ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆர் கே நகர் ... 120 திமுக நிர்வாகிகள் நீக்கபட்டுள்ளனர்... மேலும் பல மாவட்டங்களுக்கு தொடரும் ?

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த விவகாரம் தொடர்பாக தொகுதியிலுள்ள திமுக நிர்வாகிகள் 120பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு கடந்த 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். இந்த விவகாரம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோல்வி குறித்து 25ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், " தொகுதியில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வகுக்கப்பட்ட வியூகங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், எங்கெங்கே கவனக்குறைவு, எவரெவரிடம் அலட்சியம், திமுக வாக்குகளில் ஏற்பட்ட சரிவு இவை அனைத்தும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து தொகுதியில் திமுக நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆய்வு நடத்த அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி, திமுக சட்டப்பிரிவு செயலாளர் இரா.கிரிராஜன், சட்டப்பிரிவு துணைச் செயலளர் வீ.கண்ணதாசன் ஆகியோரை கொண்டு குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கடந்த சில நாட்களாக தொகுதி நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தங்கள் ஆய்வு குறித்த அறிக்கையை இன்று ( டிசம்பர் 31) திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் இவர்கள் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 14 வட்டக் கழகக் கிளைகள் கலைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமானதாக, ‘ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனுக்கு ’சமுதாய’ ரீதியில் சில திமுக மாவட்டச் செயலாளர்கள் உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மா.செ.க்கள் பொறுப்பில் இருந்த பகுதிகளில் திமுகவின் ஓட்டுகள் குறைந்து தினகரனின் ஓட்டுகள் அதிகமாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாம். இதை அறிந்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த மா.செ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பதா என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக