திங்கள், 27 நவம்பர், 2017

கேரளப் பெண் ஹதியாவின் பாதுகாவராக சேலம் மருத்துவ கல்லூரி டீனை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கேரளப் பெண் ஹதியாவின் பாதுகாவராக சேலம் மருத்துவ கல்லூரி டீனை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாலைமலர் :கட்டாய மதமாற்றத்தின் மூலம் திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளப் பெண் ஹதியா தொடர்ந்து படிக்கவும், சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை அவரது பாதுகாவராக நியமித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அகிலா (வயது 24). தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி கல்லூரியில் படித்து வந்த அகிலா கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதுபற்றி அசோகன் பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். போலீசாரால் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அகிலாவின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சேலத்தில் படித்து வந்த தன் மகளை அவருடன் படித்த சிலர் கடத்தி சென்று வேறு மதத்திற்கு மாற்றிவிட்டனர். அவர்களுடன் என் மகள் தங்கியுள்ளார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகிலாவை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. போலீசார் அகிலாவை தேடிவந்த நிலையில் அகிலா, கோர்ட்டில் ஆஜரானார்.


அப்போது அவர் நீதிபதி முன்பு சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், தற்போது அறக்கட்டளை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது கருத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதோடு அகிலாவை அவர் விருப்பப்படி செல்ல அனுமதித்தது.



இதையடுத்து, அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் ஷபின் ஜஹான் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறினார். திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

ஆனால், இந்த திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம்? என்று அகிலாவுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், இத்திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்றும் திருமணத்தை ரத்து செய்தும் பஞ்சாயத்து அலுவலக செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். அதில், ‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை (அந்நாள்) தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

அப்போது, ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் வாதிடுகையில் கூறியதாவது:

இந்த திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா, சுதந்திரமாக இருக்கிறாரா, அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அந்தப் பெண்ணின் வீட்டை சுற்றி போலீசார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்தில் அந்தப் பெண்ணை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது தந்தைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கபில்சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.

பெண்ணின் தந்தை அசோகனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிடுகையில், ‘அசோகனுக்கு அகிலா ஒரே பெண். சில சதி வேலைகளால் அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். அவற்றை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யட்டும். அதன் பிறகு, பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் (என்ஐஏ) சார்பில் ஆஜராகும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங்கை கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேரள போலீசார் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கபில்சிபலும் இந்திரா ஜெய்சிங்கும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

அதைகேட்ட நீதிபதிகள், ‘அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. மேலும் கேரள உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு தருணங்களில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் ஆசியா, அதியா, ஹதியா என்று 3 பெயர்களை அகிலா மாற்றி மாற்றி கொடுத்துள்ளார். 24 வயதான பெண்ணிடம் இருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண்ணை நாங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும். ஆனால், இது உணர்ச்சிப்பூர்வமான வழக்கு.

மேலும், அவசரமாகவும், ரகசியமாகவும் இந்தத் திருமணம் ஏன் நடத்தப்பட்டது? இது லவ் ஜிஹாத் எனப்படும் மதம் மாற்றி திருமணம் செய்து தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிஹாத்’ தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று சுப்ரீம் கோர்ட் சந்தேகம் எழுப்பியது. அத்துடன் உயர் நீதிமன்றம் கூறியுள்ளபடி ஷபின் ஜகான் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இருக்கிறதா? என்பதும் தெரிய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கு கடந்த 16-8-2017 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அகிலா-ஷபின் ஜஹான் திருமண விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் மேற்பார்வையில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருமணத்தை ஐகோர்ட் ரத்து செய்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு உட்படுத்திய உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என 20-9-2017 அன்று ஷபின் ஜஹான் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். கேரள அரசின் சார்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் கடந்த 31-10-2017 அன்று விசாரணைக்கு வந்தது.

பெண்ணின் தந்தை அசோகன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஷியாம் திவான், தனது கட்சிக்காரரின் மகளுடைய கணவருக்கும் மதவாத கும்பலுக்கும் தொடர்புடையதாக தெரிவித்தார். தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் மஹிந்தர் சிங் கேரள மாநிலத்தில் இதுபோன்ற மதமாற்றம் செய்தது தொடர்பாக 89 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டார்.

பெண்ணின் கணவர் ஷபின் ஜஹான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மேற்கண்ட இரு வக்கீல்களின் வாதத்துக்கு மறுப்பும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அகிலாவின் தற்போதைய மனநிலை எவ்வாறு உள்ளது? அவர் இந்த திருமணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்தாரா? என்பதை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியுள்ளதால் நவம்பர் 27-ம் தேதி மாலை 3 மணியளவில் இதுதொடர்பாக மதிப்பீடு செய்ய அந்தப் பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் அவரது பெற்றோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் கடந்த 25-ம் தேதி கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பெண் போலீஸ் துணையுடன் காரில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை பேட்டிகாண கொச்சி விமான நிலையத்தில் பத்திரிகை நிருபர்கள் குவிந்திருந்தனர். அவர்களை காரின் அருகே நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அங்கு நிலவிய கூச்சல் குழப்பத்துக்கு இடையே, ‘நான் ஒரு முஸ்லிம். என்னை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. எனது கணவருடன் சேர்ந்திருக்க விரும்புகிறேன்’ என அனிதா கூச்சலிட்டார். இதனால், அங்கு மேலும் பரபரப்பு கூடியது.

அவரை மேற்கொண்டு பேச விடாமல் பெற்றோரும், போலீசாரும் விமான நிலையத்துக்குள் இழுத்து சென்றதாகவும், அங்கிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால், சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும்போது நிருபர்களுக்கு மத்தியில் தெரிவித்த கருத்தையே நீதிபதிகள் முன்னிலையிலும் வாக்குமூலமாக அளிப்பார் என தெரிகிகிறது.

இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஹதியா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்துவரும் அமர்வின் முன்னர் விரைவில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதன் அடிப்படையில் கணவருடன் அவர் சேர்ந்து வாழ கோர்ட் அனுமதி அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் அமர்வின் முன்னர் இன்று ஆஜரான ஹதியாவிடம் நீதிபதிகள் ‘உங்களது எதிர்கால திட்டம் என்ன?’ என்று கேட்டனர். அதற்கு, ‘என்னுடைய சுதந்திரம் எனக்கு வேண்டும். கணவருடன் சென்று சேர்ந்து வாழ விரும்புகிறேன்’ என அவர் பதிலளித்தார்.

அரசின் செலவில் தொடர்ந்து படிக்க விருப்பமா? என்ற நீதிபதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். என்னை கவணித்துகொள்ள கணவர் இருப்பதால் அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, கேரள போலீசார் உரிய பாதுகாப்புடன் ஹதியாவை சேலத்தில் முன்னர் அவர் படித்து வந்த ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.

மேலும், ஹதியாவை மீண்டும் கல்லூரியில் அனுமதிக்கவும், அவருக்கு ஆஸ்டல் வசதி ஏற்படுத்தி தரவும், அக்கல்லூரியின் டீனை ஹதியாவின் பாதுகாவலராகவும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதிகள், ’ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் எங்களை அவர் (கல்லூரி டீன்) உடனடியாக அணுகி முறையிடலாம்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக