செவ்வாய், 7 நவம்பர், 2017

ஆர்,கே,நகர் திரைப்படம் ... “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா... நீ என்ன எம்.ஜி.ஆரா...”

கமலைக் குறி வைக்கும் `ஆர்.கே.நகர்’ டீசர்?minnambalam :தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கும் வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தயாரிப்பில் உருவாகிவரும் `ஆர்.கே. நகர்’ படத்தின் டீசரைப் படக் குழு வெளியிட்டது. அந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் தற்போது சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.
தமிழ் சினிமாவுலகில் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிறந்த தினம் இன்று (நவம்பர் 7). அவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாகப் படத்தின் டீசரை நேற்று (நவம்பர் 6) இரவு 10 மணியளவில் வெளியிட்டனர். படத்தின் டீசரில் “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா... நீ என்ன எம்.ஜி.ஆரா...” என்ற ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. இந்த வசனம் கமலை விமர்சிப்பதுபோல் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் `கயல்’ சந்திரன் நேரடியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா டீஸரை பார்க்கும்வரை உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். இது ரொம்ப ஓவர். பெரும் அதிருப்தி அளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். சந்திரனின் ட்விட்டை பார்த்த வெங்கட் பிரபு, “ப்ரோ நாளை பேசலாம். தயவுசெய்து எந்த முடிவுக்கும் வராதீங்க” என்று கமெண்ட் போட்டிருந்தார்.
அதன் பிறகு இரவு 11 மணியளவில் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில், “பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா...” எனத் தெரிவித்ததுடன், அவரும் கமலும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதற்கு சந்திரன், “ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிகட்ட பிறந்தநாள் வாழ்த்தா...” என்று காட்டமாக கேட்டுள்ளார். படத்தின் டீசருக்கு ஆதரவும் எதிர்ப்புக் குரலும் எழுந்துள்ளன.
வெங்கட் பிரபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மூலம் தயாரித்துவரும் இப்படத்தை அவரின் உதவியாளரும், ‘வடகறி’ படத்தின் இயக்குநருமான சரவண ராஜன் இயக்குகிறார். ஹீரோவாக வைபவ் நடிக்கும் இதில் அவருக்கு ஜோடியாக `சென்னை-28 2’ புகழ் சனா நடித்துவருகிறார். பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இதற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு, பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு. இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக