ஞாயிறு, 29 அக்டோபர், 2017

தமிழ் சினிமாவின் ‘ராக்கெட்’ வட்டி கொடுமை!.. வெத்து பேப்பர்ல தான் கையெழுத்து வாங்குறாங்க

மின்னம்பலம் -கபீஷ் பாலகிருஷ்ணன்: ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினார் இலங்கை வேந்தன்’ என்ற கம்பனின் வரிகள் எக்காலத்துக்கும் சேர்த்து எழுதப்பட்டிருப்பது, இன்று கந்து வட்டிக்கு கடன்பட்டவர்கள் அனைவரும் பெரும் கலக்கத்துடன் நிற்பதைப் பார்க்கும்போது தெரிகிறது. அவ்வப்போது ஊடகங்களில் ஒரு செய்தியாக மட்டும் கடந்துபோன கந்துவட்டி பிரச்னை தற்போது பிரதான செய்தியாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
கந்துவட்டி பிரச்னை காரணமாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் குடும்பமே தீக்கிரையானது அனைவரையும் அதிர்வலைக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பலரின் நிலை கடந்த ஒருவார காலமாக ஊடகங்களின் செய்தியாகி வரும் நிலையில், இப்படி கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் சாமானியர்கள் மட்டும்தானா என்று பார்த்தால், அதற்கு உடனே வரும் பதில் இல்லை என்பதுதான். அப்படியென்றால் மேலும் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாவது யார் என்ற கேள்வி முன்வைக்கப்படும்போது பெரும்பாலான கைகள் திரைத்துறையைக் சுட்டிக்காட்டுகின்றன.

கோடிகள் புரளும் திரைத்துறையில் கந்துவட்டி பிரச்னையா என்று பலரும் எண்ணக்கூடும். ஆனால், இங்கு கந்துவட்டி பிரச்னையைக் கூறும் படம் எடுக்கவே கந்துவட்டிக்குப் பணம் வாங்க வேண்டிய நிலையில்தான் தயாரிப்பாளர்கள் உள்ளனர். சிறு, குறு தொழில் செய்பவர்கள் முதல் பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் செய்பவர்கள் வரை ஏதாவது ஒரு தருணத்தில் பொருளாதார ரீதியாக பிறரைச் சார்ந்திருப்பது வழக்கமாக நிகழும் ஒன்று. இந்த வகையில் திரைத்துறையைச் சார்ந்தமட்டில் பெரும்பாலும் பைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகளைச் சார்ந்து இயங்குகிறது.
வாங்கிய கடனை திருப்பச் செலுத்த முடியாமல் திரைத்துறை சார்ந்தவர்கள் பட்ட இன்னல்களைப் படமாக்கினாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று சொல்லும் அளவுக்குப் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஆனால், அவை பெரும்பாலும் பொதுவெளிக்கு வராமலேயே மறைக்கப்பட்டு விடுகிறது என்று திரைத்துறை சார்ந்த பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கமல், ரஜினி ஆகியோரின் திரைப் பயணத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நாயகன், தளபதி படங்களை தயாரித்த ஜி.வெங்கடேஷ்வரன் (அனைவராலும் ஜிவி என்று அழைக்கப்படும் இவர்) பாபா, ஆளவந்தான் படத்தின் சென்னைக்கான விநியோக உரிமை பெற்று பெரும் நஷ்டமடைந்தார். ஒருகட்டத்தில் ஸ்பீட் வட்டிக்கு தான் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, கடன் கொடுத்தவர்களிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக 2003ஆம் ஆண்டு மே மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்பு செழியன் பெயர் அடிபட்டதை இந்து நாளிதழ் செய்தியாக்கியிருந்தது. ஆனால், அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அன்பு செழியன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அஜித் நடப்பில் 2004 ம் ஆண்டு வெளியான ஜனா படத்தை தயாரித்த காஜா மொய்தீன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை முயற்சி செய்தது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனா படத்தை எடுத்து முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதால் அதற்காக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. படம் காலதாமதம் ஆனதற்கு அஜித் தான் காரணம் என்று காஜா மொய்தீன் கூறியதாக அப்போது பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்துவந்த இவர் பாதியிலேயே 7th சேனல் கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் படத்தின் உரிமையைக் கொடுத்துவிட்டு திரைத்துறையை விட்டு வெளியேறியவர், அதன் பிறகு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
இவரைப்போன்றே, தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தை தயாரித்த எஸ்.கே.கிருஷ்ணகாந்த் அதிக வட்டிக்குப் பணம் வங்கி திரும்பச் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளார். இவருடைய இன்றைய நிலை குறித்து கோடம்பாக்க வட்டாரத்தில் கேட்டபோது முதலாளியாக வலம் வந்த சினிமா உலகில் தற்போது ஒரு தொழிலாளியாக பணியாற்றிவருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இப்படிக் கடன் பிரச்னையில் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையை நம்பி வாழும் துணை நடிகர், நடிகைகளும் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. தமிழ்த் திரைப்படத் துணை நடிகை தா.கௌரி என்ற சிந்து ரூ.4 லட்சத்தை, 20% கந்துவட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். ஆனால், பணத்தை உரியநேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாததால் பணம் கொடுத்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றார். சமீபத்தில் சின்னத்திரையில் துணை நடிகை ஆனந்தி, தனது தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய ரூ.5 லட்சத்துக்கு ரூ.1,80,000 லட்சத்தை வட்டியாக செலுத்தியதோடு மீதி அசல் மற்றும் வட்டி தொகைக்காக வீட்டை எழுதிக் கொடுத்துள்ளார். அதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்தார்.

இப்படி திரைத்துறை சார்ந்த கடன் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருக்க சமீபத்தில் வெளியான தரமணி படத்தை தயாரித்த ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கடன் பிரச்னையில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, அதன் பின்னரே படம் வெளியானது.
இந்த நிலையில், திரைத்துறையில் உள்ள பொருளாதார சிக்கல் குறித்து ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், இன்றைக்கு சாதாரண சின்ன கடை வைக்க வேண்டுமானால்கூட அதற்கு லோன் கொடுக்க ஆயிரம் வசதி இருக்கு. ஆனா, இவ்வளவு பெரிய தொழிலுக்கு லோன் கொடுக்க வசதி இல்லை. இது எங்களுக்கு நெகட்டிவ் புரொஃபைல்னு போட்டிருக்கிறார்கள். அதனால லோன் கிடையாது என்று நிதி நிறுவனங்கள் தெரிவிப்பதாக கூறியவரிடம் அதிக வட்டிக்குப் பணம் பெறுவது ஏன் என்று கேட்டபோது, “பேங்க் போய் இந்த மாதிரி படம் எடுக்க பணம் வேண்டுமென்று கேக்குறேன். பேங்க்ல கொடுக்க மாட்டேங்கிறாங்க. அப்ப நாங்க யார்கிட்ட வாங்குவோம். பிரைவேட்ல தான் வாங்குவோம். பிரைவேட்ல வாங்கும்போது அவன் என்ன பண்றான் தெரியுமா? எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து சினிமால இருந்த மாதிரி, இப்ப வரைக்கும் வெத்து பேப்பர்ல தான் கையெழுத்து வாங்குறாங்க. இதுல மாற்றுக்கருத்து கிடையாது. நாளைக்கு நான் பணம் கொடுக்காததால என் சொத்து எதையாவது கைப்பற்றணும்னா, அன்னிக்கு என்கிட்ட டிக்லரேஷன் வாங்க முடியாதேன்னு இப்பவே கையெழுத்து வாங்கி வெச்சிக்குறான்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “நான் பணம் கொடுக்கலைன்னா அப்ப இந்த வெத்து காகிதத்துல தேவையானதை எழுதி கதையை முடிச்சிடுவாங்க. எங்களுக்கு வேற வழியே இல்லை. இது எனக்கு மட்டும் இல்லை. உச்ச நடிகர் முதல் சினிமாக்காரங்க எல்லாருக்குமே ஒண்ணுதான்” என்று கூறினார்.
“பணம் கடனாகக் கொடுக்கும் அனைவருமே இப்படி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார்களா?” என்று கேட்டதற்கு, “இந்த மாதிரி வட்டிக்குப் பணம் கொடுக்குறவங்கள்ல 90 சதவிகிதம் பேர் உண்மையானவங்களாதான் இருக்காங்க. சொன்னமாதிரியே வட்டியை வாங்கிக்கிட்டு அமைதியா இருப்பாங்க. லீஸ் தேதி வரைக்கும் கொடுக்கலைன்னாதான் அவங்க லீகலா மூவ் பண்ணுவாங்க. ஆனால், சிலர் தான் முதன்முறை சரியா இருக்காங்க. அப்பறம் நம்ம எப்படி? இவன் கிட்ட என்ன இருக்கு? இதெல்லாம் ஸ்கேன் பண்ணிட்டு இரண்டாவது முறை வேலையைக் காட்றாங்க. நான் உங்ககிட்ட நாலு வட்டி மூணு வட்டிக்கெல்லாம் பேசல, பத்து நாளுக்கு பத்து வட்டி பேசினேன்னு சொல்லிடுறாங்க. நான் ஸ்பீடு வட்டிக்கோ, கந்துவட்டிக்கோ வரலன்னு சொன்னா, அதுதான் வட்டி வேற வழி இல்லைன்னு சொல்றாங்க” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இங்கு சில கருத்துகளை உள்ளார்ந்து பார்க்கும்போது, திரைத்துறையைச் சார்ந்த பெரும்பாலானவர்கள் கடன் பிரச்னையில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதீத ஆசையே. முன்னணி நடிகர்கள், இயக்குநரின் கால்ஷீட் கிடைத்துவிட்டாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் தன் வரம்பையும் மீறி அதிக முதலீடு செய்வதில் காட்டும் ஆர்வத்தை மக்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றவாறு படம் எடுப்பதில் காட்டுவதில்லை. இதனால் படம் தோல்வியடைவதோடு, பொருளாதார ரீதியிலும் நஷ்டத்தைச் சந்தித்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக