திங்கள், 30 அக்டோபர், 2017

அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல் !

இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.
வினவு :அரசு மருத்துவ மனைகள்தான் அடித்தட்டு மக்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கும்கூட ஆபத்பாந்தவனாக இருந்து வருகின்றன. அவற்றின் கட்டமைப்பையும் தரத்தையும் மேம்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிவரும் நிலையில், அதற்கு நேர்எதிராக, அரசு மருத்துவமனைகளைத்  தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மோடி அரசு. மருத்துவக் காப்பீடு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன் போன்ற ஆய்வுகளுக்குக் கட்டணம், கட்டணப் படுக்கைகள் என ஏற்கெனவே தனியார்மயம் அரசு மருத்துவமனைகளில் திணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக, அரசு மருத்துவமனைகளின் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவுகளை அப்போலோ போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனை முதலாளிகளிடம் ஒப்படைப்பதுதான் இத்தனியார்மயத் திட்டத்தின் குறிக்கோள்.
“அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க அரசு தவறிவிட்டதென்றும், இந்த இடைவெளியைத் தனியாரைக் கொண்டு மட்டுமே நிரப்ப முடியும்” என்றும் அறிவிக்கிறது, மோடி அரசின் தேசிய சுகாதாரக் கொள்கை -2017. இதன்படி, நாடெங்கிலுமுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள இருதய நோய், நுரையீரல் நோய் மற்றும் புற்று நோய் ஆகிய மூன்று பிரிவுகளையும், அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கும் நகல் திட்டமொன்றைத் தயாரித்து, அதன் மீது  கருத்துக் கூறும்படி மாநில அரசுகளுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைத்திருக்கிறது, மைய அரசு.
அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தைக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாநில அரசுகளுக்குத் தெரியாமலேயே மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியாரை நுழைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலக வங்கி, இந்தியத் தரகு முதலாளிகள் சங்கமான சி.ஐ.ஐ., நிதி ஆயோக் மற்றும் பா.ஜ.க. ஆளும் சில மாநில அரசுகள் ஆகியவை மட்டுமே சேர்ந்து இத்திட்டத்தைக் கமுக்கமாகத் தயாரித்துவிட்டு, யோக்கியவானைப் போல கருத்துக் கேட்டு அனுப்பியிருக்கின்றன.
பொதுமக்களின், குறிப்பாகச் சொல்லப்போனால் மேற்சொன்ன நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் இந்த பாரதூரமான சீர்திருத்தத்தின் மீது கருத்துக் கூற மாநில அரசுகளுக்குத் தரப்பட்ட கெடு வெறும் இரண்டு வாரம்தான். மோடி அரசு, மாநில அரசுகளை முனிசிபாலிட்டிகளைப் போல நடத்தி வருவதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. மேலும், இத்தனியார்மயத் திட்டம் உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி மேலிருந்து திணிக்கப்படுவதால், மாநில அரசுகள் இத்திட்டத்திற்குத் தலையாட்டுவதைத் தவிர, மறுத்துப் பேசுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது.
இந்த நோய்களுக்குச் சிகிச்சை எடுப்பதற்கு பெருநகர மருத்துவமனைகளை நாடி மக்கள் வர வேண்டியிருக்கும் சிரமத்தைத் தவிர்த்து, இந்த நோய்களுக்கான மூன்றாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சிகிச்சைகளைத் தனியார் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வழங்குவதும், அதன் மூலம் பெருநகர மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதும்தான் நோக்கம் என இந்தத் திட்டம் குறித்து தேனொழுகப் பேசுகிறது, நிதி ஆயோக். ஆனால், அது தேனல்ல, விஷம்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்ட தாய்-சேய் நல மருத்துவமனையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பட்டம் (கோப்புப் படம்)
அப்போலோ போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள், தங்கள் கைக்காசைப் போட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைகளின் வசதியையும் தரத்தையும் மேம்படுத்தி சிகிச்சை அளிப்பார்கள் எனக் கற்பனையாக நினைத்துக் கொள்வதைக்கூட அனுமதிக்கவில்லை நிதி ஆயோக். மாறாக, கார்ப்பரேட் மருத்துவமனை முதலாளிகளுக்கு எந்தவிதமான நட்டமோ, நிதிச்சுமையோ ஏற்படாதவாறு, மாநில அரசுகள் தனியாருக்கு சர்வமானியம் அளிக்கும் தீய நோக்கில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உர மானியம் எப்படி உரக் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதோ, அதுபோல இனிமேல் சுகாதார மானியங்கள் ஐந்து நட்சத்திர கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு வழங்கும் ஏற்பாடுதான் இந்தத் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை பிரிவைத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக 30,000 சதுர அடியும் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவைத் தொடங்குவதற்குக் குறைந்தபட்சமாக 60,000 சதுர அடியும் அந்தந்த மருத்துவமனைக்குள்ளேயே தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். இந்த இட வசதியில் 75 சதவீதத்தைக் கட்டிடமாகவும், மீதியை அடி மனையாகவும் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் தொடங்கி மருந்து வழங்குவது வரை, ஆம்புலன்ஸ் தொடங்கி கழிப்பறை வரை அனைத்து நிலைகளிலும் பற்றாக்குறையும் வசதிக் குறைபாடுகளும் நிலவி வரும் நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ், இரத்த வங்கி, உடல் இயன்முறை சிகிச்சை, மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளைத் தனியாரோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும். தனியாருக்குத் தேவைப்படும் கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தம், தடையில்லா மின்சாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்துதர வேண்டும்.
நிலமும், கட்டிடமும், வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அரசு மருத்துவமனைகளில் நுழைந்துள்ள தனியாருக்கு நோயாளிகளை சப்ளை செய்யும் புரோக்கராகவும் மாநில அரசு செயல்பட வேண்டும் என்கிறது, நிதி ஆயோக். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மைய சுகாதார நிலையங்களில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், தமது நோயாளிகளை மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமென்றால், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நுழைந்திருக்கும் தனியாருக்குப் பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறது, நிதி ஆயோக்கின் நகலறிக்கை.

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி
இம்மூன்று சிகிச்சைப் பிரிவுகளை முப்பது வருடக் குத்தகைக்குத் தனியாரிடம் ஒப்படைக்கப் பரிந்துரைக்கும் நிதி ஆயோக், அப்பிரிவுகளில் நோயாளிகள் இலவசமாக சிகிச்சைப் பெறுவதைத் தடை செய்கிறது. எனினும், தனியாரிடம் ஒப்படைக்கப்படும் சிகிச்சை பிரிவுகளில், அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைந்திருக்கும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனச் சலுகை தருகிறது.
இந்தச் சலுகை இரண்டு விதங்களில் மோசடியானது. ஒன்று, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் வெறும் 12 சதவீதப் பேர்தான் அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 88 சதவீதப் பேரை இலவச மருத்துவ சேவை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது, நிதி ஆயோக். மேலும், இந்த 12 சதவீதப் பேருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனென்றால், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இலவச சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் “சுதந்திரத்தை” மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது, நிதி ஆயோக்.
இரண்டாவது, இலவச சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குரிய கட்டணத்தை அரசு தனியாருக்குத் தாமதமின்றிச் செலுத்திவிட வேண்டும் என்றும், தாமதம் ஏற்படும் சமயங்களில் தனியாருக்கு நட்டமேற்படுவதைத் தவிர்ப்பதற்காக மாநில அரசுகள் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் திட்டம் கூறுகிறது. எனவே, இலவச சிகிச்சை என்பது தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அரசு மறைமுகமாகச் செலுத்தும் மானியமாகும்.
இம்மூன்று சிகிச்சை பிரிவுகளை முப்பது வருட குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்குத் தொழிலை நடத்துவதற்குத் தேவைப்படும் நிதி உதவிகளையும் மாநில அரசு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது, நிதி ஆயோக். சுருக்கமாகச் சொன்னால், நிதி ஆயோக் இந்தத் திட்டத்தின் வழியாக, கூடாரத்திற்குள் ஒட்டகத்தின் மூக்கை நுழைத்துவிட்டிருக்கிறது. ஒட்டகம் கூடாரத்தையே காலிசெய்துவிடும் நாள் வெகுவிரைவில் வந்துவிடும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 1.2 சதவீத நிதிதான் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மற்ற உலக நாடுகளோடு ஒப்பீடும்போது, சுகாதாரத்திற்கு அரசு நிதியை ஒதுக்குவதில் இந்தியா 190-வது இடத்தில் இருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் வாழும் 72 சதவீதப் பேரும், நகர்ப்புறங்களில் வாழும் 79 சதவீதப் பேரும் தமது மருத்துவ தேவைகளுக்குத் தனியாரைத்தான் நம்பியிருக்கின்றனர். இப்படிபட்ட நிலையில், இருப்பதையும் பறிப்பது போல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனியார்மயம் புகுத்தப்படுகிறது.
வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் எனப்படும் இருதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களை வெகுவிரைவாகக் கட்டுப்படுத்த வேண்டும் என உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் உறுதிமொழியை நிறைவேற்றத்தான், இருதய நோய், புற்று நோய், நுரையீரல் நோய் ஆகிய மூன்று சிகிச்சைப் பிரிவுகளைத் தனியாரிடம் ஒப்படைத்துப் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறது, நிதி ஆயோக்.
பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு விற்றபோதும் இது போலத்தான் – கல்வி உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வோம் – பேசினார்கள். அந்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேறியிருக்கிறதா?
இந்திய மக்களிடேயே தொற்றா நோய்கள் எவ்வளவு விரைவாகப் பரவி வருகிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகத்தோடு காசநோய், ஆஸ்துமா, டெங்கு, பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன. காசநோய் பாதிப்பில் உலகின் தலைநகரமாக இந்தியா மாறிவருவதாகக் கூறப்படுகிறது. மருத்துவ சுற்றுலாவின் தலைநகர் எனப் பீற்றிக் கொள்ளப்படும் சென்னைகூட டெங்கு நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோற்றுப்போய் நிற்பதை, டெங்கு மரணங்கள் அம்பலப்படுத்துகின்றன.
தொற்று நோய்கள் பணக்காரர்களைவிட, ஏழைகளைத்தான் அதிகம் பாதிக்கின்றன. அதனாலும், தொற்று நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட தொற்றா நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் துட்டைக் கறக்கும் வழியாக இருப்பதாலும் அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள், தொற்று நோய்களைவிட, தொற்றா நோய்களின் சிகிச்சையில் அக்கறை காட்டி வருகின்றன.  அக்கும்பலின் பணப்பையை நிரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில்தான் இருதய நோய் உள்ளிட்ட மூன்று சிகிச்சைப் பிரிவுகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் சிறு நகர்ப்புறங்களைச் சேர்ந்த அரசு காப்பீட்டின் கீழ் வரும் ஏழை நோயாளிகளை மட்டுமின்றி, வேறு வழியின்றி அரசு மருத்துவமனைகளைத் தஞ்சமடையும் நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் இலாப வேட்டைக்குப் பலியிடத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.
– குப்பன்
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00 Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக