வெள்ளி, 27 அக்டோபர், 2017

சிவசேனா : மோடி அலை ஓய்ந்துவிட்டது ! ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் உள்ளது!

மின்னம்பலம : மோடி அலை
ஓய்ந்துவிட்டதாகவும் ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன் உள்ளதாகவும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனா கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குஜராத் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம், டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சஞ்சய் ராவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திர மோடியின் அலை இருந்தது. ஆனால் இப்போது அது மங்கிவிட்டதாகத் தெரிகிறது என சொன்ன அவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வழிநடத்திச் செல்லும் தகுதி உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். ராகுல் காந்தியை பப்பு (குழந்தை) என பாஜகவினர் அழைப்பது தொடர்பாக ராவுத் பேசும்போது, “அவரை அவ்வாறு அழைப்பது தவறு. நாட்டின் மிகப் பெரிய அரசியல் சக்தி என்றால் அது மக்கள்தான். அவர்களால் யாரையும் பப்புவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

பாஜவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான சிவ சேனா கடந்த சில நாட்களாகவே அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்களை வைத்துவருகிறது. மகாராஷ்டிராவில் பாஜவுடன் சிவ சேனா கூட்டணியில் உள்ளபோதிலும், குஜராத் தேர்தலில் பாஜவுக்கு சிவ சேனா தனது ஆதரவை வழங்கவில்லை. பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் ஹர்திக் பட்டேலுக்கு அவர்கள் ஆதரவை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக