vikatan குணவதி :
``என்
கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தையும்
சமூகத்தையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என்
கதைகளில் தவறு எனச் சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக
அமைப்பைத்தான் குறிக்கின்றன” என்றார் உருது எழுத்தாளர் சதத் ஹசன்
மன்ட்டோ.
சமூகத்தின் புனித மதிப்பீடுகளைத்
தோலுரித்த அவர், 22 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து வானொலி நாடகத்
தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு சுய அனுபவக் குறிப்புத்
தொகுதிகளை எழுதி சமூகத் தடைகளைத் தன் எழுத்துகளால் நொறுக்கினார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற டைம்ஸ் இலக்கியத் திருவிழாவில் (Times Lit
Fest) பங்குபெற்ற இயக்குநர் நந்திதா தாஸ்,
சதத் ஹசன் மன்ட்டோ வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு வரவிருக்கும் அவரது
`மன்ட்டோ’ திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
``எல்லோரும் எதிர்பார்த்துக்
காத்திருப்பதைப்போல, திரைக்கு வரவிருக்கும் எனது திரைப்படமான `மன்ட்டோ’,
எழுத்தாளர் சதத் ஹசன் மன்ட்டோவின் வாழ்க்கைச் சரிதமல்ல; மன்ட்டோவைப்
புகழ்வதற்காக, அவரைப் பற்றி மட்டுமே பேசுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படமும்
அல்ல. மன்ட்டோவின் நான்கு வருட வாழ்க்கையை மட்டும், அதாவது மன்ட்டோவின்
வாழ்வில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளையும்,
பிந்தைய இரண்டு ஆண்டுகளையும், பிரிவினை ஏற்படுத்திய விளைவுகளையும் குறித்த
கதை இது. மொஸார்ட் குறித்து ஒரு படம் எடுத்தால், அவரது இசையும் அந்தப்
படத்தில் இருக்க வேண்டும் என விரும்புவீர்கள் அல்லவா? மன்ட்டோவைக்
குறித்து படம் எடுப்பதுகூட அப்படித்தான். மன்ட்டோவின் ஐந்து சிறுகதைகள்,
திரைக்கதைக்குள் பின்னப்பட்டிருக்கின்றன.
மன்ட்டோவின்
எழுத்துகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள், இந்தியா-பாகிஸ்தான்
பிரிவினையால் கொடுத்த மன உளைச்சல், தனக்குப் ப்ரியமான மும்பையிலிருந்து
பாகிஸ்தானின் லாகூருக்கு இடம்பெயர்ந்த மன்ட்டோவின் மனநிலை போன்ற அனைத்து
நிகழ்வுகளிலும் மன்ட்டோவாக நடித்திருக்கும் நவாஸுதீனும், மன்ட்டோவின்
மனைவி சஃபியாவின் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ரசிகா துகலும்
வாழ்ந்திருக்கிறார்கள். எழுத்தாளராக, கணவராக, மனிதராக, தந்தையாக
மன்ட்டோவின் பல பரிமாணங்களை விவரிக்கவிருக்கிறது இந்தத் திரைப்படம்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை,
எழுத்தாளர் மன்ட்டோவை மனதளவில் மிகவும் பாதித்திருக்கிறது. பிரிவினைக்குப்
பிறகு, லாகூரிலிருந்து திரும்பி இந்தியாவுக்கு வருமாறு, இங்கு இருந்த
அவரது நண்பர்கள் அவருக்குப் பல கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அந்தக்
கடிதங்கள் எவற்றையும் மன்ட்டோ படிக்க முயலவில்லை எனத் தெரிகிறது.
நண்பர்களின் கடிதங்களைப் படிக்குமாறு சஃபியா வலியுறுத்தியதாகவும், அவர்
வேண்டிக்கொண்டதற்காக உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய கடிதத்தை
மன்ட்டோ படிப்பதாகவும் ஒரு காட்சி அமைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்
நந்திதா.
`பத்மாவதி' திரைப்படத்தின் மீதான
சர்ச்சைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்,
``ஒரு படைப்பு, புரட்சியெல்லாம் செய்யாது. ஆனால், குறிப்பிட்ட ஓர் எண்ணத்தை
நன்மையோ தீமையோ ஆழ்மனங்களில் விதைக்கக்கூடிய வலிமை படைப்புக்கு உண்டு.
படைப்பின் ஆற்றல் உணரப்படுவதால்தான் அது தடைசெய்யப்படுகிறது. இதுதான்
எதிர்த்துப் பேசவேண்டிய நேரம். இப்போது பேசவில்லையென்றால், எதை உடுத்த
வேண்டும், எதை உண்ண வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என அனைத்தையும் பிறர்
சொல்லிக்கொடுப்பார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. இன்டெர்நெட் யுகத்தில்
படைப்புகளைத் தடைசெய்வது கேலிக்கூத்தானது” என்றார்.
`பத்மாவதி' திரைப்படத்தில் நடித்த
தீபிகாவுக்கும் இயக்குநருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதைக் குறித்து
கேட்கப்பட்டதற்கு, `` `Fire' திரைப்படம் வெளியானபோதும், `water'
திரைப்படத்துக்காக தலைமுடியை வழித்துத் தயாரானபோதும், படமாக்கப்படுவதற்கு
முன்பே இந்து மதத்துக்கு எதிரானது என முத்திரை குத்திவிட்டார்கள். கொலை
மிரட்டல்கள் குறித்து என்ன சொல்வது. பிதற்றலாக விடுக்கப்படும் இந்தக் கொலை
மிரட்டல்கள், என்னைப் பெருமளவில் காயப்படுத்துகின்றன. அதற்காக அவர்களைத்
தடுக்கவும் அவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கவும் என்னால்
முடியுமா. மிரட்டல்கள் விடுப்பவர்கள், தரத்தைத்
தாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும். 2018-ம்
ஆண்டில் மன்ட்டோவின் கதை வெளிவரும். பார்ப்போம்'' என்றார் தைரியமும்
தன்னம்பிக்கையும் கலந்த பெண்மணி நந்திதா தாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக