ஞாயிறு, 19 நவம்பர், 2017

கழிப்பறை வசதியற்ற நாடுகளில் முதலிடம்!

மின்னம்பலம் :  Out of order என்ற பெயரில் சர்வதேச தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கழிப்பறை வசதியற்ற நாட்டின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. பிரதமர் மோடி தூய்மை இந்தியா என்று முழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது அந்த ஆய்வறிக்கை.
WaterAid என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் நான்கு கண்டங்களில் உள்ள 38 நாடுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம், சுகாதாரம், ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்தத் தொண்டு நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் ரோப் ஸ்கின்னர். இந்த WaterAid என்ற தொண்டு நிறுவனம் Out of order the state of world‘s toilets 2017 என்ற ஆய்வை மேற்கண்ட 38 நாடுகளிலும் நடத்தியது. அதன் அறிக்கையை நவம்பர் 16 ஆம் தேதி வெளியிட்டது. அதில்தான் கழிப்பறை வசதியற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இந்தியா. அந்த ஆய்வறிக்கையின் சாரம் இதோ: தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்குக் கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர்.
இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை படுமோசமாக இருக்கின்றது. அதாவது, 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் தினமும் கழிவறைக்காக காத்திருக்கின்றனர். அவர்களை ஒரு வரிசையில் நிறுத்தினால் பூமியை நான்கு முறை கயிற்றால் சுற்றும் அளவிற்கு இந்த எண்ணிக்கை உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த நிலையில் சீனா இந்தப் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா நாடு 3வது இடம் பிடித்துள்ளது. உலக அளவில் 3ல் ஒரு மனிதருக்குக் கழிவறை இல்லை. 100 கோடிக்கும் கூடுதலான பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்த நெருக்கடியில் சிக்குகின்றனர். கழிப்பறை வசதியற்றவர்கள் பொது இடங்களில் கழிக்கச் செல்லும் போது ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு நோய்வாய்ப்படுகின்றனர். கழிவறையின்றி பொது இடத்திற்குச் செல்லும்பொழுது தாக்கப்படும் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. பலருக்குக் கழிப்பறை ஏற்படுத்திக்கொள்ள வசதியும் சந்தர்ப்பமும் இருந்தும் அதை இழக்கின்றனர். இதற்குக் கல்வி அறிவின்மை முக்கிய காரணமாக இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 19) உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக