ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சீனா கடும் எச்சரிக்கை : தலாய் லாமாவுக்கு உபசாரம் கொடுப்பது சீனாவின் உள் விவகாரத்தில்...

தலாய் லாமா: உலக நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை!
மின்னம்பலம் : உலக நாட்டின் தலைவர்கள் தலாய் லாமாவைச் சந்திப்பது என்பது மிகப்பெரிய குற்றம் எனச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
திபெத்தின் 14ஆவது தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ இருந்து வருகிறார். உலக நாடுகள் பலவற்றாலும் முக்கிய தலைவராக மதிக்கப்படும் இவரைப் பிரிவினைவாதியாக சீனா தொடர்ந்து கூறிவருகிறது. திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பையடுத்து கடந்த 1959ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புகலிடம் வந்து வாழ்கிறார். தலாய் லாமாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவரும் சீனா, அவரை உலகத் தலைவர்கள் சந்திப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சீன மந்திரி ஜாங் ஜிஜோங் நேற்று (அக்.21) செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தலாய் லாமாவை மதத் தலைவர் என சிலர் கூறுவதை ஏற்க முடியாது. தலாய் லாமா வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டவர். மதத்தை மேல் அங்கியாக அணிந்த அரசியல் பிரமுகர். 1959இல் வேறொரு நாட்டுக்குத் தப்பிச்சென்ற தலாய் லாமா, தாய்நாட்டுக்குத் துரோகம் செய்தவர். எந்த நாட்டின் தலைவர்களும் தலாய் லாமாவைச் சந்திப்பது என்பது எங்களின் பார்வையில், சீன மக்களின் உணர்வுகளுக்குச் செய்யும் குற்றம்.
சில நாடுகள், தங்களின் அதிகாரிகள் அலுவல் ரீதியாக அல்லாமல், தனிப்பட்ட முறையில் தலாய் லாமாவைச் சந்திப்பதாகக் கூறுகின்றன. ஆனால், இது சரியல்ல. அனைத்து அதிகாரிகளும் அவர்களின் நாட்டையே பிரிதிபலிக்கின்றனர். எனவே, சீனாவின் இறையாண்மைக்கும் சீனாவுடனான உறவுக்கும் நட்புக்கும் மரியாதை செய்யும்விதமாக அவர்கள் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக