ஞாயிறு, 19 நவம்பர், 2017

தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் ரூ.1 கோடி பரிசு - அகில பாரத சத்ரிய மகாசபை அறிவிப்பு

மாலைமலர் : பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என உ.பி. மாநிலத்தில் உள்ள அகில பாரத சத்ரிய மகாசபை அறிவித்துள்ளது. லக்னோ: சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிக பழமையான இந்துத்வா இயக்கமான அகில பாரத சத்ரிய மகாசபை சார்பில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள ஸ்வருப் பார்க் பகுதியில் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேவின் நூற்றுக்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் கொடும்பாவியாக கொளுத்தினர்.

பின்னர், பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய அகில பாரத சத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங், ‘ராணி பத்னினியின் தியாகத்தை பற்றி நடிகை தீபிகா படுகோனேவுக்கு தெரியாது. உயிருடன் எரிந்தால் அந்த வேதனை என்னவென்று தீபிகா படுகோனே தெரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருடன் தீயிட்டு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்’ என்று கூறினார்.

புவனேஸ்வர் சிங்கின் இந்த அறிவிப்பு தொடர்பாக பரேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ரோஹித் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இன்றைய போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

13-ம் ஆண்டு நூற்றாண்டு காலகட்டத்தில் வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. பத்மாவதி என்றும் அழைக்கப்படும் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.

எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.

ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான்.
சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளமான பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டாக தீக்குளித்து உயிர் துறந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த வரலாற்றை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பத்மாவதி இந்திப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார் சந்த் கேலாட், பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா இன்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக