ஞாயிறு, 15 அக்டோபர், 2017

கேரளா இடைதேர்தலில் காங்கிரஸ் வெற்றி ... வெங்கரை சட்டசபை இடைதேர்தலில் ஆளும் இடதுசாரிகள் தோல்வி!

maalaimalar : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வேங்கரை சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குஞ்சாலிக்குட்டி. காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இவர் வெற்றி பெற்று இருந்தார். இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி. ஆனதால்  எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கு கடந்த 11ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த முறையும் அந்த கட்சிக்கே காங்கிரஸ் கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டது. முஸ்லிம்லீக் சார்பில் கே.என்.ஏ.காதர் போட்டியிட்டார். ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தபஷீர், பாரதீய ஜனதா சார்பில் ஜனசந்திரன் உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர்.
இன்று காலை ஓட்டு எண்ணியபோது முதல் சுற்றில் காங்கிரஸ் கூட்டணியின் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ.காதர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அவர் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2-வது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பஷீரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நஷீர் 3-வது இடத்திலும் இருந்தனர். பாரதீயஜனதா வேட்பாளர் 4-வது இடத்தில் இருந்தார். ஓட்டுகள் விவரம் வருமாறு:-

கே.என்.ஏ.காதர் (முஸ்லிம் லீக்) - 65,227. 
பி.பி.பஷீர் (மார்க். கம்யூ)  - 41,917.
நசீர் (எஸ்.டி.பி.ஐ.) - 8,648.
ஜனச்சந்திரன் (பாரதீய ஜனதா) - 5,728.

 கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த இடைதேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது அந்த கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக கருதப்படுகிறது.சமீபத்தில் சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது கட்சியினர் மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவித்திருந்தார். ஆனாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை இந்த தேர்தலை குறிவைத்து சமீபத்தில் பாரதீயஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் கேரளாவில் மக்கள் பாதயாத்திரை நடத்தப்பட்டது. ஆனால் கட்சிக்கு கைகொடுக்க வில்லை. இந்த தேர்தலில் பாரதீயஜனதா 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக