சனி, 11 நவம்பர், 2017

ஸ்டாலினை சுற்றி ஒரு ஜால்ரா கூட்டம் ? தொண்டர்கள் புலம்பல்....

நக்கீரன்: சுற்றியிருக்கிற பலரும் தளபதியோட மனசுக்குப் பிடிச்சதை மட்டும் சொல்லி, தங்களோட காரியத்தைச் சாதிச்சிக்கிறாங்களே தவிர, கட்சியோட உண்மையான நிலவரத்தையோ, கட்சிக்காரங்களோட நிலைமையையோ சொல்றதேயில்லை. சொன்னால், கோபத்துக்கு ஆளாகி, கிடைக்கவேண்டிய எதிர்கால வாய்ப்புகள் பறிபோயிடுமோங்கிற பயமும் சில பேருக்கு இருக்குது. இதுதான் தலைமையோட நிலவரம்'' என்கிறார்கள் மாவட்ட -ஒன்றிய -நகர தி.மு.க. நிர்வாகிகள் பலரும்.
2 மீண்டும் ஒரு "நமக்கு நாமே' டைப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கப்போகிறார் என்றதுமே ஷாக் ஆன தி.மு.க. நிர்வாகிகள், அது தள்ளிவைக்கப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
 கட்சிப் பொறுப்புல இருக்கோம்ங்கிறதுக்காக கடந்த 6 வருடமா எதிர்க்கட்சியா இருந்துக்கிட்டு ஆளுங்கட்சி லெவலுக்கு செலவு செய்துக்கிட்டிருக்கோம். ஆட்சியில தி.மு.க. இருந்தப்ப சம்பாதிச்ச பலபேரு அதை பாதுகாப்பா சேமிச்சிட்டு, ஒதுங்கி நிக்கிறாங்க.

எங்க செயல்தலைவர் பேனர், கட்-அவுட் வேண்டாம்னு சொன்னாலும், நிகழ்ச்சி நடக்குதுன்னு தெரிவதற்காக அதையெல்லாம் செய்யத்தான் வேண்டியிருக்குது. அப்புறம், கொடி கட்டுறது, இரவில் வந்ததால் வழிநெடுக மின்விளக்கு அலங்காரம் மற்றும் டியூப்லைட் போட்டது, இரவு அவரோடு வந்த டீமுக்கு தங்க ஏற்பாடு செய்தது, அந்த டீமுக்கான சாப்பாடு மற்றது மற்றது ஏற்பாடுகள் என ஏகத்துக்கும் செலவாகுது என புலம்புகிற தி.மு.க. மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகள், கடந்தமுறை நமக்கு நாமே பயணத்தின்போது மாவட்ட அளவில் செலவு 6 லட்ச ரூபாய், ஒன்றியங்களில் குறைந்தது 2 முதல் 4 லட்சம் வரை செலவானது'' என்கிறார்கள்.

மாணவ-மாணவியர் உள்பட பல தரப்பையும் சந்திக்கும்போது மண்டப ஏற்பாட்டில் தொடங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. இதுபற்றி வடமாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "வியாபாரிகளுடனான சந்திப்புக்கான கூட்டம் ஏற்பாடு செய்து, மண்டம் புக் செய்யப்பட்டது. அதுபோக உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேனர் செலவு, கலந்து கொண்டவர்களுக்கு ஐடி.கார்டு, பேனா, குறிப்பு நோட்டு, ஃபைல், விளம்பரம் தந்தது என 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது'' என்றார் கைபிசைந்தபடி.

வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ""சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து விளக்கக்கூட்டம் நடத்த செயல்தலைவர் உத்தரவிட்டார். அதற்கான செலவை ஒப்பிட்டால் நீட் கோச்சிங் ஃபீஸ் கூட கம்மியாத்தான் இருக்கும். 7 லட்சம் வரை செலவு. அதுபோல, நீட் தேர்வுக்காக மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சொன்னாரு. இந்த காலத்துல யாரு சும்மா வர்றாங்க? தலைக்கு 200 ரூபாய், சாப்பாடு, குட்டியானை வண்டிக்கான வாடகை, டீசல், டிரைவர் பேட்டா எல்லாமுமாக 2 லட்ச ரூபாய் கரைந்து போனது'' என்றவர்கள்... தூர்வாரும் திட்டம் பற்றியும் புலம்பினார்கள்.

"திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 குளங்கள் தூர்வாரப்பட்டன. இதற்கான செலவு மட்டும் இரண்டரை கோடி ரூபாய். இதனை மாவட்ட நிர்வாகம், இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, ஒ.செக்கள், ந.செக்கள் பகிர்ந்து செய்தார்கள். இதை செயல்தலைவர் வந்து பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்த அன்று ஒவ்வொரு ஒ.செக்கும் குறைந்தது 3 லட்சம் செலவானது, ந.செ.க்களுக்கு கூடுதல் செலவு. இப்படி

வருசமா வருமானமேயில்லாம தலைவர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள், முப்பெரும்விழா, பொதுக்கூட்டம், போராட்டம்னு செலவழிச்சிக்கிட்டே இருக்கோம். உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்தாலாவது ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதிக்கலாம் அதுவும் கிடையாது. இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள பலர் சம்பாதிப்பதை எடுத்து கட்சிக்காக செலவு செய்வதேயில்லை. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தலையில் செலவை கட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். புதியதாக நியமிக்கப்பட்ட பல மா.செக்கள் பொருளாதார பலமில்லாதவர்கள், இவர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளை செலவு செய்ய வைக்கிறார்கள். பணம் இருக்கிறவங்ககூட, "எவ்வளவுதான் செலவு செய்றது'ன்னு நொந்துபோறாங்க'' என நிலைமையைச் சொன்னார்கள்.

""தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி காண்ட்ராக்ட்டும் ஒருசில மா.செ.+ எம்.எல்.ஏ. கூட்டணிக்குள்ளேயே முடிஞ்சிடுது. மற்ற நிர்வாகிகளுக்கு பிஸ்கோத்துதான். இப்படிப்பட்ட நிலைமையிலே எழுச்சிப் பயணம், மழைக்கால விழிப்புணர்வுன்னு திரும்பத் திரும்ப செலவு வைக்கிறாரு செயல் தலைவரு. ஒருசில பேரு அவர்கிட்ட நல்லபேரு எடுக்குறதுக்காக கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் வச்சி செய்றாங்க. இதையெல்லாம் தளபதிகிட்டே யார் சொல்றது? புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்''’என்கிறார்கள் நிர்வாகிகள் வேதனையுடன்.

இந்தியாவிலேயே மாநிலக் கட்சிகளில் நிதி வசூல் மூலம் அதிக வருமானம் பெறும் கட்சியாக, ஆளும் அ.தி.மு.க.வை (ரூ.54.93 கோடி) மிஞ்சி முதலிடத்தில் இருக்கிறது தி.மு.க. (ரூ.77.63 கோடி) என்கிறது புள்ளிவிவரம்.
அந்த வருமானம் என்னவாகிறது எனத் தெரியாமல் செலவாளிகளாக ஆக்கப்பட்டு புலம்புகிறார்கள் நிர்வாகிகள். -து.ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக