புதன், 1 நவம்பர், 2017

கன்னடத்தைக் கட்டாயமாக்கும் கர்நாடகா

minnambalam :கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவருமே கன்னடர்கள்தான்” என்று பெங்களூருவில் இன்று (நவ.1) நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில் பேசிய அவர், “கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும். தங்கள் குழந்தைகளையும் கன்னடம் கற்கச் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
தான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல என விளக்கமளித்த அவர், அதேநேரத்தில் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடம் கற்காமல் இருப்பது, அந்த மொழியை அவமதிப்பதிப்பது போன்றது என்றார்.
கன்னட மொழியைப் பாதுகாக்கும் விதமாக, கர்நாடகாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கன்னடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், கன்னட மொழியை முதன்மை வாய்ந்ததாக மாற்றக் கடந்த 60 ஆண்டுகளில் அரசு தவறிவிட்டதாகத் தனது வேதனையைத் தெரிவித்தார்.

மொழி உணர்வு அதிகம் கொண்ட கன்னடர்களிடையே சமீப காலமாக அந்த உணர்வு மேலும் அதிகரித்துவருகிறது. இந்தி எதிர்ப்பு என்ற கோணத்தில் தொடங்கிய இது தற்போது கன்னடம் மட்டுமே பிரதானம் என்ற நிலையை அடைந்துள்ளது. எங்கும் எதிலும் கன்னட மொழியை முன்னிறுத்தும் போக்குக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
எனினும், தமிழர்கள், மலையாளிகள் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசுவோரும் கர்நாடகாவில் வசித்துவரும் நிலையில் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் என சித்தராமையா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக