ஞாயிறு, 12 நவம்பர், 2017

உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு தினம்’,,, கடுமையாகச் சாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் .. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்

மின்னம்பலம் :இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ‘இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு தினம்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுடனே, இந்தியாவில் எந்தவொரு மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி கிடைக்கும். சில கல்லூரிகளை ஆய்வுசெய்த பின்னர், அதற்கு அனுமதி மறுப்பதும் நடப்பதுண்டு. இதற்கு எதிராக, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும்.
லக்னோவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. முன்னதாக, அந்த கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்திருந்தது. இதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, சி.பி.ஐ. விசாரணையில் இறங்கியது. இதுதொடர்பாக, முன்னாள் ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.குடூசி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ஜாமீனில் விடுதலையாகினர். இதுபற்றி விசாரிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் விரைவில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டனர்.


வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) அன்று, இந்த ஐந்து பேர் அமர்வு கூடவிருந்தது. இந்த நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியளிக்க ஊழல் நடந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) மாலை மேலும் ஒரு மனு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியல் சாசன அமர்வை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு. அதனால், நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல் ரஷீத் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்றனர்.
அரசு சாரா அமைப்பு சார்பில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீதிபதிகளின் இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்தார். ‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் இடப்பட்ட உத்தரவை ரத்து செய்யும் அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். அதோடு, நீதிபதி தீபக் மிஸ்ரா இதை விசாரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரசாந்த் பூஷனின் கருத்தை நீதிபதிகள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை எதிர்த்து, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.
“இந்த நாள் உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். நீதிமன்றம் மீதான எனது நம்பிக்கை வலுவிழந்துவிட்டது. எனது வாதங்களைச் சொல்ல, அனுமதி தரப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக்குழு இதை விசாரிக்க வேண்டுமென்று கோரினேன். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் இதில் சம்பந்தமிருப்பதால், அவர் இதில் தலையிடக் கூடாது என்று கூறினேன். ஆனால், அவர் என் வாதத்தைக் கேட்காமல், இதில் சம்பந்தப்படாத சில வழக்கறிஞர்களின் கருத்துகளைக் கேட்டார்” என்று கொதித்திருக்கிறார் பிரசாந்த் பூஷன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அடுக்கடுக்காக வந்துசேரும் இந்நாளில், மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷனின் பேச்சு பலரது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக