வியாழன், 26 அக்டோபர், 2017

மாணவர் தற்கொலை ! கவின் கலை கல்லூரி ... துறைத்தலைவர் காரணம் என்று கடிதம்!

மாணவர் தற்கொலை: துறைத் தலைவர் காரணமா?
மின்னம்பலம் : சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு நீதி கேட்டு சக மாணவர்களும் இன்று (அக்டோபர் 26) போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் சிலை வடிவமைப்பு, சுடுமண் சிற்பம் உள்ளிட்ட ஆறு துறைகளில் கல்வி வழங்கப்படுகிறது. இந்தக் கல்லூரியில் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் பார்த்திபன் என்பவரின் மகன் பிரகாஷ் (24) சுடுமண் சிற்பத் துறையில் நான்காம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
விடுப்புக்காகச் சொந்த ஊருக்குச் சென்றிருந்த பிரகாஷ் நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனது மரணத்துக்குத் துறைத் தலைவர் மட்டுமே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

இதையடுத்து, கல்லூரி முதல்வர் மீதும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரகாஷைச் சில சமயங்களில் மத ரீதியாகத் தவறாகப் பேசியதுடன், மனநிலை சரியில்லாதவன் என்றும் துறைத் தலைவர் பேசியிருக்கிறார் என்று மாணவர்கள் சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறும் மாணவர்கள், தங்கள் படைப்பாற்றல்களைச் சில பேராசிரியர்கள் நிராகரிப்பதாகவும், அவர்கள் கூறுவதை மட்டும் செய்யும்படி வற்புறுத்துவதாகவும் கூறுகின்றனர். கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் புதிய பாடத்திட்டங்களை நடத்தாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
பிரகாஷ் தற்கொலை குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக