சனி, 21 அக்டோபர், 2017

ஹேமா ருக்மணி ! ராமநாராயணன் மருமகள் ,, தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகி ... கமலா தியேட்டர் சிதம்பரத்தின் மகள் ..



விகடன் - மை.பாரதிராஜா : ‘‘மதுரைலதான் பிறந்து வளர்ந்தேன். கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் ஐயாவோட மகள் ஆனந்தியோட மகள்தான் நான். எங்கப்பா பெரியகருப்பர், பிசினஸ்மேன்...’’ சற்றே கூச்சத்துடன் பேசத் தொடங்குகிறார் ஹேமா ருக்மணி. நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்த இயக்குநர் இராம.நாராயணனின் மருமகள். ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக மேலாளரான முரளியின் மனைவி. ‘‘எனக்கு ஒரு அண்ணன். அவர் என்னைவிட அஞ்சு வயசு மூத்தவர். சென்னைல இப்ப பிசினஸ் பண்றார். எங்க வீட்ல எல்லாமே எங்கம்மாதான். வீட்டோட இன்டீரியர் ஆகட்டும், கார்டனிங் ஆகட்டும்... எல்லாத்துலயும் அவங்க முத்திரை இருக்கும். அந்தளவுக்கு திறமையானவங்க. இந்திரா காந்தி மதுரைக்கு வந்தப்ப அவங்களை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அழைச்சுட்டு போய் சுத்திக் காட்டினது எங்கம்மாதான்.


எங்க ஐயாவுக்கு (தாத்தாவை அப்படித்தான் அழைக்கிறார்) எல்லா அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் பழக்கம். அதனால கலைஞர், எம்ஜிஆர்ல தொடங்கி பிரபலமான சினிமா நடிகர்கள் வரை எல்லாருமே மதுரைக்கு வந்தா எங்க வீட்டுக்கு வராம இருக்க மாட்டாங்க. சிவாஜி அங்கிள் எங்க ஃபேமிலில ஒருத்தர்.

மதுரா கோட்ஸின் விகாஸா ஸ்கூல்லதான் படிச்சேன். ஒரு க்ளாஸ்ல பதினெட்டு பேர்தான் இருப்போம். அந்தளவுக்கு செலக்ட் பண்ணிதான் அட்மிஷன் செய்வாங்க. என் கூட படிச்சவங்க எல்லாம் இன்னிக்கி பெரிய விஐபியா இருக்காங்க. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் லேடி டோக் காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சேன். கல்லூரில நான்தான் பிரசிடென்ட். பெஸ்ட் ஸ்டூடண்ட்னு பெயர் வாங்கினேன்.

அப்புறம் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டில எம்.ஏ ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சேன். பரதம் கத்துக்கிட்டேன். வீணை வாசிப்பேன்...’’ என்று சொல்லும் ஹேமா ருக்மணி, சட்டென்று சிரிக்கிறார். லேசாக நாணம் எட்டிப் பார்க்கிறது. சமாளித்தபடி தொடர்ந்தார். ‘‘படிப்பு முடிஞ்சதும் வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. முரளியோட ஃபேமிலிலேந்து என்னோட ஜாதகம் கேட்டு வந்தாங்க.

‘சினிமா குடும்பமா’னு அப்பாவுக்கு தயக்கம். எங்களுக்காக பிள்ளையார்பட்டி கோயில்ல இராம. நாராயணன் மாமாவும் அத்தையும் காத்திருந்தாங்க. இதை நான் எதிர்பார்க்கலை. திடீர்னு பெண் பார்க்க வந்ததால அண்ணியோட சேலையும் ப்ளவுஸும் வாங்கி மேனேஜ் செய்தாங்க. பிள்ளையார்பட்டில முரளி வீட்டைப் பார்த்ததும் எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. அங்க பிள்ளையார் வாக்கு எழுதற இடம் இருக்கு. அங்க வைச்சு எழுதினா அந்த வாக்கை யாரும் மீறமாட்டாங்க. அப்படியொரு இறை நம்பிக்கை.

அங்கதான் எங்க திருமணம் நிச்சயமாச்சு. பிள்ளையார்பட்டில என் கல்யாணம் முடிவானதுக்கு காரணம் இருக்கு. எப்படி எங்க சிதம்பரம் ஐயா மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காரோ அப்படி பிள்ளையார்பட்டி தக்காரா எங்கப்பா இருந்தார். அதனால பிள்ளையார்பட்டி விநாயகர் எங்க குடும்பத்துல ஒருத்தர்!

நிச்சயம் நடந்தப்ப இராம. நாராயணன் மாமா கலகலப்பா சிரிச்சுப் பேசி எங்களை இயல்புக்கு கொண்டு வந்தார். பொதுவா செட்டி வீட்டுத் திருமணங்கள் திருவிழா மாதிரி நடக்கும். அப்படித்தான் எங்க கல்யாணமும் நடந்தது. அதுவும் நிச்சயமான 21வது நாள்ல. அன்னிக்கிதான் கலைஞர் ஐயாவோட தேதி கிடைச்சது...’’ என்று சொல்லும் ஹேமா, பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிய விரும்பினாராம்.

‘‘ஜர்னலிசம் படிச்சதால அந்த ஆசை இருந்தது. ஆனா, இருபது வருஷங்களுக்கு முன்னாடி பெண்கள் வேலைக்கு போறது எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாத விஷயம் இல்லையா..? அதனால அது நடக்கலை. இல்லைனா உங்களை மாதிரியே நானும் பத்திரிகைல வேலை பார்த்திருப்பேன்...’’ கணவர் முரளியைப் பார்த்துச் சிரித்துவிட்டு தொடர்ந்தார்.

‘‘சில வருஷங்கள்ல ஸ்ருதி பிறந்தா. அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்ப ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ ஹிட்டாகி இருந்தது. மாமாவுக்கு அவ்வளவு சந்தோஷம். எங்க அத்தையைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. அவங்களுக்கு அன்பு காட்ட மட்டும்தான் தெரியும். தங்களோட மக மாதிரியே என்னை மாமாவும் அத்தையும் பார்த்துக்கிட்டாங்க. ஸ்ருதி பிறந்த நாலு வருஷங்கள் கழிச்சு ஷரண் நாராயணன் பிறந்தான். தன்னோட பேத்திக்கும் பேரனுக்கும் எங்க மாமா தினமும் கதை சொல்வார். ஏற்கனவே நாம கேட்ட கதைகள்தான். ஆனா, அதையே மாமா புதுசா சொல்வார். அதனால பசங்களோட சேர்ந்து நானும் கதை கேட்பேன்!

ஒண்ணு தெரியுமா... பையன் ஆஸ்திரேலியன் ஸ்கூல்ல படிக்கிறான். பொண்ணுக்கு சரியா தமிழ் பேச வராது. எங்க அத்தைக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். ஆனாலும் பேரன் பேத்தியோட ஜாலியா பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு விருப்பமானதையும் அவங்க கேட்கறதையும் சமைச்சுத் தர்றாங்க. உறவுகளுக்குள்ளதான் இதுமாதிரி கம்யூனிகேஷன்ஸ் சாத்தியம் இல்லையா? அதனாலதான் எப்பவும் ஃபேமிலிக்கு வேல்யூ தரேன்...’’ என்று சொல்லும் ஹேமா ருக்மணி, மாமா காலம் முதல் வசித்து வரும் வீட்டில்தான் இப்போதும் வாழ்கிறார்.

‘‘முரளியை மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும். பிரேக் ஃபாஸ்ட் முதல் டின்னர் வரை தன் கூடவே அவர் இருக்கணும்னு விரும்புவார். காலைல 8.30க்கு ரெண்டு பேரும் வீட்டை விட்டு கிளம்பினாங்கன்னா நைட் 8.30க்குதான் திரும்புவாங்க. டின்னர் சாப்பிடறப்ப அன்னிக்கி நடந்ததை எங்ககிட்ட மாமா சொல்லுவார். பேசிக்கிட்டே சாப்பிட்டு முடிப்போம். காரைக்குடில தன் சொந்தங்களோட இருக்கிறப்ப மாமா அவ்வளவு சந்தோஷமா இருப்பார். அதே மகிழ்ச்சியை இப்ப முரளிகிட்டயும் பார்க்கறேன். ஒருபோதும் மாமா யாரையும் டிஸ்கரேஜ் செய்ய மாட்டார். எப்பவும் பாசிடிவ்வாதான் பேசுவார்.

எனக்கு மணிரத்னம் படங்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். விரும்பிப் பார்ப்பேன். ஆனா, மாமா அளவுக்கு என்னை ஆச்சர்யப்படுத்தற இயக்குநர் வேற யாருமே இல்லை. ஏதோ ஒரு விஷயம் இருக்கிறதாலதான் ஒரு படம் சக்சஸ் ஆகுது. அந்த விஷயம் என்னனு  இப்ப வரைக்கும் யாருக்குமே புரிபடலை. அதுதான் சினிமாவோட மர்மம். ஆனா, மாமாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு.

யோசிச்சுப் பாருங்க. நூறு படங்கள் வரை டைரக்ட் செய்திருக்கார். ஆனா, எந்தப் படமாவது டிஸ்டிரிபியூட்டர்ஸ் கையை கடிச்சிருக்கா? இல்ல. எவ்வளவு பெரிய சாதனை இது...’’ நெகிழும் ஹேமா, மாமாவின் மரணத்துக்குப் பிறகு முரளி குழப்பத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார். ‘‘மாமாவோட இறப்புக்குப் பிறகு அவரோட ஆசியோட வேற திசைல பயணமாச்சு.

முரளியோட வேலைகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சேன். நானும் முரளியும் அடிக்கடி ஃபாரின் டூர் போவோம். அங்க உள்ள நாடகங்களை தேடித் தேடிப் பார்ப்போம். தமிழ்லயும் அதுமாதிரி செய்தா என்னனு தோணிச்சு. ‘சக்சஸ் ஆகுமா இல்லையானு யோசிக்காத. விரும்பினதை செய்’னு முரளி ஊக்கப்படுத்தினார். எழுத்தாளர் இரா.முருகனோட சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை ‘சில்லு’ நாடகமா அரங்கேற்றினோம்.

நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அமெரிக்காவுல இந்த ப்ளேயை நடத்தினப்ப பெரிய வரவேற்பு கிடைச்சது. இதே தெம்போட கார்த்திக்ராஜாவோட ‘பட்டினத்தில் பூதம்’ இசை நாடகத்தை நடத்தினோம். நாடகங்கள் மூலமா வர்ற தொகையை அப்படியே ஏழை மாணவர்களோட கல்விக்கு கொடுத்துடுவோம். மணிரத்னம் மாதிரி படம் எடுக்கணும்னு நான் விரும்புவேன்.

ஷங்கர் மாதிரி பிரமாண்டமா எடுக்கணும்னு முரளிக்கு ஆசை. இப்ப அட்லீ இயக்கத்துல விஜய் படத்தை தயாரிக்கறோம். அடுத்து சுந்தர்.சி. இயக்கத்துல ரூ.350 கோடில ‘சங்கமித்ரா’வை தயாரிக்கப் போறோம். இதுக்கான வேலைகள் நடந்துகிட்டு இருக்கு. 1976ல ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்’ஸை மாமா ஆரம்பிச்சார். இப்ப அவரோட கனவை நாங்க சர்வதேச அளவுல விரிவு படுத்தறோம். இது முரளியோட விஷன். மாமாவோட ஆசி எங்களை எப்பவும் வழிநடத்தும்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹேமா ருக்மணி.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக