ஞாயிறு, 1 அக்டோபர், 2017

விட்ட இடத்தை பிடிக்க போராடும் வடிவேலு!

விட்ட இடத்தை பிடிக்க போராடும் வடிவேலு!
மின்னம்பலம் :தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு. சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் கத்தி சண்டை படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி தந்தார். இதை தொடர்ந்து 'சிவலிங்கா' படத்தில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் தற்போது அவர், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன், வடிவேலு கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடியில் கலக்கிய அந்த படம் வசூல் ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸிலும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை அள்ளியது.

ஆனால் அதனை தொடர்ந்து வடிவேலு ஹீரோவாக நடித்த `இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி' போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாமல் தோல்வியைத் தழுவியது. இதேபோன்று சிம்பு தேவன் சினிமா வாழ்க்கையிலும் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தைத் தொடர்து அவர் இயக்கிய `அறை எண் 305-ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி' போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 1, 2015) விஜய், ஹன்சிகா, ஸ்ரீ தேவி, ஸ்ருதி ஹாசன் என பிரபலங்களை வைத்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் புலி. காமெடி மற்றும் ஃபேண்டஸி கலந்த படமாக எடுக்கப்பட்ட இந்த படம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. இப்படத்தின் பல காட்சிகளில் வடிவேலு நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; அவருக்கு பொருந்துவது போன்ற காட்சி அமைப்புகள் இடம்பெற்றிருந்தது என்று விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் இணைந்துள்ளன சிம்புதேவன்-வடிவேலு கூட்டணி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் லைகா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
பில்லா 2 படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பார்வதி ஓமனக்குட்டன். ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷாவின் முன்னாள் உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.தேசிய விருது பெற்ற எடிட்டர் விவேக் ஹர்ஷன், ரஜினியின் 2.0 படத்தின் கலை இயக்குநர் டி.முத்துராஜ் ஆகியோர் இப்படத்தில் இணைகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆர்.கே. நடிக்கும் 'நீயும் நானும் நடுவுல பேயும்' என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. 'தண்ணில கண்டம்' படத்தை இயக்கிய சக்திவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஆர்.கே - வடிவேலு கூட்டணியில் வெளியான 'அழகர் மலை' படத்தின் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோன்று இப்படத்திலும் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக