புதன், 22 நவம்பர், 2017

அன்புசெழியன் .... ஒரு கந்துவட்டி கொடியவனின் வானளாவிய அதிகாரம் ,,, மன்னார்குடியில் தொடங்கி கோடம்பாக்கம் வரை ..

மின்னம்பலம் : கந்து வட்டி பிரச்னை காரணமாக இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியுமான அசோக் குமார் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கந்து வட்டி தற்கொலை: ஒருவருக்கு எதிராக ஒரு துறை!சசிகுமாருக்குச் சொந்தமான இந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் தொடக்கம் முதலே நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வருபவர் அசோக். மதுரையைச் சேர்ந்த இவர், சசிகுமார் படங்களின் வரவு செலவு கணக்குகளைக் கவனித்து வந்தார். இந்த நிலையில் கம்பெனி புரொடக்ஷன் தயாரித்த படங்களின் தோல்வியால் ஏற்பட்ட பணப் பிரச்னைக் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி சென்னை, வளசரவாக்கத்திலுள்ள ஆற்காடு சாலையின் லண்கோர் அப்பார்ட்மென்ட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அசோக் எழுதிய மரண வாக்குமூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அவர்,
“என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன் பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும் நான், அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும், ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.
இதுவரை பத்தாண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம் G.N.அன்புசெழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர், கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடக்க ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார். யாரிடம் உதவி கேட்பது? அதிகாரவர்க்கம் (காவல் துறை), அரசாங்கம், ஆள்வோரின் பெரும்புள்ளிகள், CINEMA FEDERATION தலைவர் செல்வராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.
எனது உயிரினும் மேலான சசிகுமாரா... என்னால் உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடமிருந்து மீட்பதற்கு திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடு. நீ ரெம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும், என் சாவை வைராக்கியமாக எடுத்து கொள். என்னைப் போல் நீ கோழை ஆகிவிடாதே. எத்தனையோ பேரை வாழவைத்த நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டு போகிறேன். மன்னித்து விடு. சசி என்னை நினைத்து பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ “சுயம்பு”. என்னைக் காப்பாத்தாத கடவுள் உன்னையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்பு செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.
எனக்கு வாழ தகுதியில்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை, அதனால் எனது சாவை நானே “தற்கொலை” மூலம் தேடிக் கொள்கிறேன்.
அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்து விடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருடங்கள் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதை பற்றிக் கவலைப்படாதீர்கள். சசியைப் பார்த்துக்கொள்ளுங்கள், அவன் பாவம், அவன் குழந்தை.
எதிலும் ஜெயிக்காத நான் எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்.
யாரேனும் G.N.அன்பு செழியனுக்குச் சொல்லுங்கள்... அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர்கள் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள்.
[இந்த கடிதம்கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்கு தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும். என் உடலில் உள்ள தழும்புகள் கடந்த சில காலமாக எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டது]
இப்படிக்கு,
பா.அசோக் குமார்”
என்று தன்னுடைய இயலாமையை மரண சாசனமாக எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தத் தற்கொலை விவகாரம் தமிழ்த் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பு செழியன் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துவருவதால் அவரைப் பற்றி எவரும் வெளிப்படையாக பேச முன்வரவில்லை. அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து என்று திரைத்துறையைத் தன் கைக்குள் வைத்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் கருத்து தெரிவித்தாலும் இந்த மரண வாக்குமூலம் பெயரை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னும் கடன் பிரச்னை காரணமாக பிரபல தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்ட போதும் அன்பு செழியனுடைய பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன், இந்த வழக்கிலும்கூட ‘பணம் கேட்டு ஆட்களை வைத்து மிரட்டினார்’ என்றெல்லாம் அசோக் குறிப்பு எழுதிவைத்தும்கூட ‘தற்கொலைக்குத் தூண்டியதாக மட்டும் இபிகோ 306இன்படி’ வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை. ஒரு மனிதனின் இறப்புக்கான காரணம் இத்தனை எளிதில் நீர்த்துப்போவதை இந்நாடு சாட்சியாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் மறுநாள் காலை (இன்று 22.11.2017) வரச்சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
இறந்த அசோக் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சசிகுமார் தனது நண்பன் குறித்து, “என்னுடைய நிழலாக இருந்தவன். என் கூடவே இருந்து இணை தயாரிப்பாளராக என்னுடைய பணம், படம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தவன். பணப்பிரச்னை காரணமாக என்னுடைய படத்தை (கொடிவீரன்) வெளியிடக் கூடாது என்று ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான்” என்று கூறினார்.
அப்போது சசிகுமாருடன் இயக்குநர்கள் சமுத்திரகனி, சேரன், கரு.பழனியப்பன் மற்றும் அமீர் இருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து அமீர், “ஃபைனான்சியர் அன்பு செழியன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து இது போன்ற துர்சம்பவங்கள் தமிழ்த் திரையுலகில் நடைபெறுகிறது. இவற்றை தட்டிக்கேட்க வேண்டிய சங்கங்கள் அமைதி காக்கக் கூடாது. அப்படி சங்கங்கள் தொடர்ந்து அமைதி காத்தால் மொத்த சினிமாத் துறையையும் இழுத்து மூடிவிடுங்கள். இங்குப் பாதிக்கப்பட்ட எவரும் வெளிப்படியாகப் பேச முன்வருவதில்லை. சினிமாவில் மட்டும் தான் வீர வசனம் எல்லாம் பேசுகிறார்கள். இதே நிலை நீடித்தால் திரைத்துறையில் இன்னும் பலர் அசோக் குமாரின் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதற்குள் தயாரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அமீர் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பிருந்தே தயாரிப்பாளர் சங்க விஷாலின் நிலைப்பாடு அனைத்துப் பக்கத்திலிருந்தும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அறிக்கையும் வந்தது.
கந்து வட்டிக் கொடுமைக்குக் கடைசி பலியாக இது அமையட்டும்!
கந்து வட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்து வட்டி. இன்று திரைத்துறையிலும் ஓர் உயிரை பலி வாங்கியிருக்கிறது.
எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, காப்பாற்றத் தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில்புரியக்கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ, மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்து வட்டி கும்பலுக்கும், கட்டப் பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இது நேர்மையாகத் தொழில் செய்யும் அனைத்துத் தயாரிப்பாளர்களின் முடிவு.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல, கொலை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, அசோக் குமார் போல நேர்மையான இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்.
விஷால்
தலைவர், தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய வீச்சு எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக