வெள்ளி, 3 நவம்பர், 2017

தார் ஊழல் 1000 கோடி அம்பலம்... குட்கா ஊழல் தொடர்ந்து புதிதாக தார் கொள்ளை!

Special Correspondentஸ்பெல்கோ : ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தார் கொள்முதல் செய்து புது சாலை அமைக்க, 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு ஆண்டுதோறும் ரூபாய் 3000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த பணிக்கான ஒப்பந்த நாளில் தார் என்ன விலையில் கொள்முதல் செய்யப்படுகிறதோ, அதற்கும் அந்தப் பணிகளை நிறைவேற்றுகிற போது அன்றைய நாளில் தாரின் சந்தை விலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பந்தக்காரர்களோ அல்லது நெடுஞ்சாலைத் துறையினரோ வழங்க வேண்டும். ஒப்பந்தம் வழங்குகிற போது இருக்கிற விலைக்கும், அதை நிறைவேற்றுகிற போது விலை அதிகமாக இருந்தால் அந்த வித்தியாசத் தொகையை நெடுஞ்சாலைத்துறை வழங்க வேண்டும்.
மாறாக ஒப்பந்தம் வழங்குகிற போது தார் கொள்முதல் விலைக்கும், நிறைவேற்றுகிற போது விலை குறைவாக இருந்தால் அந்த வித்தியாசத்தை ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 2014 இல் ஒப்பந்தக்காரரிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது தார் விலை ஒரு டன் ரூபாய் 41 ஆயிரத்து 360 ஆக இருந்தது. அதே தாரின் விலை மார்ச் 2015 இல் பணி நிறைவடைகிற போது ரூபாய் 30 ஆயிரத்து 260 ஆக குறைந்திருந்தது.

அதேபோல, செப்டம்பர் 2015 இல் ஒரு டன் தாரின் விலை ரூபாய் 31 ஆயிரத்து 100 ஆக இருந்தது. அதே தாரின் விலை பணி நிறைவடைந்த மார்ச் 2016 இல் ரூபாய் 23 ஆயிரத்து 146 ஆக குறைந்தது.
ஒரு கி.மீ. சாலை அமைக்க 100 டன் தார் தேவைப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் 4 லட்சம் டன் தார் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் விலை மாற்றங்களை வைத்து ஒப்பந்தக்காரர்களோடு நெடுஞ்சாலைத்துறையினர் சேர்ந்து கொண்டு ஆயிரம் கோடிக்கும் மேலாக 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் வித்தியாசமாக உள்ள தொகையை ஒப்பந்தக்காரரிடமிருந்து நெடுஞ்சாலைத்துறை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் ஒப்பந்தக்காரரும், அதிகாரிகளும் சேர்ந்து ஊழல் செய்திருக்கிறார்கள்.
இதன் வாயிலாக தார் கொள்முதலில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த துறையை தொடர்ந்து கையில் வைத்து இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக ., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக