புதன், 1 நவம்பர், 2017

கழிவு நீருக்காக கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்த மாநகராட்சி அதிகாரிகள்... பொதுமக்கள் கடும் கண்டனம்

Chinniah Kasi : கழிவு நீரை விடுவதற்காக கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்த அதிகாரிகள்
மாநகராட்சி செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்
அம்பத்தூர், அக். 31-
சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் கலந்து வந்தது.இதனால் சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியில் முற்றிலுமாக மாசு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து கொரட்டூர் ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்க விடக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் அரசுக்கு உத்தரவு வழங்கியது.
இதனால் கொரட்டூர் ஏரிக்கு வந்த கழிவு நீர்க் கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஏரியும் தூர்வாரப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற் பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும், சாலையிலும் மழைநீருடன், கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளும் சாலைகளில் தேங்கி நிற்கிறது.
இதனை அகற்ற வழிதெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திங்களன்று கொரட்டூர் ஏரியின் கரையைஎ ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து கழிவு நீரை கொரட்டூர் ஏரிக்குள் விட்டனர்.உடனடியாக அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் ஜேசிபி மூலம் கரையை மூடினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் செவ்வாய்க் கிழமை காலை மீண்டும் அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், சென்னை மாநகராட்சி கூடுதல் துணை ஆட்சியர் சர்வேஷ்ராஜ் சுப்புராஜ், கோட்டாட்சியர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியின் கரையை உடைத்து மீண்டும் கழிவு நீரைக் கொரட்டூர் ஏரிக்குள் விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும், அருகிலுள்ள டிடிபி காலனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பது வழக்கம்.
ஆனால் அவற்றை முறையாக வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி கழிவு நீரையும், ரசாயனக் கலவையையும் கொரட்டூர் ஏரியில் விடுவதால் ஏரி மாசடைவதுடன், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளின் கிணற்று நீரும் மாசடைகிறது. இந்த ஏரி அந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் வில்லிவாக்கம் பகுதி மக்களுக்கும் குடிநீருக்கு பயன்பட்டு வந்தது. மேலும் இப்படி கழிவு நீர் கலப்பதால் ஒவ் வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கொரட்டூர் ஏரியை சுற்றியுள்ள வீடுகளில் கொசு வடிவிலான பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் வந்து, மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக கொரட்டூர் ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி நிர்வாகம் முறையான மழைநீர் வடிகால் கால்வாயும், கழிவு நீர் கால்வாயும் தனித்தனியாக அமைத்து முறையாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக