செவ்வாய், 14 நவம்பர், 2017

விவேக் விளக்கம்! இது சாதாரண சோதனைதான் பெரிது படுத்தவேண்டாம் .. பேரம் படிஞ்சிடுச்சோ?



ரெய்டு: விவேக் விளக்கம்!மின்னம்பலம் :ஐந்து நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக் விளக்கமளித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித்துறை கடந்த 9ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்த ஆரம்பித்தது.ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், அண்ணா நகரிலுள்ள விவேக் மாமனார் பாஸ்கரன் வீடு என இந்த சோதனை மொத்தமும் விவேக்கை குறிவைத்தே நடத்தப்பட்டது.

ஐந்து நாட்களாக நீடித்து வந்த சோதனையானது, நேற்றைய தினம் ( நவம்பர் 13) நிறைவுற்றது. சோதனையில் நகைகளும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. சோதனை முடிவில் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விவேக்கை அழைத்துச் சென்றனர்.
இந்த சூழ்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து இன்று ( நவம்பர் 14) தன்னுடைய இல்லத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஜெயா டிவி சிஇஓ விவேக்,"ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறேன். என்னுடைய வீட்டில் ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் குறித்து கணக்கு வழக்குகள் குறித்து கேள்வியெழுப்பினர், அதனைக் கொடுத்தேன் என்ற அவர், திருமணத்தின் போது என்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்து கேட்டனர். எனது மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்துள்ளேன்.
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடைமையை செய்தார்கள், வருமான வரி கட்ட வேண்டியது எனது கடமை, அதனை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இது சாதாரண சோதனைதான். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள், அப்போதும் தகுந்த ஒத்துழைப்பு தருவேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக் முதல்முறையாக ஊடகங்களை சந்தித்துப் பேட்டியளித்துள்ளார், இதற்கு முன்பாக ஜாஸ் சினிமாஸ் சர்ச்சை வந்தபோது விவேக்கின் பெயரில் சில அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக