வெள்ளி, 3 நவம்பர், 2017

அப்போலோவை அம்பலப்படுத்திய ஹேமநாதன் கொலை ..... ? கூவத்தில் உடல்?

vikatan:  ஜெ மரணம் மட்டுமின்றி, அப்பல்லோவில் தன் தாய்க்கு சிகிச்சையளித்த ஹேமநாதனின் நிலையும் மர்மமாக மாறியிருக்கிறது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை ஊழியர் ஹேமநாதன். தன் தாய் பானுமதிக்கு மூக்கில் ரத்தம் வந்தது தொடர்பாக அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்த்தார். லட்சக்கணக்கில் செலவழித்தும், மண்டையோட்டுப் பகுதியில் துளையிட்டு சிகிச்சையளித்தும், பானுமதி குணமடையாத நிலையில் கடைசியில் அவரை ஜி.ஹெச்சின் அவசர சிகிச்சைப் பகுதியில் கொண்டுபோய் வீசியது அப்பல்லோ நிர்வாகம். அவரை கண்டுபிடித்து தூக்கிவந்து வீட்டில்வைத்து சிகிச்சை செய்துவந்தார் ஹேமநாதன்.

இதுதொடர்பாக அவர் நக்கீரனைத் தொடர்புகொண்டு நடந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் முறையிட,
"அப்பல்லோ பேஷண்ட் ஜி.ஹெச்சில் அனாதையாக... ஜெ.வின் கதியும் இதுதானா' என 2017, செப் 18- 20 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஹேமநாதன் மீது அப்பல்லோ வழக்குத் தொடர்ந்தது. ஹேமநாதனும் தன் தாய்க்கு நேர்ந்த அநீதியை வெளிப்படுத்தும் நோக்கில் அப்பல்லோ மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தன் தாய்- தந்தையை வழக்கமாகச் சென்று பார்த்துவந்துகொண்டிருந்த ஹேமநாதன் அக்டோபர் 8 முதல், வீட்டுப்பக்கம் வராமல்போகவே, அக்டோபர் 11-ஆம் தேதி திருவல்லிக்கேணி (டி-1) காவல் நிலையத்தில் ஹேமநாதனின் சகோதரியும் மெரினா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருமான லதா புகார் கொடுத்தார். 

ஹேமநாதனின் செல்போன் கடைசியாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட இடம் தொடர்பான விவரங்களின் அடிப்படையில் அவரைத் தேடிவருவதாகவும், விரைவில் கண்டுபிடித்துவிடுவதாகவும் டி-1 காவல்நிலைய ஆய்வாளர், ஹேமநாதன் குடும்பத்துக்கு நம்பிக்கை அளித்திருந்தார்.

இந்நிலையில்தான் லதாவுக்கு கோட்டை காவல் நிலையத்திலிருந்து திடீரென தொலைபேசி அழைப்பொன்று வந்தது. போனில் பேசிய காவல்துறையினர், ""கூவம் ஆற்றில் பாடியொன்று மிதக்கிறது. அதை நேரில் வந்து பார்த்து உங்களது தம்பியா- இல்லையா என்று உறுதிசெய்யுங்கள்'' என்று கூறியதும் லதா பதறிப்போய்விட்டார்.

லதாவின் பதற்றத்தைப் பார்த்து அவரது தந்தை என்னவென்று கேட்க, அவர் பயப்படாத விதத்தில் விவரத்தைத் தெரிவித்திருக்கிறார். பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு லதா தன் உறவினர்கள் சகிதம் வந்தார். லதா மட்டும் உடலைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டார். நீரில் ஊறி வீங்கிய நிலையிலிருந்த உடலைப் பார்க்கச் சகிக்காமல், அப்போதே வெளியே வந்துவிட்டார் லதா. வெளியே வந்தபின்பு, ""அது என் தம்பியாக இருக்காது. தோற்றமும் உயரமும் மாறுபடுது. ஆனா, முடியில்லாத தலை, நெஞ்சுப் பகுதியைப் பார்க்கும்போது டவுட்டாக இருக்கிறது'' என்றிருக்கிறார்.

எனினும் மருத்துவர்கள் ஹேமநாதனின் அங்க அடையாளங்களைக் கேட்டனர். கால்முட்டியில் ஆபரேஷன் செய்த அடையாளம், ஹெர்னியா ஆபரேஷன் செய்தவர் என்பதால் அதற்கான அடையாளம், மேலும் வாயில் செயற்கைப் பல் ஒன்று கட்டியிருந்ததற்கான அடையாளங்களைக் கூறினார் லதா. இந்த அடையாளங்களை வைத்து உறுதிசெய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறினர்.  போஸ்ட்மார்ட்டம் முடிந்தபின் 24-ஆம் தேதி வந்து பார்த்தபோது,
""நான் சொன்ன அடையாளங்கள் எதுவும் இல்லை. அந்த உடல் என் தம்பியுடையதில்லை'' என்றார் லதா. மருத்துவர்களும் அவரது கூற்றை மறுக்கவில்லை." 

கிட்டத்தட்ட என் தம்பி காணாமல் போய் ஒரு மாதம் கடந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுபோல் தெரியவில்லை. என் தம்பி என்ன ஆனார் என்று தெரியாதநிலையில் அவர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரப்போகிறது. இந்த இக்கட்டை எதிர்கொள்வதற்காகவாவது காவல்துறை என் தம்பியை உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும்'' என்கிறார் சப்-இன்ஸ்பெக்டரான லதா. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் பிரபுவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, 

"நாங்கள் தொடர்ந்து அவரைத் தேடிவருகிறோம். ஏதோ காரணங்களால் அவரே தலைமறைவாகியிருப்பார் போலத் தெரிகிறது'' என்று காணாமல் போனவரையே காரணம் காட்டுகிறது காவல்துறை.கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உடலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரி வராததால், அரசு மருத்துவமனையின் பிணவறையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அம்மாவுக்கு சரியான சிகிச்சை தரவில்லை என வழக்குத் தொடர்வது ஒரு குற்றமா? அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறோம் என பேசியது பெரிய தப்பா... அதற்காக என் மகனையே காணாமலடித்துவிட்டார்கள்'' என கதறுகிறார் ஹேமநாதனின் தந்தை கமலநாதன்.அப்பல்லோவுக்கு எதிராக வழக்குத் தொடுத்த நிலையில் காணாமல் போயிருக்கிறார் ஹேமநாதன். ஹேமநாதன் மட்டுமன்றி அவரது குடும்பமே காவல்துறையில் பணியாற்றியிருந்தும்அவர் காணாமல் போனது தற்செயலா- திட்டமிட்டதா என்கிற வினா எழுந்திருக்கும் நிலையில், அதற்கு விடைசொல்லவேண்டிய பொறுப்பு காவல்துறைக்குத்தான் இருக்கிறது. 

கூடவே, கூவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் ஹேமநாதனுடையது இல்லையென்றால் யாருடையது, அவர் எப்படி இறந்தார் என்பதற்கான விடைகளைக் கண்டுபிடிக்கவேண்டிய பொறுப்பும் இருக்கிறது.<>-அ.அருண்பாண்டியன்படங்கள். ஸ்டாலின்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக