ஞாயிறு, 15 அக்டோபர், 2017

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை’ ராகுல்காந்தியை சந்தித்தபின் திருநாவுக்கரசர் (கவலை?)!!

தினத்தந்தி : புதுடெல்லி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதேபோல் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி இல்லை பா.ஜனதாவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. எனவே அரசு எடுக்கும் முடிவு அரசியலமைப்பு சட்டப்படி சரியானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 30 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இதில் தெளிவு கிடைக்கும்;ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே வந்தாலும் அவர்களோடு கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. அ.தி.மு.க. ஊழல் கட்சியாகி விட்டது.
இரட்டை இலை சின்னம் எவ்வளவு நாள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி விரும்பும் வரை நீடிக்கலாம். இரட்டை இலை சின்னமும் மோடி யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ? அவருக்கு தான் கிடைக்கும்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமித்ஷா மகன் விசாரிக்கப்பட வேண்டும். இதில் அமித்ஷா, மோடிக்கும் பங்கு இருக்கிறது. ப.சிதம்பரமும், அவருடைய மகனும் தங்களது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக சொன்னபிறகும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது என்று சொல்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர் மாற்றம் பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அது பெரிதுபடுத்தப்பட்டு விட்டது. ராகுல்காந்தியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. தாங்கள் கைது செய்யப்படக்கூடாது என்ற காரணத்துக்காகவே தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரிகளை சந்திக்கிறார்கள்’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக