திரிக்கை தொடங்கலாம் என்ற முடிவில் இருந்த ஜெயலலிதாவை, அவரது கைதும் சிறைவாசமும் அடியோடு மாற்றியது.    அப்போது மத்திய சிறை, சென்னை சென்ட்ரல் அருகே இருந்தது.   சிறைக்கு வெளியே கூவம் ஆறு.   கொசு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டுமா ?   அப்போது, ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவரது செல்லுக்குள், பெரிய பெருச்சாளி ஒன்று நுழைந்தது.   அது வரை வாழ்க்கையில் பெருச்சாளி போன்ற உயிரினங்களை புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்த ஜெயலலிதா அதைப் பார்த்து அலறினார்.  மறுநாள் சிறை அதிகாரி, அந்த செல்லுக்குள் இருந்த ஒரு ஓட்டையை ஒரு அட்டையை வைத்து அடைத்து, பெருச்சாளி வராமல் தடுத்தார்.
அப்போது சிறையில் இருந்த ஜெயலலிதாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர், கொசு கடித்ததில், ஜெயலலிதாவின் உடல் முழுக்கவும், முகத்திலும், புள்ளி புள்ளியாக சிவந்து காணப்பட்டது என்றும், அவர் இரவு முழுவதும் உறக்கமில்லாமல் மிகவும் பதட்டமாக இருந்தார் என்றும் கூறினார்.
அந்த 27 நாள் சிறைவாசம், ஜெயலலிதாவை வீறு கொண்டு எழ வைத்தது.   ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதோ என்று எழுந்த கருத்துக்களை உடைத்து எரிந்தார்.    1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று, அவர் தயவில் மத்தியில் பிஜேபி அரசு அமைந்தது.   ஜெயலலிதாவின் அந்த விஸ்வரூபத்தை திமுகவோ, கருணாநிதியோ கூட எதிர்ப்பார்க்கவில்லை.
1999 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பிஜேபியோடு கை கோர்க்க, 2001 சட்டமன்றத் தேர்தலில், ஒரு மெகா கூட்டணியை அமைத்து வெற்றி பெற்றார்.   கடந்த கால அனுபவங்களில் இருந்து ஜெயலலிதா எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே அவரது 2001 ஆட்சி நிரூபித்தது.    தன்னை சிறையில் அடைத்தார் என்பதற்காக கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார்.    ஜெயலலிதா போல, சொகுசு காரில் பள்ளி சென்றவரல்ல கருணாநிதி.   தான் கைது செய்யப்பட்டதையே தனக்கு சாதகமாக்கி, ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடியை உருவாக்கினார். அடுத்தடுத்து ஜெயலலிதா செய்த தவறுகள் 2004 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு 40 இடங்களிலும் தோல்வியை பெற்றுத் தந்தது.
2006ல் ஆட்சி பறிபோனது ஜெயலலிதாவுக்கு ஒரு வகையில் வசதியாகிப் போனது.  வருடத்தில் பாதி நாட்கள் கொடநாடு பங்களாவுக்கு சென்று ஓய்வெடுத்தார்.  அவ்வப்போது அறிக்கை விடுவார்.   ஒரு புறம் சொத்துக் குவிப்பு வழக்கு நெருக்கடி தர, 2011 தேர்தலில் வென்றே ஆக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.  மீண்டும் ஒரு பிரம்மாண்ட கூட்டணியை அமைத்து மாபெரும் வெற்றியை பெற்றார்.
2014ம் ஆண்டுகளில் எல்லாம், அவருக்கு டெல்லியை நோக்கிய கனவு அதிகமாகவே இருந்தது.   மக்களவை தேர்தல் 37 இடங்களை பெற்றுத் தந்ததும் ஒரு மாற்று சக்தியாக தேசிய அளவில் உருவாக வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு வந்தது.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் தாம் விடுதலை செய்யப்படுவோம் என்றே உறுதியாக நம்பினார்.   அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை அப்படி நம்ப வைத்தார்கள்.  1991 முதல், கணக்கில் வைக்க முடியாத, கோடிக்கணக்கான பணத்தின் மூலம், இந்தியா முழுக்க சகலரையும் விலைக்கு வாங்க முடிந்த ஜெயலலிதாவால், பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு நபர் இருப்பார் என்பதை 27 செப்டம்பர் 2014 வரை நம்ப முடியவில்லை.   அன்று காலை, பெங்களுருவுக்கு ஜெயலலிதா சாலை மார்க்கமாக வந்து, பரப்பன அக்ரஹாரா சாலையில் திரும்புகையில், அவர் சாலையில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்தார்.   இந்த அம்மா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செல்வது போல செல்கிறாரே என்ற வியப்பு எனக்கும் ஏற்பட்டது.   அரசு வாகனத்தில், அரசு அதிகாரிகள் புடைசூழ, ஏதோ விழாவுக்கு செல்வது போலத்தான் வந்தார் ஜெயலலிதா.
12 மணிக்கு, ஜெயலலிதாவின் அரசு வாகனத்தில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது என்பதை அறிந்தபோதுதான், கதை முடிந்தது என்று நினைத்தேன்.    அந்த சிறைவாசம், ஜெயலலிதாவை உலுக்கிப் போட்டது என்றால் மிகையாகாது.   அவரது தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய அடி விழுந்தது.   அவரது இரண்டாவது சிறைவாசத்துக்கு பிறகு, வெளியுலகில் தலை காட்டுவதையே வெகுவாக குறைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
அப்போது தமிழக அரசில் முக்கிய பங்கு வகித்த அதிகாரி ஒருவர், பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தாலும் கோப்புகள் அனைத்தும் ஜெயலலிதாவிடம்தான் செல்லும்.   இதற்கு முன்பு பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதெல்லாம், கோப்புகளில் பென்சிலில் எழுதி தருவார் அம்மா.  ஆனால் 2014 செப்டம்பருக்கு பிறகு, அனுப்பப்படும் கோப்புகளில் பல எந்த குறிப்புகளும் இல்லாமலே திரும்ப வரும்.
ஆர்கே நகரில் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வரான பிறகும் கூட, அவர் பழைய சுறுசுறுப்போடு இல்லை.   வாரக் கணக்கில்  தலைமைச் செயலகத்துக்கே வர மாட்டார்.  அவர் வீட்டுக்கு அனுப்பப்படும் கோப்புகள் மாதக்கணக்கில் வராது என்றார்.

அந்த அளவுக்கு தன்னை ஒரு கூட்டுக்குள் ஜெயலலிதா அடைத்துக் கொண்டார்.  செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, உடனடியாக திறந்து விட வேண்டிய நெருக்கடியில் கூட, ஜெயலலிதாவை அணுக முடியாமல், நள்ளிரவுதான் ஏரி திறந்து விடப்பட்டு சென்னையே மூழ்கும் நிலைக்கு சென்றது நினைவிருக்கலாம்.
அதன் பிறகு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தாலும், முதல் முறை சிறை சென்றபோது, நலிவடைந்த ஜெயலலிதாவின் உடலும் மனதும் சீரடையவே இல்லை.   தலைமைச் செயலகத்துக்கு வாரம் ஒரு முறை செல்வது.  அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைப்பது. கோப்புகளை மாதக்கணக்கில் பார்க்காமல் இருப்பது என்று மிகவும் சோர்வான நிலையிலேயே இருந்தார் ஜெயலலிதா. 2016 தேர்தலிலுக்கான வேட்பாளர் தேர்வில் கூட, பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல், சசிகலாதான் பெரும்பாலான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி பேசுகையில் “Jayalalitha is a reluctant politician (ஜெயலலிதா தயக்கத்தோடு அரசியலை அணுகியவர்).   அவர் விருப்பப்பட்ட எந்த விஷயத்தையும் அவரால் செய்ய முடியவல்லை.  நன்றாக படிக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினார்.  ஆனால் அவரால் அவர் படிப்பை தொடங்க முடியவில்லை.    அவர் தாயார் வற்புறுத்தலால், திரைத் துறையில் நுழைந்தார்.  விருப்பமில்லாமல் நுழைந்தாலும், அதிலும் அவர் வெற்றியை பெற்றார்.
அரசியலிலும் ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தார் ஜெயலலிதா.   எண்பதுகளின் இறுதியில் கருணாநிதி தீவிரமாக அரசியல் செய்த காலம் அது.  அவருக்கு வலுவான எதிர்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எம்ஜிஆர் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தார்.  அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அரசியலில் நல்ல பயிற்சியும் கொடுத்தார்.
ஆனால் ஏனோ, தனது இறுதிக் காலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு அறிக்கையையே வெளியிட்டார்”  என்றார் மணி.
இறுதி வரை, தான் விரும்பிய வாழ்வை வாழ முடியாமல், வெளியுலகுக்காக நடித்துக் கொண்டு, தன் வலிகளையும், வேதனைகளையும் மென்று விழுங்கியபடியேதான் உலகத்துக்காக புன்னகைத்துக கொண்டிருந்தார் ஜெயலலிதா.
ஒரு தனிமை விரும்பியாய், தன் வாழ்வை மிக மிக ரகசியமாய், யாரும் இல்லலாத உலகில் தான் மட்டும் சஞ்சரிக்க விரும்பிய ஜெயலலிதாவின் குழந்தைப் பருவ ஆசைகள் உட்பட பல ஆசைகள் நிராசையாகவே முடிந்தன.   தன்னை விட வயதில் மூத்தவர்களைக் கூட ஒரு நாள் தவறாமல் காலில் விழ வைத்து அழகு பார்த்ததும், தன் கட்சியினரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பந்தாடியதும் இது போன்ற நிராசைகளின் வெளிப்பாடாக இருக்கலாம்.
இத்தகைய பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடாகவே, அவர் யாரையுமே நம்பாமல் இருந்து, தனக்குப் பின் ஒரே ஒரு இரண்டாம் கட்டத் தலைவரைக் கூட உருவாக்காமல் கவனமாக பார்த்துக் கொண்டார்.  தன்னை மீறியோ, அல்லது தனக்கு நிகராகவோ யாராவது ஒருவர் வளர்ந்தால் கூட, அவரை நசுக்க ஜெயலலிதா தவறியதேயில்லை.

இன்று அவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்த பிறகு, பார்க்கையில், அவரின் அமைச்சர்களும், அதிமுக கட்சியினரும், அதிமுகவை அழிப்பதற்கான வேலைகளை மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.   அடிமைகளாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு திடீரென்று கிடைத்த புதிய சுதந்திரம் அவர்களை கட்டுப்பாடற்றவர்களாக மாற வைத்திருக்கிறது.
ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டு கழித்து அலசிப் பார்க்கையில், தமிழகத்துக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது, மன்னார்குடி மாபியாவைத் தவிர வேறு எதுவுமே இல்லை.     வரலாறு அப்படித்தான் ஜெயலலிதாவை பதிவு செய்ய காத்திருக்கிறது.
ஒரு வேளை 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்றிருந்தால், இன்று கருணாநிதி ஓய்வில் இருக்க மாட்டார்.  ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வில் இருந்து வெளியிடும் அறிக்கைகளை நாம் படித்துக் கொண்டிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக