ஞாயிறு, 19 நவம்பர், 2017

அழகிரி : ‘நான் ஒதுங்கி இருந்தால், ஒதுங்கியே போயிடுவேனா... பார்த்துக்கலாம்!’

அழகிரி ஏன் அப்படி சொன்னார்?மின்னம்பலம் : 'தலைவர் கலைஞர் அழைத்தால் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன்’ என அறிவித்திருக்கிறார் மு.க.அழகிரி. உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியை பார்க்க அடிக்கடி வந்து போனபடி இருக்கிறார் மு.க. அழகிரி. கடந்த மாதம் இறுதியில் மு.க. முத்து பேரன் திருமணத்துக்கு வந்தபோது அழகிரி குடும்பம் ஒட்டுமொத்தமாக கருணாநிதியை சந்தித்தது. செல்ஃபியும் எடுத்துக் கொண்டது. இதன் பிறகுதான், அழகிரியின் ஆதாரவாளர்கள் சிலர், ‘நீங்க அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தால் எப்படி... நீங்க மறுபடியும் பழையபடி வெளியே வரணும்...’ என்று அவரிடம் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இந்த சமயத்தில்தான் இன்று சென்னைக்கு வந்த அழகிரி, ‘தலைவர் கலைஞர் அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேன்’ என சொல்லி ஸ்டாலின் வட்டாரத்துக்கு பீதியை கிளப்பி இருக்கிறார்.


‘கருணாநிதியை பொருத்தவரை அவரது மருத்துவ செலவுகளுக்கும் சரி...மனைவி தயாளு அம்மாள் சிகிச்சைக்கும் சரி.. குடும்ப செலவுகளுக்கும் சரி... அவருடைய சொந்த வங்கிக் கணக்கில் இருந்துதான் பணம் கொடுப்பார். ஒவ்வொரு செலவுக்கும் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பது கருணாநிதியின் நீண்டகால பழக்கம். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு கருணாநிதிக்கு கையெழுத்துப் போடுவதில், சிக்கல் ஏற்பட்டது. இதனால், கருணாநிதியின் பெருவிரல் கைரேகை வைக்கப்பட்ட செக் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த மாதத்தில் இது சம்பந்தமாக பேசிய கருணாநிதியின் ஆடிட்டர், ‘கைரேகை வைப்பது நல்லது இல்லை. நாளைக்கு இதை வைத்து ஒரு சர்ச்சை உருவாகிடக் கூடாது. அவரது வங்கி கணக்கை ஆப்ரேட் செய்யும் பவர் வேறு ஒருவருக்கு கொடுப்பது நல்லது. அது யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்க...’ என குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார்.


செல்வி, முக.தமிழரசு, கனிமொழி ஆகிய மூவருமே கருணாநிதியின் வங்கி கணக்கை நிர்வகிக்கும் பவரை, ஸ்டாலினிடமே கொடுக்கலாம் என சொல்லிவிட்டார்களாம். இந்த தகவல் அழகிரிக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அவரோ, ‘அதெல்லாம் முடியாது. அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது’ என மறுத்துவிட்டாராம். வாரிசுகள் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், பவர் கொடுப்பதில் சிக்கல் வரும். அதனால், கருணாநிதி வங்கிக் கணக்கு ஸ்டாலினிடம் போவதில் திடீர் தடை ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினர் ரொம்பவே டென்ஷன் ஆக, ‘நான் ஒதுங்கி இருந்தால், ஒதுங்கியே போயிடுவேனா... பார்த்துக்கலாம்!’ என மறுபடியும் லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறார் அழகிரி.
அதனால்தான் இப்போது அப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக