ஞாயிறு, 5 நவம்பர், 2017

கமலுக்கு திருமாவளவன் ஆதரவு!

மின்னம்பலம் : நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, விசிக தலைவர் திருமாவளவன், "கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்று சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கமலுக்கு திருமாவளவன் ஆதரவு!நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகத் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக ட்விட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டுவரும் நிலையில், கடந்த வாரம் வெளிவந்த ஆனந்த விகடன் வார இதழில், ”முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததைச் சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர்” என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
கமலையும், அதுபோல பேசுபவர்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் இந்து மகா சபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா என்று கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கும் நேரத்திலேயே இவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை கையில் எடுக்கும் இவர்கள், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை எட்டிவிட்டால் அல்லது ஆட்சியையே கைப்பற்றிவிட்டால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும்.
ஆகவே தமிழகத்தில் மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது, அவர்கள் தமிழகத்தில் காலுன்றிவிடக் கூடாது என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறது. இதனால் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்று சுட்டிக்காட்டியுள்ளதை வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக