வியாழன், 2 நவம்பர், 2017

நாடார் தேவர் சாதி சிக்கலில் ஸ்டாலின்! "காமராஜரைக் காப்பாற்றினார் முத்துராமலிங்கத் தேவர்!”

நக்கீரன் "அப்படி ஒரு நிகழ்வு நடந்ததோ, நடக்கவில்லையோ, வரலாறு குறித்துப் பேசும் போது,‘நாம் இப்படிப் பேசுவது என்றாவது ஒருநாள் வில்லங்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடக் கூடாது’என்பதை உணர்ந்து பேச வேண்டும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இதை உணர்ந்து பேசினாரா?  இல்லையா? என்று தெரியவில்லை. ஆனாலும், ஜாதி லாபியில் அவரைச் சிக்க வைத்துவிட்டார்கள்.
விவகாரம் இதுதான் -
பொதுக்கூட்டம் ஒன்றில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் வீடியோ பதிவில்,
“விருதுநகர் நகராட்சியிலே நகர்மன்ற உறுப்பினருக்கான தேர்தலிலே காமராஜர் போட்டியிடுகிறார். அப்படி போட்டியிடும்போது, அந்த ஊரிலே இருக்கக்கூடிய சில பெரிய மனிதர்கள், காமராஜரை வெளியிலே விட்டால், அவர் தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபடுவார். மக்களைச் சந்தித்துப் பேசுவார் என்று அங்கு இருக்கக்கூடிய சில பெரிய மனிதர்கள் ஒரு திட்டம் தீட்டி, அவரைப் போய்ப் பிடித்து, யாருக்கும் தெரியாத இடத்தில் கொண்டுபோய், அவரை ஒரு அறையிலே பூட்டி வைத்து விடுகிறார்கள்.


இந்த செய்தி நம்முடைய தேவர் திருமகனாருக்கு கிடைக்கிறது. அப்போது ஒரு பொதுக்கூட்டத்திற்கு வருகிறார் தேவர் திருமகனார் அவர்கள். அந்தப் பொதுக்கூட்டத்திற்கு வந்தவுடன், பேசத் தொடங்குகிற நேரத்திலேயே ஒரு செய்தியை வெளியிடுகிறார்.  ‘பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, தேர்தலிலே நிற்கக்கூடிய காமராஜர் அவர்களை, யாரோ சில சதிகாரர்கள் கடத்திக்கொண்டு போய், ஒரு அறையிலே பூட்டி வைத்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.

எனவே, இந்தக்கூட்டதின் மூலமாக நான் அறிவிக்கிறேன். நான் பேசத் தொடங்கி, பேசி முடிப்பதற்கு முன்பு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எனக்கு முன்னால் வந்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்று சொன்னால், அதனால் நடைபெறக்கூடிய விபரீதங்களைப் பற்றி தயவுசெய்து அவர்கள் சிந்திக்க வேண்டும்’ என்று ஒரு குரல் கொடுத்தார். சொல்லிவிட்டு, பேசத் தொடங்குகிறார்; பேசி முடிக்கிறார். முடிக்கிற நேரத்திலே காமராஜர் எதிரிலே வந்து நிறுத்தப்படுகிறார். இதுதான் தேவருடைய மகிமை.” என்று பேசியிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின்  எப்போதோ பேசியதை,  ஜாதி அமைப்பினர்,  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பியிருக்கின்றனர்.  ‘பரிதாப நிலையில் இருந்த காமராஜரை தேவர்தான் காப்பாற்றினார் என்றும்,  அதுதான் தேவரின் வீரம்’ என்றும் சிலர் கொண்டாட, தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் கொந்தளித்துவிட்டனர்.

‘இந்த சம்பவம் முழுக்க முழுக்க கற்பனையாகும். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த காமராஜர் எங்கே? முதுகுளத்தூர் வட்டார தலைவர் பதவி வகித்த தேவர் எங்கே? தான் கலந்துகொண்ட சாதி கூட்டத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு, பொய்யான தகவலைக் கூறி, பெருந்தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விருதுநகர் நாடார்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். </>அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதிய மோதல்களை உருவாக்கி, அரசியல் லாபம் அடையப் பார்க்கிறார் மு.க.ஸ்டாலின். அவரைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறார். 

அமரராகிவிட்ட இரு பெரும் தலைவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். ஏதாவது ஒரு வகையில், இந்தத் தலைவர்களின் பெயரை முன்னிறுத்தி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்குவது கொடுமையிலும் கொடுமை!

-சி.என்.இராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக