திங்கள், 30 அக்டோபர், 2017

மணல் இறக்குமதி .... உள்ளூர் மணல் மாபியா ஒருபுறம் தடுக்கிறது ,,, மறுபுறம் அதே மணலோடு திருட்டும் மணலும் ....

மின்னம்பலம் : தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் டன் மணல் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவரும் நிலையில், மலேசியாவிலிருந்து எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட விலை மலிவான ஆற்று மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் விற்பனையாளர்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணல் வெளியே எடுத்து செல்லவிமுடியாதபடி முடக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 54 ஆயிரம் டன் அளவிலான மணல் லாரிகளில் ஏற்றப்படாமல் துறைமுக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று ( அக்டோபர் 30) தூத்துக்குடியில் நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்," மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் டன் ஆற்று மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மணல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள மணல் வியாபாரிகள், கள்ள மணலுடன் இறக்குமதி செய்யப்பட்ட மணலையும் விற்பனை செய்யப்போவதாக தகவலும் வெளியாகி உள்ளது. எனவே இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக