செவ்வாய், 21 நவம்பர், 2017

வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன்

நக்கீரன் : : சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ந்தேதி அதிரடி சோதனையில் 187 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 6 நாட்களாக நீடித்த இந்த சோதனையில் ரூ.1,430 கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது என வருமான வரித்துறையினர் வட்டாரம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீட்டில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதே போல திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரி, மாணவிகள் தங்கும் விடுதி டி.டி.வி அணியின் மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் திவாகரனின் கார் டிரைவர் வீட்டிலும் விடாமல் தொடர்ந்து ரெய்டு நடத்தினார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்பு பணத்தை மாற்றுவதற்காக கல்லூரி ஊழியர்களின் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வங்கி அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி கல்லூரியில் உள்ள ஒரு தனி அறையில் பூட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனை கல்லூரிக்கு அழைத்து சென்று சுமார் 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

இதனால் திவாகரனை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்ப முடிவு செய்தனர். 4 நாட்கள் சோதனை நிறைவில் கணக்கில் வராத தங்க நகைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை 14 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். மேலும் அவரை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 14-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் திடீர் உடல் நலக்குறைவு, மூச்சு சுவாதிப்பதில் சிரமாக இருப்பதால் அவர் ஆஜராகவில்லை என்று காரணம் சொன்னார்கள். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி திருச்சி கண்டோன்மென்டில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 16-ந்தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது முறையாக அவர் ஆஜராகவில்லை.

திவாகரனின் ஆடிட்டர் ஒருவர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து திவாகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆஜராகவில்லை என்று விளக்க கடிதம் கொடுத்தார். அன்றைய தினம் திவாகரன் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மன்னார்குடி சென்று விட்டார். சம்மன் அனுப்பி 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற விதி இருந்தும் திவாகரன் ஆஜராகாதது வருமான வரித்துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் திவாகரன் திருச்சி கண்டோன்மென்டில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது. முன்னதாக மன்னார்குடியில் இருந்து காரில் தனது ஆடிட்டர்களுடன் திவாகரன் காலை 7.30 மணிக்கு முன்னதாகவே காரில் கிளம்பியவர் தஞ்சையில் ஓட்டலில் சிற்றுண்டி அருந்தி விட்டு திருச்சி வந்தார்.

ராகு எமகண்டம் காலை 10.30 மணி வரை இருந்ததால் அதன் பிறகு ஆஜர் ஆகலாம் என்று திருச்சி மத்திய பேருந்த நிலையம் அருகே காரிலே இருந்தார். இதற்கிடையே அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலக பணி நிமித்தமாக காலை 9.00 மணிக்கு கோவை சென்றுவிட்டதாக வருமானவரித்துறை தகவல் தொடர்பாளர் சதிஷ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதே போல திவாகரன் தரப்பிற்கு தகவல் அனுப்பினார். இதனை அறிந்த திவாகரன் இன்றைக்கு அஜர் ஆவதில் எந்த பலனும் இல்லை என்பதை அறிந்து திருச்சியில் ஆஜராகாமல் மன்னார்குடி திரும்பினார். - ஜெ.டி.ஆர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக