வியாழன், 12 அக்டோபர், 2017

இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் கேரளா அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம்! வீரமணி கோரிக்கை!


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!
மின்னம்பலம் :இந்தியா முழுவதும் ஒரே சட்டம் என்பதால், கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகமக் கோயிலின் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசும் அதனைப் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள அரசைப் பாராட்டியுள்ள அவர் தமிழக அரசுக்கு இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்த்துள்ளார்.

“இந்திய வரலாற்றில் ஆகமக் கோவில்களில் முதல் முறையாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த யேடு கிருஷ்ணன் (22), திருவல்லா அருகில் உள்ள சிவன் கோயிலில் அர்ச்சகராக நேற்று பொறுப்பேற்றார். தன் குரு அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்ற பின் கோயில் தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்தார். யேடு கிருஷ்ணன் சமஸ்கிருத பாடத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்துவருகிறார். அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட 36 பேரில யேடு கிருஷ்ணன் உட்பட ஆறு பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 90 ஆண்டுகளுக்கு முன் இதே கேரளத்தில் தந்தை பெரியார் குடும்பத்துடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடங்கி நடத்தி, வெஞ்சிறையேகி, போராட்டத்தினை வெற்றிகரமாக்கி வரலாற்றுச் சிகரத்தில் வைக்கம் வீரர் என்ற புகழுடன் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறார்” என்று வீரமணி கூறியிருக்கிறார்,
கோயில் கருவறைக்குள் பின்பற்றப்படும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட்டத்தைத் தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்து அந்தக் களத்தில் நின்றபடியே இறுதி மூச்சைத் துறந்தார் என்று கூறும் வீரமணி, தந்தை பெரியார் விட்ட பணியை நாங்கள் தொடர்கிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் போராட்டத்தின் வெற்றி நம்பிக்கை முனையை கேரளம் தந்துள்ளது. இதற்காக கேரளாவின் கம்யூனிஸ்டுக் கட்சியையும், தேவஸ்வம் வாரியத்தையும் பாராட்டுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ்நாடு அரசும் இந்து அறநிலையத் துறையும் தமிழ் மண்ணிலேயும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்டோரை அர்ச்சகர் பணியில் நியமித்தால் இந்த அரசுக்கு நற்பெயர் கிட்டக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான். கேரளாவுக்குப் பொருந்தக்கூடியது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் அல்லவா? எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்” என்றும் தனது அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக