வியாழன், 19 அக்டோபர், 2017

நீட் தேர்வு ,, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை .. தெலுங்கானா, ஆந்திரா மாணவர்கள் மன உளைச்சலால்...

JEYAM தமிழன்:   இழுத்து மூடுங்கடா இதுபோன்ற கோச்சிங் சென்டர்களை ... தூக்கி எறியுங்கடா நுழைவு தேர்வுகளை ... 9 ஆம் வகுப்பில் இருந்தே , விருப்ப பாடத்தை தேர்வு செய்ய வையுங்கள்... கல்வியை மாநில திட்டத்துக்கு கொண்டு வாருங்கள்...
 இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாநில சுய ஆட்சி மிக அவசியம்... கல்வி மாநில பட்டியலில் வருதல் மிக மிக அவசியம்... மத்தியில் அதிகாரத்தை குவிப்பது மிகப்பெரிய கேடாய் முடியும்....
தினமலர் : தெலுங்கானா" ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால், மன உளைச்சல் ஏற்பட்டு, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஐஐடி, மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், மற்ற மாணவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், பல ஆயிரம் மாணவர்கள், நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், பெற்றோருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்ற சந்தேகத்திலும், வாழ்க்கையை முடித்து கொள்கின்றனர்.


நெருக்கடி:

உயர்கல்விக்காக பல தனியார் நுழைவு தேர்வு மையங்கள், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களின் பெருமைக்காகவும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்த சம்யுக்தா என்ற மாணவி, டாக்டர் படிக்க வேண்டும் என்பதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் நுழைவு தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறி தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் கடந்த 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. பல மாணவர்கள், படிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.மாணவர்களின் தற்கொலை பலருக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில், மற்ற மாணவர்கள் மத்தியில் ஒரு மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.கடந்த மாதம் 17 வயது மாணவர் ஒருவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், நான் கல்லூரியில் நன்றாக படிக்க முடியாது. ரோட்டில் தான் அலைய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை:

மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளன.முதலாவதாக சந்திரபாபு நாயுடு, பல கல்லூரி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, 8 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது. ஆசிரியர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. தாக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை வழிநடத்த பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அறிவுரை

குழந்தைகள் நல ஆர்வலர் கூறுகையில், மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு மனரீதியாகவம், உடல் ரீதியாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர துன்புறுத்தக்கூடாது. சில நிறுவனங்களை மூடினால், மற்றவர்கள் விழிப்படைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மட்டும் குற்றம்சாட்டாமல், பெற்றோரையும் மீதும் குறை சொல்ல வேண்டும் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக