திங்கள், 2 அக்டோபர், 2017

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி!

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி!
மின்னம்பலம் :அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள மேண்டலே பே விடுதி அருகில் உள்ள மைதானத்தில் இன்று(அக்.2) இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிந்தது. இதனைக் கண்டுகளிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார். எங்கிருந்து சுடப்படுகிறது என்பதை அறியாத மக்கள் அங்குமிங்கும் ஓடினார். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது 64 வயதான ஸ்டீபன் பேட்டாக் எனவும் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாஸ் வேகாஸ் நகர் போலீஸார் கூறியதாவது, மேண்டலே பே விடுதியின் 32வது மாடியில் இருந்து குற்றவாளி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அறையில் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஸ்டீபன் பேட்டாக்கின் பெண் தோழியான மருலோ டான்லி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்க வரலாற்றில் சமீப காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை இது என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக