வியாழன், 30 நவம்பர், 2017

ஸ்டாலின் வைகோ சந்திப்பு ....

மின்னம்பலம் : கோவை விமான நிலையத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தம்பி மகள் வித்யா கோகுல் உடல்நலக்குறைபாடு காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது, மரணம் குறித்து துக்கம் விசாரிப்பதற்காக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(நவம்பர் 30) கோவை வந்திருந்தார். வித்யா கோகுலின் மரணம் குறித்து துக்கம் விசாரித்துவிட்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி, உயிரிழந்த ரகுவின் வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ”மணக்கோலத்தில் இருக்க வேண்டிய ரகு பிணக்கோலத்திற்கு மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. ஆனால், ஆளும்கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மோதி ரகு பலியாகியுள்ளது வேதனை அளிக்கிறது.
எந்தவித பேனர்கள், கட் அவுட்களை வைக்கக்கூடாது என்ற உத்தரவு திமுகவில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்றம் கண்டித்தும் ஆளுங்கட்சி ஆடம்பர பேனர்களில் கவனம் செலுத்துகிறது. ரகுவின் மரணத்துக்கு, தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கின்படி, கோவையில் பேனர் கட்அவுட்களை அகற்ற, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பேனர், கட் அவுட்கள் வைக்க முறைப்படி அனுமதி கேட்டாலும் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
பின்னர், சென்னை செல்வதற்காகக் கோவை விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது வித்யா கோகுல் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது. மு.க.ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். “அரசியல் நாகரீகம் காரணமாக சந்திப்பதில் தவறில்லை. ஆர்.கே நகர் தேர்தல் குறித்து, நாங்கள் பேசவில்லை” எனச் சந்திப்பு தொடர்பாக வைகோ விளக்கமளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக