வெள்ளி, 27 அக்டோபர், 2017

தொடரும் பாஜக விடுதலை சிறுத்தைகள் மோதல் ... கரூர் - மயிலாடுதுறை ..

தொடரும் பாஜக-விசிக மோதல்!மின்னம்பலம் : கரூரைத் தொடர்ந்து
மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டியதால், பாஜக-விசிகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பேசினார்.
இதைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு எதிராக தமிழிசை, அவரை கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்று விமர்சித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய திருமாவளவன்,"நான் பாஜகவினை கொள்கை ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்தேன், ஆனால் அவர் தனிநபர் விமர்சனத்தை முன்வைப்பது எதனால் என்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கரூரில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக-விசிக இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.
பாஜகவினர் நடத்திய தாக்குதலை கண்டித்து வரும் 31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டமும் அறிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று ( அக்டோபர் 27) நாகை மாவட்டம் மயிலாடுதுறை சென்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கு எதிராக, அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். இதனால் அங்கு பாஜக-விசிகவினரிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை வேனில் ஏற்றினர். ஆனால் கைதுக்குப் பிறகும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை, பாஜகவினர் கல் வீசி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக