வியாழன், 16 நவம்பர், 2017

ஜிம்பாப்வே ராணுவ புரட்சி ! அதிபர் ராபர்ட் முகாபே கைது?

தினத்தந்தி :ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. ஹராரே, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே. ஏழை நாடான அங்கு 1980–ம் ஆண்டுமுதல் 1987–ம் ஆண்டு வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்து ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93).
அங்கு அடுத்த அதிபர் ஆவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தவர் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வா. ஆனால் தனது மனைவி கிரேஸ் முகாபேவுக்கு (52) அதிகார போட்டியாக அமைந்து விடுவார் என்று கருதி, மனன்காக்வாவை அதிபர் ராபர்ட் முகாபே கடந்த வாரம் திடீரென பதவியில் இருந்து நீக்கி விட்டார்.
இதையடுத்து அடுத்த அதிபர் போட்டியில் ராபர்ட் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபே (52) முன்னணிக்கு வந்தார்.
ஆனால் எமர்சன் மனன்காக்வா–கிரேஸ் முகாபே இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. இதன் காரணமாக அவர்களின் ஜானு பி.எப் கட்சியில் பிளவு உண்டானது. எமர்சன் மனன்காக்வாவுக்கு ஆதரவு அளிக்காதவர்களுக்கு அவரது கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த மாதம் கிரேஸ் முகாபே கூறி இருந்தார்.

இந்த நிலையில், அதிபரின் கட்சியில் இருப்பவர்கள் களை எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் ராணுவம் தலையிட தயாராக உள்ளது என நேற்று முன்தினம் ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவென்கா கூறினார்.

ஆனால் அவர் மீது ஜானு பி.எப் கட்சி, தேசத்துரோக குற்றம் சாட்டியது.

அதைத் தொடர்ந்து நேற்று அதிரடியாக ஜிம்பாப்வே அரசின் தொலைக்காட்சி நிலையத்தை (இசட்.பி.சி.) ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். இந்த தொலைக்காட்சி, அதிபரின் பிரசார பீரங்கியாக செயல்பட்டு வந்தது. அதன் ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். சிலர் தாக்குதலுக்கும் ஆளாகினர்.

இதற்கிடையே ராணுவ மேஜர் ஜெனரல் மோயோ, டெலிவி‌ஷனில் தோன்றினார். அவர் ராணுவ புரட்சி நடக்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், அதிபர் ராபர்ட் முகாபேவும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளனர், அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்று கூறினார்.

ஆனால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் ராபர்ட் முகாபேயிடம் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக