ஞாயிறு, 12 நவம்பர், 2017

தினமலர் அள்ளினால் சுரங்கம் : திவாகரனிடம் நள்ளிரவில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

 சசி, கும்பல், மீதான, பிடி,இறுகுகிறது!திருவாரூர்: நள்ளிரவில் சசிகலாவின் உறவினர் திவாகரன் வீட்டில் ஐ. டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டையில் உள்ள சசிகலாவின் உறவினர் திவாகரனின் வீட்டில் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவர் நடத்தி வரும் கல்லூரியில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே அவரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது.மத்திய அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், விசாரணைக்கு ஆயத்தமாகி வருகின்றன.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மானவர்கள், தமிழகத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவர்கள் நிழல் பட்டவர்கள் கூட, கடவுளின் வரம் பெற்றவர் போல, திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சொத்துக்களின் அளவும், மதிப்பும் உயர உயர, சசிகலா குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என, அனைவரும், தொழிலதிபர் களாக வலம் வரத் துவங்கினர்.


சாம்ராஜ்யம்

அதற்கு ஒரே ஒரு உதாரணமாக, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன், விவேக்; 25
வயதிற்குள், 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள, 11 திரையரங்குகள் உடைய, 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்திற்கு மன்னனாக திகழ்கிறார்.இக்குடும்பத்தினர், கால் வைக்காத துறைகளே இல்லை; தொலைக் காட்சி, நாளிதழ், ரியல் எஸ்டேட், மதுபான ஆலை, காபி தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி தொழில், சினிமா என எல்லாவற்றிலும், கோடிகளை அள்ளிக் கொட்டி கோலோச்சுகின்றனர்.

இந்நிலையில், மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, அமைச்சர் விஜய பாஸ்கரை தொடர்ந்து, சசி கும்பல் குறித்த விபரங்களை, வருமான வரித்துறை திரட்டியது. தகுந்த ஆதாரங்கள் சிக்கியதும், 9ம் தேதி காலை, சென்னை, மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, ஈரோடு, கோவை, நெல்லை, ஈரோடு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டில்லி என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், அதிரடி சோதனையை துவங்கியது.

சென்னையில், தினகரன் வீடு, அவரது தம்பி பாஸ்கரனின், நீலாங்கரை வீடு, மகாலிங்கபுரத்தில், ஜெயா, 'டிவி' மேலாண் இயக்குனர் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகி, விவேக் வீடு, தி.நகரில் உள்ள அவரது சகோதரி, கிருஷ்ணபிரியா வீடு...அண்ணா நகரில் உள்ள விவேக் மாமனார், பாஸ்கர் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடாஜன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அவரது சகோதரர்,
ராமச்சந்திரன் வீடு மற்றும் ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், விரிவான சோதனைகள் துவங்கின.

போலி

மேலும், மன்னார்குடியில், திவாகரன் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலா அண்ணன் மகன், மகாதேவன் வீடு, நடராஜனின் உறவினர், ராஜேந்திரன் வீடு, கந்தர்வகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான கல்லுாரி, கடலுார் ஜோதிடர், சந்திரசேகர் வீடு...நாமக்கல்லில், சசி வக்கீல் செந்தில், கோவை தொழில் அதிபர், ஆறுமுக சாமி, நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட், புதுச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணைத் தோட்டம் என, முதல் நாள் சோதனை நீண்டது.

இரண்டாவது நாள் சோதனையில், சசி குடும்பத்தினர், 10க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் மேற்கொண்ட, பல முறைகேடான பரிவர்த்தனைகள், பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள் என, 1,000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆவணங்கள் சிக்கின. அவை தொடர்பாக, 3 வது நாளாக, நேற்றும், விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், கோவை, மன்னார்குடி, தஞ்சை என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதில், மேலும் பல நுாறு கோடி ரூபாய்க்கான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

நகை குவியல்

இச்சோதனையின், மூன்றாவது நாள் முடிவில், நேற்று பல வங்கிகளில் நடந்த முறைகேடான
பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சை, சென்னை வங்கிகளின், 'லாக்கர்'களில் இருந்தும், பாஸ்கரன் வீட்டில் இருந்தும், தங்க நகை குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, இவர்களின் குடும்பத்தினர் செய்த, அதிக பரிவர்த்தனைகள் காரணமாக, 30க்கும்
மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

ஆளை விழுங்கிய சுறா

ஜாஸ் ஆங்கில திரைப்படத்தில் சுறா மீன், அப்படியே ஆளை விழுங்குவதைப் போல், ஒரு பிரபல நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்து, ஜாஸ் திரையரங்க வளாகத்தை கையகப் படுத்திய தகவல், 2015ல் வெளியானது. இந்த பரிவர்த்தனை தொடர்பாகவும், வேறு சில திரையரங்குகள் வாங்கியது தொடர்பாகவும், வரித்துறையினரிடம் ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது குறித்து, விவேக்கிடம், வருமான வரி கூடுதல் ஆணையர், ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள், துருவி துருவி விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனை நடந்த வீடுகள், அவர்களது வங்கி லாக்கர்களில், கிலோ கணக்கில் தங்கம், வைர நகைகள் சிக்கியுள்ளன.

அவற்றுக்கெல்லாம் ஆவணங்களையும், வருமான ஆதாரத்தையும் கேட்டு, வரித் துறையினர் பிடியை இறுக்கி வருகின்றனர். சொத்து ஆவணங்கள், நகை முறைகேடுகள் அதிகரிப்பதால், சோதனையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

120 இடங்களில் சோதனை

இது குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சோதனையை ஓரிரு நாளில் முடித்து விடலாம் என, நினைத்து தான், ஆயிரம் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி னோம். ஆனால், ஒரு இடத்தில் சோதனை செய்ய சென்றால், அங்கு கிடைக்கும் ஆதாரத்தை வைத்து, அடுத்த இடத்தை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால், மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சென்னையில், 60 இடங்கள் உட்பட 120 இடங்களில் சோதனை நடக்கிறது.எனவே, நாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட இடங்களுடன், புதுப்புது இடங்களிலும் சோதனை தொடர்கிறது. சோதனை குறித்த விபரங்களை, தினசரி மாலையில், மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அனுப்புகிறோம். இந்த சோதனை, நான்காவது நாளாக, நாளையும் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்தடுத்து, 'ஷாக்'

இதற்கிடையில், வருமான வரித்துறை சோதனையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், பினாமி பெயர்களில், பல கோடி ரூபாய்க்கு, சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரிய வந்துள்ளதால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் களமிறங்க தயாராகி வருகிறது.சசிகலா குடும்பத்தினர், பினாமி பெயர்களில், வௌிநாடுகளிலும் சொத்து வாங்கி குவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருமான வரித்துறையினருடன், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையும் கைகோர்க்க உள்ளன.

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வரி ஏய்ப்பு செய்தவர், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பணம் பதுக்கல், லஞ்சப் பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். அந்த வகையில், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட, சினிமா பட அதிபர், மதன், அரசு மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி உள்ளிட்டோரை, அமலாக்கத்துறை மற்றும், சி.பி.ஐ., கைது செய்தது. அந்த வகையில், சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், வௌிநாட்டு முதலீடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளோம். குற்றம் செய்தது தெரிய வந்தால், கைது செய்வோம். அவர்களின் சொத்துக்களையும் முடக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜோதிடர் வீட்டில்பத்திரங்கள் சிக்கின

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர், பிரபல ஜோதிடர் சந்திரசேகர். இவரின் வீடு மற்றும் அலுவலகம், அருகருகில் அமைந்து உள்ளன. இவர், பங்குச் சந்தை வணிகம், ஜோதிடம், நில வணிகம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு மட்டும், சந்திரசேகர் ஜோதிடம் பார்ப்பார். அமைச்சர் ஒருவரின் வாயிலாக, தினகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் கூறிய பல விஷயங்கள், தினகரனுக்கு பலித்ததால், ஆஸ்தான ஜோதிடராக மாறினார்.

இருவருக்கும் இடையில், பண பரிவர்த்தனைகள் இருந்தன. ஜோதிடரின் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று மூன்றாவது நாளாக, சோதனை நடத்தினர். அப்போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்த, பல பத்திரங்கள் மற்றும், 'சிடி'க்களை, அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அதில், பிரபல நகை கடை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிக்குவர் என தெரிகிறது.

மனைவிக்கு பிறந்தநாள்:< மனைவி கீர்த்தனாவிற்கு, நேற்று பிறந்த நாள். ஆனால், அதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரை, வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. அவரது பெற்றோர் வீட்டில் சோதனை முடிந்ததால், மகளை வாழ்த்த, பெற்றோர் வந்தனர். ஆனால், கீர்த்த னாவை பார்க்க, அவர்களை அனுமதிக்க வில்லை.

பைக்கில் போய் சோதனை:


வருமான வரித்துறை அதிகாரிகள், முதல் இரு தினங்களில், கார்களில் சோதனைக்குச் சென்றனர். பின், சென்னை, தலைமையகத் திற்கும், சோதனை நடந்த இடத்திற்கும், அடிக்கடி செல்ல வேண்டி இருந்ததாலும், கால விரயத்தை தவிர்ப்பதற்காகவும், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

'சிடி' சிக்கியதா:

சென்னை, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக, 'சிடி' சிக்கியதாக தகவல் வெளியானது. அதற்காக தான் சோதனை நடந்தது என்றும் தகவல் பரவியது. அதை, வரித்துறையினர் மறுத்தனர்.

புகழேந்திக்கு, 'சம்மன்:

'கர்நாடக மாநில, அ.தி.மு.க., பிரமுகரான புகழேந்திக்கு, நாளை ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும், சம்மன் அனுப்ப, வரித்துறை முடிவெடுத்துள்ளது.

நகைக்காக நாடகமா:

சென்னை, அண்ணா நகரில், விவேக்கின் மாமனார், பாஸ்கர் வீடு உள்ளது. அங்கு, ஏராளமான நகைகளை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அவை, தன் உறவினர்களுடைய நகைகள் என, பாஸ்கர் தரப்பு விளக்கம் அளித்தது. அதற்கேற்ப, வீட்டு வாசலில், அவரது உறவுக்கார பெண்கள் கூடி, வரித்துறையினரிடம், நகைகளை தரும்படி கேட்டு, தகராறு செய்துள்ளனர். நகைக்காக, அவர்கள் நாடகம் ஆடுவதை உணர்ந்த வரித்துறையினர், அதை காதில் வாங்க மறுத்து விட்டனர்.

அறையை பூட்டி'சீல்' வைப்பு

நாமக்கல்லில், சசிகலா வழக்கறிஞர் உட்பட, ஐந்து பேரின் வீடு, அலுவலகங்களில், மூன்றாம் நாளாக, நேற்றும் சோதனை நடத்தினர்.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், அவரது ஜூனியர், பாண்டியன், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர், பாலுசாமி, நண்பர் பிரகாசம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தொழிலதிபர், சுப்ரமணியம் ஆகியோர் வீடுகளில், மூன்றாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனையை தொடர்ந்தனர்.அதில், செந்தில் வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தாகவும், அதற்கு, வருமான வரித்துறையினர், 'சீல்' வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை, நீலகிரியில் ரகசிய ஆவணங்கள்

கோவையில், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான, மணல் குவாரி கான்ட்ராக்டர், ஆறுமுகசாமி, மர வியாபாரி, சஜீவன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரி அதிகாரிகள், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில், மரச்சாமான் வேலை களை செய்த, மர வியாபாரி, சஜீவனுக்கு சொந்தமான, போத்தனுார், லாயர்ஸ் காலனி வீடு மற்றும் கடை; ஆர்.எஸ்.புரத்திலுள்ள கடை மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போத்தனுார் வீட்டில் மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது. கோடநாடு பங்களாவின் கட்டுமான பணிகளை செய்த ஆறுமுகசாமிக்கு, ரேஸ் கோர்சில் உள்ள வீடு, ராம்நகர் கட்டுமான அலுவலகம், அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். வீடு, கட்டுமான அலுவலகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சோதனை முடிந்த நிலையில், அவினாசி சாலை, 'செந்தில் டவர்சில்' மட்டும், மூன்றாவது நாளாக, நேற்றும் சோதனை நீடித்தது. சோதனையில், ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

50 போலி கம்பெனிகள்5,000 ஆவணங்கள்

வருமான வரித் துறையினர் கூறியதாவது:

சசிகலா கும்பலுக்கு சொந்தமான, 50 போலி கம்பெனிகள் மூலமாக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரிலும், ஏராளமான சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. நிலம், கட்டடம், சினிமா என, எல்லா துறைகளிலும், போலி கம்பெனிகள் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, 5,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆவண குவியலை பார்த்தால், மலைப்பாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக