ஞாயிறு, 26 நவம்பர், 2017

அப்போலோ கார் பார்க்கிங் துரத்த்டப்படும் ஆயிரம் விளக்கு மக்கள்

சென்னை
வினவு :ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் குடிசைப்பகுதி திடீர் நகர். இப்பகுதி கூவம் கரையின் ஆக்கிரமிப்பு எனவும், இங்கு வாழும் மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்துவதாக கூறியும், 21.11.2017 இரவு எட்டு மணியளவில் திடீர் நகரை தரைமட்டமாக்கும் வேலையை தொடங்கியது தமிழக அரசு.

திடீர் நகரில் கிட்டத்தட்ட 2,500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இங்கே சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 2001 தி.மு.க ஆட்சியில் 800 காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அடுத்து வந்த அதே தி.மு.க. ஆட்சியில் தான் சிங்கார சென்னை என்ற பெயரில் இம்மக்களை காலி செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், போராட்டம் மறியல் என மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பவும் காலிசெய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பேதம் இல்லாமல் உழைக்கும் வர்க்கமாக சேர்ந்து வாழ்கின்றனர் இப்பகுதி மக்கள். திடீர் நகரை சேர்ந்த பெண்கள் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வீட்டு வேலை செய்வதற்கும், ஆண்கள் துப்புரவு, பெயிண்டிங், கம்பி கட்டுவது, ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த சில இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களது குழந்தைகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இப்பகுதியை சுற்றியே இவர்கள் வாழ்க்கை தேவைகளுக்கான வேலைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பகுதிக்கு என அங்கன்வாடியும் திருச்சபையும் கோவிலும் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பள்ளி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலை என அனைத்து அத்தியாவசிய தேவைகளும் இம்மக்களுக்கு இங்கே கிடைக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்ததற்கு சாட்சியாக அரசு ஆதாரம் அனைத்தும் வைத்துள்ள மக்களை அகதிகளைப் போல் அடித்து துரத்துகிறது அ.தி.மு.க அரசு.
( வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து காலி செய்யும் மக்கள் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கிரீம்ஸ் சாலையில் பத்தடிக்கு ஒரு போலீசு நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் மறியல் என போய்விட கூடாது என பயம் காட்டும் தோரணையில் கைது செய்து ஏற்ற வண்டிகளையும் ஆங்காங்கே நிறுத்தியிருந்தனர். உடைமைகளை எடுக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அவர்களை துரத்துகிறது போலீசு. போலீசே உடைமைகளை தூக்குகின்றனர். மறுபக்கம் ஜே.சி.பி-யை வைத்து  வீடுகளை தரைமட்டமாக்குகின்றனர்.
பெரும்பாக்கம் நகராட்சியை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஒரு பக்கம் பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். திடிர் நகரில் துரத்தப்படும் மக்கள் பெரும்பாக்கம் பகுதியில் கட்டிக் கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குதான் அனுப்படுகிறார்கள். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட சரிவர செய்யப்படாத அப்பகுதிக்கு துரத்தப்படுகிறோம் என வேதனையில் மக்கள் கண்கலங்குகிறார்கள்.
மக்களே அவரவர் உடைமைகளை கிடைக்கும் கோணிப்பையில் வாரி எடுப்பதும், இங்கும் அங்கும் குழந்தைகள் ஓடுவதும், பொருளை எடுத்துக் கொண்டு ஆசையாக வளர்த்த நம்மை விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஆடுகள் உரிமையாளர்கள் அருகாமையிலேயே இருப்பதும், அப்படியே ஒரு போர்க்களம் போல் இருந்தது அந்த காட்சி. மக்களுக்கு இருக்கும் நெருக்கடியும் அவசரமும் நம்மை யாரிடமும் நெருங்கிப் பேச தயக்கம் கொள்ள செய்தது.
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
மங்கலெட்சுமி

“அப்பல்லோ ஆஸ்பத்திரிக்காக அரசாங்கம் எங்கள அடிச்சு தொரத்துறாங்க. நான் சொன்னத அப்படியே டிவில போடுங்க. நாலு நாளைக்கி முன்ன வந்து எல்லா குடும்பத்துக்கும் பெரும்பாக்கத்துல வீடு இருக்கு. தேவைக்கி அதிகமாவே கட்டிருக்கு அரசாங்கம். அங்கப் போயி சந்தோசமா இருக்கலாம் அப்படின்னானுங்க. இப்ப மூணு குடும்பம் இருக்குற வீட்டுக்கு ஒருத்தருக்கு மட்டும் வீடுன்னு அடாவடியா காலி பன்றானுக. குருவி கூடுபோல இருந்தாலும் இந்த குடிசக்குள்ள தாயா பிள்ளையா ஒன்னா இருந்ததுங்க, வீடு டோக்கன் யாரு பேருக்குன்னு இப்ப அடிச்சுகினு சாவுதுங்க.”
ஆரோக்கிய ராஜ்

“நான் ஹாக்கி விளையாட்டு நடுவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். வசதி வாய்ப்போடு வாழும் அளவு சம்பளம் இருந்தும் பொறந்து வழந்த எடத்த விட்டு போக மனசில்லாம 9 அக்கா தங்கச்சி அண்ணங்களோட இங்கனக்குள்ளேயே வாழ்ந்துட்டேன். இன்னைக்கி போகச்சொன்னா கண்ணுல தண்ணி அடங்க மாட்டேங்குதேம்மா”
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துலேயே இதெல்லாம் நடந்துருக்கும் ஓட்டுக்காக விட்டு வச்சானுங்க. இப்ப ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சுப்புட்டானுங்க. ஏழைங்களுக்கு நாலனா செஞ்சுட்டு அதுல எட்டனா லாபம் பாக்குற ஆளு ஜெயலலிதா. அந்தம்மா போன வருசமே ஆக்கிரமிப்ப அகற்றப் போறேன்னு ஆரம்பிச்சது. ஆனா நோயி வந்து இங்கேயே படுத்துப் போச்சு.”
மாற்றுத் திறனாளி (பார்வையற்றவர்)

“எனக்கு ஆப்ரேசன் பண்ணிருக்கு பார்வை தெரியலங்கம்மா எம்பொண்ணு வீடு டோக்கனு தாராங்கன்னு காலையிலேயே போச்சு இன்னும் வரலைங்க. ஆபீசருங்க வந்து மூட்டைய தூக்குங்க மூட்டைய தூக்குங்கன்னு சத்தம் போடறாங்க. எங்கனக்குள்ள டோக்கனு தாராங்கன்னு பாத்து எம்பொண்ண கொஞ்சம் வீட்டுக்கு வரச்சொல்லுங்க.”
     பெயர் குறிப்பிடாதவர்

“இன்னாமா பேரு பேருனுகிற. ஓட்டு அட்ட ஆதார் அட்ட எல்லாம் வச்சுகினுகிறே என்னோட சீரிலு நம்பரு வர்லே வீடு இல்லேன்றானுங்க. பேற வச்சுகினு இன்னா பன்ன சொல்றே. எம்பொட்டாட்டிக்கி ரெண்டு காலும் ஆப்ரேசன் பன்னி ஒரு மாசம் கூட ஆவுல. இங்கனக்குள்ள இருந்தா யாராச்சும் பாத்துப்பாங்க. பத்தாவது மாடியில வீடு குடுத்தா மேல வந்து பாத்துப்பாங்களா. இந்த ஒங்க கண்ணு முன்னாலேயே கிஸ்னாயல ஊத்திகினு கொழுத்திகினு போப்பறேன் பாரு.” என்று அருகில் மண்ணெண்ணெயுடன் சென்றவரிடம் மற்றொருவர் கேனை புடுங்க முற்பட்டார். மக்கள் சமாதானம் செய்தனர்.
ஜான்சி என்ற குழந்தை

“புது வீட்டுக்குதான் போறோம் ஆனா எனக்கு புது வீடு பிடிக்கல. இங்கதான் புடிச்சுருக்கு. ஏன்னு சொல்ல தெரியல.”
நாகம்மா பாட்டி

“நா இந்த எடத்துக்கு வந்து 66 ஆறு வருசமாகுது. தாயா புள்ளையா பழகிகினு இங்குனக்குள்ளேயே பொழப்பு பாத்துகினு இருந்தோம். எங்கள இட்டுனு போயி எங்கேயோ காட்டுல விடப்போறான்றானுங்க. எப்படிம்மே வாழ்றது. ஆமாம்மாம்மா கெவுருமெண்டுக்கு கொல்ல நோயி வந்துட்டு அதா எங்கள இப்புடி வாரிகினு போறானுங்க. இப்ப இருக்கவனுங்கள்ளாம் கூட்டிக்குடுத்த பயலுகம்மா. அவனுக்கு என்ன ஆதாயம்னு மட்டுத்தான் பாக்குறான். அப்பல்லோ ஆஸ்பத்திரி காரனுங்க காரு நிறுத்தத்தான் இந்தன சனத்தையும் தெரத்துறானுங்க.”
பவானி

“பைத்தியம் புடிச்சாப்போல இருக்கு. வீடு ரெடியாருக்கு எல்லா தட்டுமுட்டு சாமனையும் ஏத்துறாங்க. போயி பாத்தாத்தானே தெரியும் யாருக்கு வீடு, எப்புடி வீடுன்னெல்லாம். புருசன் விட்டுட்டு ஓடிட்டான் ரெண்டு வயசு பையன வச்சுட்டு தெருவுல நிக்கிறேன்.
ஒரு தகவலு சொல்லனும். நோட்டிசு கொடுக்கனும் ஒன்னுமே இல்லாது கைய புடிச்சு இழுத்து தெருவுல தூக்கிப் போட்டா எங்கம்மா போவாம் நாங்க. வீடு குடுத்தா மட்டும் போதுமா பொழப்புக்கு இன்னா செய்வ. அங்க பெரிய பெரிய ஆபீஸுங்க இருக்கு கடை போடலாம், வீடுங்களுக்கு வேலைக்கி போலாம் எல்லாம் இருக்குன்றானுங்க இவனுங்கள நம்ப முடியாது.”
ஜெபாஸ்டின்

“நான் பள்ளி படிப்ப முடிச்சுட்டு இங்க 4 கி.மீட்டருக்குள்ள வேலை பாக்குறேன். என்னப்போலதான் இங்க உள்ள அத்தன பேரும் வேலைக்கி போய் வாரோம். எங்கள கூட்டிப்போயி 30, 40 மைலுக்கு அப்பால விட்டா வண்டி கூட கிடையாது. எப்படிங்க சரியான நேத்துக்கு வர முடியும்.”
கன்னிகா (குழந்தை)

“வீட்ட காலிபன்றாங்க. எனக்கு பரிச்ச நடந்துட்டு இருக்கு ஸ்கூலுக்கு எப்படி போறதுன்னு தெரியல. எங்க அம்மா எம் பொம்மையெல்லாம் எடுக்க மாட்டேங்குது அதுநால நான் எடுத்துகிட்டேன்.”
மேரி

“இங்கன இருக்குற ஆறு ஏழு வீடு மட்டும் கோயிலு எடம். (அறநிலைத் துறை) அதனால எங்கள மட்டும் காலிப்பன்னல. ஊரையே காலிபன்னி அகதிகளாட்டம் ஏத்துறாங்க. நாங்க இங்க அனாதையா இருக்கோம்.”
ராணி

மழை வெள்ளம் வந்தாலும் நீந்திகினே போயி எங்க தேவைங்கள செஞ்சுப்போம். நேத்துதான் போயி பாத்துனு வந்தே பெரும்பாக்கம் வீட்ட. ரமணா படத்துல வராமெரி அம்மாம்பெரிய ஒயரமாக்குது அது. என்னைக்கி தலையில விழுமோன்னுக்குது.
ஆரோக்கிய மேரி

“எங்க ஆயா காலத்துல பர்மாவுலேருந்து வந்தவங்கதான் இந்த குப்பத்து மக்கள். நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான். எனக்கு இந்த எடத்த விட்டு போக புடிக்கலங்க.”
கன்னியம்மா

“நான் வாடகைக்கி வந்து 22 வருசமாச்சு. எங்களுக்கு வீடு இருக்குன்னு டோக்கனு கொடுத்தாங்க. சொந்த வீடு கெடைச்சது சந்தோசந்தேன். ஆனா என்னால அம்மாம்பெரிய கட்டடத்துல ஏரி ஏறங்க முடியுமா? மிசுனு இருக்குன்றாக ஆனா எத்தன நாளைக்கி ஓடும்.”
அரவிந்த்
“எங்ககிட்ட சாமான கட்றதுக்கு கோணி இல்லைங்க. எல்லாம் அப்படியே அள்ளிப்போட்டதுல பல பொருளு ஒடஞ்சுப்போச்சு. பாத்து ஏத்துங்கன்னு அம்மா சொன்னதால தனி வண்டி புடிச்சு போங்கன்னு திட்றாங்க.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக